Thursday 16 January 2014

தாய் எனும் கோவில் (6)

என் அம்மா - பகுதி 6
 

என்னடா இவன் 1998 வரை மன சங்கடத்தில் இருந்ததாக சொல்கிறான், அதன் பிறகு எல்லாம் சரியாகி  விட்டது போலும் என நீங்கள் நினைத்தால் மன்னிக்கவும் அப்படி நிகழவில்லை. இது போன்ற சங்கடங்கள் எனக்குப் பழகிப் போய்விட்டது. மேலும் கை மீறிப் போன ஒன்றைப் பற்றி கவலைப் பட்டு ஒன்றும் ஆகப் போவதில்லை என்ற ஒரு எண்ண ஓட்டம் எனக்கு உண்டானது.

மேலும் 2001இல் எனக்கு ஏற்பட்ட ஒரு சிக்கல் நல்லவர் கெட்டவர் யார் என்பதை எனக்கு தோலுரித்துக் காட்டியது. அந்த வேளையிலும் என் தாய் ஒருவரே எனக்கு ஆதரவாகவும் பக்க பலமாகவும் இருந்தார். என்  தாயின் ஆசியால் நான் எந்த பாதிப்பும் இல்லாமல் புடம் போடப்பட்டு வெளி வந்தேன். இந்த நிகழ்ச்சி எனது தொழில் முறையில் பெரிய ஒரு முடிவெடுக்க உதவியது. அந்த நேரத்தில் எனக்கு வெளிநாட்டில் வேலைக்கு ஒரு சந்தர்ப்பம் அமைந்தது. ஆனாலும் அதைப் புறக்கணித்து நான் எடுத்த முடிவில் திடமாய் இருந்தேன்.

2004இல் எங்கள் வங்கியின் மும்பை தலைமை காரியாலயத்தில் தகவல் பாதுகாப்பு துறையில் ஒரு வாய்ப்பு வந்தது. அம்மாவிற்கு தொலை பேசியில் நான் மும்பை செல்லப் போவதை தெரிவித்துவிட்டு அங்கு சென்று பொறுப்பு ஏற்றுக் கொள்ள ஒரு நல்ல நாள் பார்த்துக்  கூறச் சொன்னேன். அம்மா மும்பை போவதற்கு முன்பு ஒருமுறை ஊருக்கு வந்து போக முடியுமா என்று கேட்டார். அம்மா சொல்லி எப்போது நான் தட்டியிருக்கிறேன்.  சென்று அம்மாவை பார்த்துவிட்டு அவரது ஆசியையும் பெற்று வந்தேன்.

எனது இந்த முடிவு என் வாழ்க்கையில் ஒரு மிகப் பெரிய திருப்பு முனையாய்  அமைந்தது. எங்கள் வங்கியில் ஏன் ஒட்டு மொத்த இந்திய வங்கியியல் துறையிலேயே  நாங்கள் ஒரு புதிய மைல் கல்லை நிறுவினோம். நான் மும்பை சென்ற சிறிது காலத்திலேயே எங்கள் கிராமத்து வீடு மற்றும் நில புலன்கள் விற்கப் பட்டு எனது பெற்றோர் என் அண்ணாவுடன் சென்று விட்டனர்.  இந்த விஷயம் கேள்விப் பட்டவுடன், இனி எங்கள் கிராமத்து வீடு எங்களது இல்லை என்ற நிதர்சனத்தை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. நான் பிறந்து, தவழ்ந்து, வளர்ந்த வீடு. வீட்டின் ஒவ்வொரு மூலையும் எனக்கு பரிச்சயம்.
 
வாசல் திண்ணை எனக்கு நெஞ்சில் பட்டாசு வெடித்த கதையையும், வாசல் திண்ணையில் இருந்த சிறிய அறை எங்கள் ரஜினி ரசிகர் மன்றம் ஆன கதையையும், வீட்டு முற்றத்தில் நாங்கள் பல்லாங்குழி, தாயம், ஆடுபுலி ஆட்டம், பரம பதம் ஆடிய கதையும், குளிக்கும் இடத்தில் நான் கைநிறைய சோப்பை குழைத்து அதை ஊதி பலூன் விட்ட கதையும், கொல்லை  ரேழியில் நாங்கள் சுள்ளி, சுப்பி, பன்னாடை போன்றவை கொளுத்தி வெந்நீர் வைத்த கதையும், மாட்டுக் கொட்டகையில் நாங்கள் மாட்டுப்பொங்கல் கொண்டாடிய கதையும், கொல்லை கிணற்றடியில்  மழைக் காலத்தில் நிரம்பி வழிந்த கிணற்றில் நாங்கள் நீர் அள்ளி குளித்த கதையும், கிணற்றுக்கு அருகில் இருந்த நாரத்தை மரத்தில் இருந்து புளிக்க புளிக்க கொளஞ்சிக்காய் பறித்து தின்ற கதையும், கொள்ளை புளிய மரத்தில் கிளையில் அமர்ந்து படித்த கதையும், புளியம் பிஞ்சு, புளியம் பூ, புளியம் பழம்  மற்றும் செங்காய் களை தின்று நாக்கு புண் ஆன கதையும், வைக்கோல் போரில் சரிந்து விளையாடிய கதையும், மூங்கில் தோட்டத்தில் மாடு மேய்க்கும் பொழுது விளையாட நல்ல தடிமனான கவை கம்பு சீவிய கதையும், கொல்லை வாய்க்காலில் ஆடிப் பெருக்கு கொண்டாடிய கதையும், மூங்கில் கொத்தில் 10 அடி நீளத்திற்கு நாகம் பார்த்த கதையும், மேலண்ட கொல்லையில் வாதாம் காய் மற்றும் எலந்தக்காய் பறித்த கதையும் எத்தனை காலம் ஆனாலும் மறக்க முடியுமா?

கிட்டத்தட்ட ஒரு வாரம் எனக்கு உணவு உண்ண பிடிக்கவேயில்லை. வீட்டிலும் சரி எனது அலுவலக நண்பர்களிடமும் சரி புலம்பித் தள்ளி விட்டேன். அதன் பிறகு ஒரிரு முறை எங்கள் கிராமத்தைத் தாண்டிச்  செல்ல நேர்ந்த பொழுதும் எனக்கு ஊருக்குள் செல்ல மனது ஒப்ப வில்லை. வீடு விற்க பெரியவர்கள் எல்லாம் முடிவு செய்த செய்தியே எனக்கு மிக மிகத் தாமதமாகத்தான் தெரியும். மேலும் அப்போது அந்த வீட்டை வாங்கக் கூடிய பொருளாதார வசதி என்னிடம் இல்லாமல் போனது எனது துரதிருஷ்டம்.
 
மற்றவர்கள் நினைத்துக் கொண்டிருப்பது போல எனக்கும் என் தாய்க்கும் இடைவெளி இருந்ததே இல்லை. ஒருவர் மனதில் ஒருவர் நிச்சயமாக இருந்தோம். என் மனதில் என்  தாய் என் உயிர் இருக்கும் வரை குடியிருப்பார். இதை இனி யாரால் தடுக்க முடியும்? அன்பை மட்டும் காசு பணத்தால் பெற முடியாது. அது ஆத்மார்த்தமாக உள்ளத்தில் இருந்து வர வேண்டும்.

மீண்டும் ஒருமுறை நான் எனது தாய்க்கு மகனாக பிறக்க வேண்டும் என்று நினைத்தாலும் அது சாத்தியமில்லை. ஏனென்றால் என் தாய் மறு பிறப்பற்ற இறை நிலையை அடைந்து விட்டார். அவர் உயிர் பிரிந்த கடைசி தருணங்களில் நிகழ்ந்த நிகழ்வுகள் இதைத் தான் காட்டுகின்றன.

அவ்வப்பொழுது நடக்கும் குடும்ப விசேஷங்களில் அம்மாவை சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும். என்னை பார்த்தவுடன் அம்மா வாஞ்சையோடு வந்தது என்னை கட்டிக் கொள்வார். அம்மாவின் அந்த அணைப்பில் ஆயிரம் பொருள் பொதிந்து இருக்கும்.  இடையிடையே பற்பல நிகழ்வுகள் நடந்தேறின. என் தாய்க்கும் அவற்றிற்கும் சம்மந்தம் இல்லை என்பதனால் நான் அவற்றை பற்றி கூற விரும்பாதது மட்டுமன்றி  அவற்றை மறக்கவே விரும்புகிறேன் 

2011 - மே 30 அன்று காலை மும்பையில் சிறிது தாமதமாக அலுவலகத்திற்கு கிளம்பி கொண்டிருந்தேன். எனது சகோதரியின் கணவரிடம் இருந்து எனக்கு போன் வந்தது. எப்போதும் போல் சாதாரணமாக கூப்பிடுகிறார் என்று நினைத்து நான் அழைப்பை எடுக்க எனக்கு தலையில் இடி விழுந்தது போன்ற செய்தியை தெரிவித்தார். அன்று காலை எனது தாயார் உயிர் நீத்தார் என்ற பேரிடிதான் அது. என்னால் நம்பவே முடியவில்லை. ஒரு வாரம் முன்பு தான் அலுவலக வேலையாக சென்னை வந்த நான் எனது மூத்த சகோதரியின் வீட்டில் எனது தாயாரைப் பார்த்தேன். என் தாயின் கையால் காப்பி சாப்பிடும் பாக்கியம் கிடைத்தது. அது தான் எனக்கு கடைசி சந்தர்ப்பம் என நான் கனவிலும் நினைக்க வில்லை. அம்மாவின் உடல் நிலை மூப்பின் காரணமாக தளர்ந்து இருந்ததே தவிர அம்மா எங்களை விட்டு நிரந்தரமாக பிரியக்கூடிய எந்த  அறிகுறியும் எனக்கு அப்போது தோன்றவில்லை.

அடித்துப்  பிடித்து குடும்பத்துடன் விமானம் பிடித்து சென்னை வந்து சேர்ந்தோம்.
 
நன்றாய் இருந்த அம்மாவிற்கு என்னதான்  நேர்ந்தது?
 
சிறிது ஆசுவாசத்திற்கு பிறகு பேசுவோம்...