Friday 24 January 2014

நாம் மறந்தவை (2) - மஞ்சப்பை

மஞ்சப்பை 

 
மஞ்சப்பை  பற்றி சொல்ல வேண்டும் என்ற ஒரு ஆவல். இது இன்றைய தலைமுறைக்கு தெரியாத அல்லது தெரிவிக்கப்படாத ஒரு செய்தி. 1970-80 களில் துணிக்  கடைகள் மற்றும் வேறு பெரிய கடைகளில் பொருட்கள் வாங்கும் பொழுது இலவசமாக ஒரு மஞ்சப்பை தரப்படும். மஞ்சள்  மருத்துவ குணம் நிறைந்த ஒன்று, நல்ல கிருமி நாசினி என மஞ்சளுக்கு பல மகிமைகள் இருந்தாலும் மஞ்சள் என்பது மங்களகரம் என்று நம்மால் நம்பப்  படுகிறது. அதனால் தான் எப்போதும் புது துணி உடுத்தும் முன் மஞ்சள் தடவி உடுத்துகிறோம்.  மேலும் மஞ்சள் நிறம்  தெரியக்  கூடியது.மஞ்சள் நிறத்தில் பை செய்து அதில் அந்த கடையின் பெயர் மற்றும் முகவரி அச்சடிக்கப் பட்டிருக்கும். இலவசம் தந்தது போலும் ஆனது அதே சமயம் கடைக்கு விளம்பரம் செய்தது போலும் ஆகிவிடும்.
 
நான் எங்கள் கிராமத்தில் நடுநிலைப் பள்ளி (middle school) படித்த காலத்தில், மயிலாடுதுறை கொழும்பு ஸ்டோர் கொடுத்த மஞ்சள்   பையில் தான் slate மற்றும் பாட புத்தகங்கள் எடுத்து செல்வேன்.
 
அப்போதெல்லாம் ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரை பாடம் எழுத நோட்டுப் புத்தகம்  கிடையாது.வெறும் slate தான், அதுவும் கல் slate. கடப்பா கல் என்று இப்போது சமையல் அறை மேடைக்கு போடுகிறோமே அதே போல இருக்கும் ஆனால் அவ்வளவு வலிமையானது இல்லை. கீழே போட்டால் கல் slate உடைந்து விடும்.
 
slateஇல் எழுத குச்சி - ஒன்று கல் குச்சி மற்றொண்டு பால் குச்சி. கல் குச்சி கொஞ்சம் வெளிர் வெள்ளை நிறத்தில்  எழுதும். slate  கருப்பு நிறம் ஆதலால் கல் குச்சியில் எழுதப்படும் எழுத்து சிறிது மங்கலாக தெரியும். ஆனால் பால் குச்சியோ பளீர் என்று வெள்ளை நிறத்தில் எழுதும். கல் slate நன்றாக பாதுகாப்பாக வைத்துக் கொள்ளப்படும் பட்சத்தில் நீண்ட நாள் உபயோகப் படக் கூடியது. மழை வெய்யில் எதுவானாலும் கவலை இல்லை. slateக்கு பாலிஷ் போடுவது என்பது ஒரு பெரிய கலை.
 
கிராமத்தில் வேலிகளில் படர்ந்து இருக்கும் கோவை இலையை பறித்து நான்கு  கோவை இலைகளை மடக்கி slate இல் வைத்து தேயக்க slate கருமை நிறத்தில் பளபளக்கும். நல்ல பளபள slate வைத்திருப்பவன் நல்ல படிப்பாளி என்ற ஒரு மாயையை உருவாக்கும். ஏனென்றால் பால் குச்சி கொண்டு அந்த பாலிஷ் பண்ணிய slate இல் எழுதும் பொழுது எழுத்துக்கள் பளீர் என்று இருக்கும். வாத்தியார் மிக நன்று (very good) என சொல்லுவார். நடு நிலைப் பள்ளியில் நான், பட்டாபி, ரவி மற்றும் முத்து இரத்தின வேல் நால்வரும் slate  பளபளக்க வைப்பதில் போட்டி போடுவோம்.
 
மஞ்சப்பை பற்றி பேச ஆரம்பித்து நாம் எங்கோ சென்று விட்டோம். நாங்கள் பள்ளியில் படிக்கும் காலத்தில் பெற்றோருக்கு படிப்பு செலவு என்பது மிக குறைவு. ஒரு கல் slate அதற்கு ஒரு பெட்டி பால் குச்சி, ஒரு மஞ்சப்பை இவ்வளவு தான். இன்று இருப்பது போல Pre -KG முதல் முதுகில் மூட்டை தூக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு முறை ஒரு மஞ்சப்பை எங்களுக்கு தரப்பட்டால் குறைந்தது ஒரு வருடமாவது அதை வைத்துக் கொள்ள வேண்டும். இடையில் அது கிழிந்து விட்டாலோ அல்லது காணாமல் போய் விட்டாலோ அவ்வளவுதான். வகுப்பில் குறைந்தது 10 பேராவது மாயவரம் கொழும்பு ஸ்டார்  பை வைத்து இருப்போம். அவரவர் பைக்கு ஒவ்வொரு அடையாளம் இடப்பட்டிருக்கும்.
 
பள்ளிக்கு மட்டும் அல்ல துணிப் பை வேறு பல வடிவங்களிலும் அளவுகளிலும் வீடுகளில் இருக்கும். காய்கறி மற்றும் மளிகை சாமான்கள்  வாங்கச்  செல்லும் பொழுது பெரிய அளவு (size) துணிப்பை எடுத்துச் செல்லப் படும். துணிப்பை மக்கும் தன்மை உள்ளது. அதனால் இயற்கைக்கு கேடு இல்லை. மேலும் அது அழுக்கு ஆகும் பொழுது சிறிது சோப்பு போட்டு தோய்த்து அதை புதிது போல வைத்துக் கொள்ளலாம். நீண்ட நாள் உழைக்கக் கூடியது.
 
சமீபத்தில் முகநூளில் (facebook) எனது தம்பியின் (Cousin) மனைவி திருமதி கீதா ஸ்ரீகாந்த் அவர்கள் ஒரு படம் ஒன்றை போட்டிருந்தார். அந்த படமும் அதன் சார்ந்த செய்தியும் எனக்கு அதிர்ச்சியை கொடுத்தது. சென்னையில் ஒரு பசுமாட்டின் வயிற்றில் இருந்து கிலோ கணக்கில் பிளாஸ்டிக் கழிவு எடுக்கப்பட்டது என்று.
 
யோசித்து பார்க்கையில் நாம் எந்த அளவு இயற்கையை நேசிக்கத்  தவறி விட்டோம் என்பது நிதர்சனமாக புரிந்தது. நமது சௌகரியத்திற்காக பிளாஸ்டிக் பைகளை உபயோகிப்பதில் ஆர்வம் கட்டுகிறோம். நம்மால் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் எளிதில் மக்கக் கூடியவை அல்ல. அது நமது நிலத்தின் தன்மையை மாற்றக்கூடியது. மேலும் மாடு போன்ற விலங்குகள் அதை உண்ண நேரும் பொழுது அவற்றால் அது ஜீரணிக்கப் படாமல் அவை நோய்வாய்ப் படுகின்றன. அந்த நோயுற்ற மாட்டின் பால் தான் நாம் நமது குழந்தைகளுக்கு கொடுக்கிறோம்.
 
"பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்" வள்ளுவனின் வாக்கு
 
நாம் செய்யும் தவறு நம்மையே வந்து தாக்குகிறது. இனியொரு முறை இந்த தவறை நாம் செய்யோம். நம் பூமித்தாய்க்கு நாம் செய்யும் ஒரு சிறு தொண்டாக கருதி பிளாஸ்டிக் பை உபயோகிப்பதை சிறிது சிறிதாகக் குறைத்துக் கொண்டு  அதை அறவே தவிர்ப்போம்.
 
முடிக்கும் முன் ஒரு செய்தி. மஞ்சள் பை கொண்டு வருபவன் மக்கான் அல்ல  அவன் அறிவாளி. பிளாஸ்டிக் பை உபயோகிப்பவன் தான் அறிவிலி. நாமும் நம்மை சார்தவர்களும் அறிவாளிகளாக மாறுவோம். நம் தாய்க்கு செய்யும் தொண்டாக பிளாஸ்டிக் பை உபயோகிப்பதை தவிர்ப்போம்.
 
மீண்டும் சிந்திப்போம்