Sunday 12 January 2014

நா.ச.சு.ம (2)




என் செல்லம்மா பாட்டி ....
 

பெயருக்கு ஏற்றார் போல் ரொம்ப செல்லமான பாட்டி. என் அப்பாவின் தாயார். வீட்டுக்கு நான் கடைக் குட்டி என்பதால் எனக்கு செல்லம் அதிகம். பாட்டி பற்றி சொல்ல வேண்டும் என்றால் அன்பு எவ்வளவு கொடுத்தாரோ அதே போல் கண்டிப்பும் நிறைந்தவர். தாத்தா பாட்டி உறவு அரிதாகி கொண்டு வரும் இந்த கால கட்டத்தில் நாங்கள் எல்லாம் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். எங்களை வழி நடத்தி செல்ல பெரியவர்கள் வீட்டில் இருந்தனர். பாட்டி நிறைய கதைகள் சொல்லுவார். பாட்டியின் சாகச கதைகள் தான் எங்களுக்கு சின்ன வயசில் பெரிய பொழுது போக்கு.
 
பாட்டியின் பிடிவாதம் கண்டிப்பு பற்றி எனது சகோதரிகளும் தாயும் சொல்ல நிறைய கேள்விப்பட்டிருந்தாலும் நான் கண்டது பாட்டியின் சாந்த முகம் மட்டும் தான்.  பாட்டி மிகவும் சுறுசுறுப்பானவர். 90 வயதிலும் பாட்டியின் சுறுசுறுப்பு அசர வைக்கும். எங்கள் வீட்டில் பாட்டிதான் ராணி. பாட்டி வைத்ததுதான் சட்டம். பாட்டியின் பேச்சுக்கு மறு பேச்சு என்பதே இல்லை. செல்லம்மா பாட்டி எனது அம்மாவிற்கு பெரிய பக்க பலமாக இருந்ததாக எனது அம்மா அடிக்கடி சொல்லி சிலாகிப்பது உண்டு. தாத்தாவின் மறைவிற்கு பிறகு ஒற்றை மனுஷியாக இருந்து எனது அப்பாவையும் பெரியப்பாவையும் வளர்த்து ஆளாக்கிய பாட்டி எனக்கு ஒரு அவதார புருஷியாகவே தோன்றுவார்.
 
ஒற்றை மனுஷியாக வீட்டையும் நிர்வாகம் செய்து, வயல் வரப்பையும் பார்த்துக்கொண்டு, மாடு கன்றுகளை சமாளித்து அவரது திறமைக்கு அளவில்லை. எனது பாட்டியின் திறமைக்கு அவர் பல மேலாண்மை சான்றிதழ்களுக்கு (MBA degrees) தகுதியானவர்.

பாட்டி ஓலை விற்ற காசு, மட்டை விற்ற காசு புடவை தலைப்பில் எப்போதும் முடிந்து வைத்திருப்பார். எங்கள் இளவயது கால கட்டத்தில் கைப் பணம் (pocket money) கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது.  பாட்டியை தாஜா பண்ணி நானும் எனது சகோதரி உஷாவும் அவ்வப்போது பாட்டியிடம் 5 பைசா 10 பைசா பெறுவது உண்டு. அந்த கால கட்டத்தில் 5 மற்றும் 10 பைசாக்கள் என்பது எங்களுக்குப் பெரிய கைப் பணம்.

பாட்டியின் மேலாண்மை திறமைக்கு மற்றொரு எடுத்துக்காட்டு குடும்ப நிர்வாக அதிகாரத்தை  சரியான நேரத்தில் இளைய தலைமுறையின் கையில் கொடுத்தது. வீட்டை நிர்வகிக்கும் பொறுப்பு என் தாய் வசம் கொடுக்கப் பட்டாலும் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் என் பாட்டியின் கையில் இருந்தது. ஒரு தலைமை நிர்வாக அதிகாரிக்கு (CEO) உண்டான அனைத்து தகுதிகளும் அவருக்கு இருந்தது. இத்தனைக்கும் பாட்டி பெரிய படிப்பெல்லாம் படித்ததில்லை. எல்லாம் வாழ்கைப் பாடம் தான்.

எங்கள் பாட்டி ஒரு பட்டம் பெறாத ஆனால்  கை தேர்ந்த மகப்பேறு மற்றும் குழந்தை நல மருத்துவர். எனது தாயின் அனைத்து பிரசவங்களும் கிராம செவிலியைக் கொண்டு எனது பாட்டியின் மேற்பார்வையில்தான் நடந்ததாம். எல்லாமே சுகப் பிரசவங்கள் தான்.

நான் பிறந்தது கார்த்திகை மாதம். ஒரு அடைமழை நாள். நான்கு கூடல் வாயும் ஒன்றாய் கொட்டியது என்று உவமானம் கூறுவார். கூடல்வாய் என்பது வீட்டு முற்றத்தில் நான்கு மூலையிலும் மழை நீர் வெளியேற அமைக்க பட்டது. மழை அதிகமாக பெய்யும் பொழுது அருவி போல் கூடல்வாய் வழியாக நீர் கொட்டும். செவ்வகமான முற்றத்தில் நான்கு கூடல்வாயும் ஒன்றாக கொட்டியது என்றால் மழையின் தீவிரத்தை கற்பனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள்.  நான் பிறந்தவுடன் கூடல் வாய் நீரில் பாட்டி என்னை குளிப்பாட்டினாராம். பாட்டியின் இந்த செயலுக்கு தர்க்க ரீதியான காரணம் எனக்கு புரியவில்லை என்றாலும் பாட்டியின் அந்த தைரியத்தைப் பாராட்ட வேண்டும். 

குழந்தைகள் நலம் காப்பதில் பாட்டிக்கு நிகர் யாரும் இல்லை. எல்லாமே கை வைத்தியம் தான். வீட்டின் கொல்லையில் அனைத்து மூலிகைகளும் இருக்கும். எந்த விதமான உடல் சுகவீனம் என்றாலும் அதற்கு மூலிகை மருந்துதான். வாரம் ஒருமுறை எண்ணைக் குளியல். மாதம் ஒரு முறை வயிற்றுக்கு விளக்கெண்ணை என எங்களுக்கு நிரந்தர நோய் எதிர்ப்புச் சக்தியை கொடுத்தவர்.

சின்ன சின்ன வேளைகளில் எங்களை ஈடுபடுத்தி எங்களை அறியாமல் எங்கள் கடமையை எங்களுக்கு உணர்த்தியவர். கடைசிக் காலத்தில் பாட்டி படுத்த படுக்கையாய் போனது எங்களுக்கெல்லாம் அதிர்ச்சி. கொல்லைப் புறத்தில் வழுக்கி விழுந்ததில் பாட்டிக்கு பக்க வாதம் வந்தது. இந்த கால கட்டத்தில் 
பாட்டிக்கு சின்னச் சின்ன பணிவிடைகள் செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்தது.

90 வயதுக்கு பிறகு கூட பாட்டி ஆரோக்யமாக இருந்ததற்கு காரணம் அவர்களது முறையான வாழ்வியல் சித்தாந்தங்களால் தான் என்பது நிதர்சனமான உண்மை. நம் முன்னோர்கள் விட்டு சென்ற நல்ல பழக்க வழக்கங்களை பின் பற்றி நம் வாழ்கையையும் நெறி படுத்திக்கொள்வோம். 

மீண்டும் பேசுவோம் 
 

நான் சந்தித்த சுவாரஸ்யமான மனிதர்கள் (1)

சேதுராமன் சார் 

வலைப் பதிவில் சுவாரஸ்யமான மனிதர்கள் பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றிய உடன் எங்கு ஆரம்பிப்பது என்ற குழப்பம் உண்டானது. நிறைய முகங்கள் மனத் திரையில் தோன்றி மறைந்தன. ஏறு வரிசையில் செல்வதா அல்லது இறங்கு வரிசையில் செல்வதா என்ற சிறிது நேர அலை பாய்தலுக்கு பிறகு ஏறு வரிசை என முடிவானது. அதாவது எனது இளவயது முதல் ஆரம்பிக்கிறேன்.
 
நான் முதன்முதல் பள்ளிக்கு சென்ற நாள் எனக்கு நினைவு உள்ளது. அப்போதேல்லாம் 5 வயதிற்கு தான் பள்ளிக்கு அனுப்புவார்கள். இப்போது போல 2-1/2 வயதிலேயே பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு பெற்றோர் அவரது எதிர்காலம் பற்றி பயப்படும் நிலைமை அப்போது இல்லை. ஆனாலும் எனது குறும்புகளும் கொட்டங்களும் தாங்காமல் எனது அப்பா என்னை 4-1/2 வயதில் பள்ளிக்கு அனுப்பினார். 1970இல் விஜய தசமி அன்று பழம் பாக்கு வெற்றிலை தட்டோடு எனக்கு புதுத் துணி உடுத்தி என்னை பள்ளியில் சேர்க்க எனது தந்தையார் அழைத்து சென்றது இப்போதும் எனக்கு பசுமையாக நினைவில் உள்ளது.  அப்போது பள்ளியில் ஆசிரியராக திரு சேதுராமன் அவர்கள் இருந்தார். என்னை  அவர் முன் கொண்டு எனது தந்தையார் நிறுத்தினார். திரு சேதுராமன் அவர்கள் எனது தந்தைக்கு நெருங்கிய நண்பர். எங்கள் குடும்ப நண்பரும் கூட. என்னை பார்த்த அவர் தலை மேலாக கையை தூக்கி மறுபுறம் உள்ள காதை தொடச்  சொன்னார். கைக்கு காது எட்டினால் பள்ளி செல்லும் வயது வந்து விட்டது என்று கணக்காம். அப்போதெல்லாம் பிறப்பு இறப்பு சான்றிதழ் நடை முறையில் இல்லை.
 
எனது கை காதுக்கு எட்டியதால் நானும் பள்ளியில் சேர்க்கப்பட்டேன். எங்கள் வீட்டில் இருந்து மூன்றாவது வீட்டில் தான் எங்களது பள்ளி இயங்கிக் கொண்டிருந்தது. நானோ மிகுந்த  அம்மா செல்லம். அம்மாவை விட்டு அங்கு இங்கு போக மாட்டேன். பள்ளி அரை நேரம் என்றாலும் அவ்வளவு நேரம் அம்மாவை விட்டு பிரிவது என்பது எனக்கு ஆகாத காரியம். அவ்வப்போது ஒற்றை விரலை காண்பித்து விட்டு பள்ளியின் கொல்லை  வழியாக எங்கள் வீட்டிற்கு சென்று விடுவேன். என் அம்மா என்னை இழுத்து கொண்டு வந்து பள்ளியில் விட்டு விட்டு செல்வார்.
 
சில நேரம் திரு சேதுராமன் அவர்கள் என்னை என் வீட்டிற்கு மோரோ அல்லது காபியோ வாங்கி வர சொல்லி அனுப்புவார். அதை சாக்கு வைத்து வீட்டுக்கு ஓரிரு முறை சென்று வரும் வாய்ப்பு கிட்டும்.
 
எனது முதல் ஆசான் என்ற முறையில் திரு சேதுராமன் அவர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதையும் மதிப்பும் உண்டு. பிற்காலத்தில் அவரது புதல்வர் திரு ராஜு எனது அக்காவின் கணவரானது எனக்கு அவரது கடைசி காலம் வரையில் அவருடன் தொடர்பில் இருக்கும் பெரும் பாக்கியத்தை அளித்தது.
 
சார் பற்றி சொல்ல வேண்டும் என்றால் அவருக்கு எனது தாயார் உடன் பிறவா சகோதரி போல. எங்களை அவர் தனது பிள்ளைகள் போலவே பாவித்தார். கடின உழைப்பாளி. நல்ல மனிதர். தன்னலம் இல்லாதவர். எங்கள் குடும்பத்தில் ஒரு மூத்த உறுப்பினாராகவே எனது பெற்றோரால் பாவிக்கப் பட்டவர்.  அவரைப் போன்ற மேன் மக்களின் தொடர்பு என்பது இன்றைய காலக் கட்டத்தில் அரிது.
 
அந்த காலத்தில் அவர் எங்கள் ஊருக்கு அருகில் உள்ள சிறுபுலியூர் மற்றும் பேரளத்தில் டியூஷன் எடுக்க செல்வார். இரவு திரும்பும் போது  தினமும் எங்களுக்கு வறுத்த வேர் கடலை வாங்கி வருவார்.  வேர் கடலை என சொல்ல தெரியாமல் டகலடொக்க என நான் கூறுவேணாம். ஒரு சில நாட்களில் அவர் வர நேரம் ஆனால் வேர் கடலைக்காக நாங்கள் தூங்காமல் காத்திருந்ததும் உண்டு. எவ்வளவு நேரம் ஆனாலும் கதவை தட்டி டகல டொக்க கொடுக்காமல் அவர் சென்றது இல்லை. பல வருடங்கள் இது தொடர் நிகழ்ச்சியாக நடந்தது.
 
குழந்தைகள் மேல் அவருக்கு அலாதி பிரியம். எங்களுக்கு நிறைய கதைகள் சொல்வார். அதில் அவர் சந்தித்த நிகழ்வுகள், சம்பவங்களும் அடங்கும். அந்த கால கட்டத்தில் கிராமங்களில் பேய் நடமாட்டம் என்பது மிகவும் சாதாரணமான ஒன்று. அவர் ஒரு முறை மோகினி பேயின் வசமிருந்து தப்பித்து வந்த கதை இன்றும் என்னால் மறக்க முடிவதில்லை.
 
எனது முதல் ஆசானுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.