Wednesday 15 January 2014

தாய் எனும் கோவில் (5)

 என் அம்மா - பகுதி 5


பெண்கள் பெட்டியில் அம்மாவைக் காணாமல் எனக்கு ஒரு கணம் இதயம் நின்று விட்டது. அம்மாவை நான்  எங்கேன்னு போய் தேடுவேன். அந்த சமயம் அம்மாவுக்கோ வயது 60க்கு மேல். நிறைய தங்க ஆபரணங்கள் வேறு அணிந்திருந்தார். பெட்டியின்  உள்ளே ஏறி அம்மா என்று அழைத்துக்கொண்டே அவரைத் தேடினேன். எங்கு அம்மாவை அமர்த்தி விட்டு வந்தேனோ அந்த இருக்கைக்கு மேலே இருந்த பெர்த்தில் அம்மா நன்றாக உறங்கிக் கொண்டு இருந்தார். தலை மாட்டில் எங்கள் பைகள் வைக்கப் பட்டிருந்தன. மெல்ல அம்மாவை எழுப்பி என்னாச்சு எனக்  கேட்டேன். இரவு 2:00 மணிக்கு மேல் பக்கத்தில் இருந்த பயணிகள் அம்மாவின் வயதையும்  அவர் சோர்ந்து இருப்பதையும் மனதில் கொண்டு அவரை மேலே ஏறி படுப்பதற்கு உதவி செய்துள்ளனர். ஜன்னல் வழியாக நான் பார்த்த பொழுது அம்மா மேலே படுத்து இருப்பது எனக்கு தெரியவில்லை. நான் நிம்மதி பெருமூச்சு விட்டேன். பிறகு அம்மாவிற்கு ஒரு காபி வாங்கி கொடுத்து விட்டு அப்பாவை பார்க்கச் சென்றேன்.
 
லக்னௌ வந்து சேர்ந்த பிறகு என் பெற்றோரை அயோத்யா அழைத்து சென்றேன். ராம ஜன்ம பூமி கலவரங்கள் நடப்பதற்கு முந்தய கால கட்டம் அது. சரயு நதியில் ஸ்நானம் செய்வித்து அம்மாவிற்கு அங்கிருந்த கோவில்களில் தரிசனம் செய்வித்து அழைத்து வந்தேன். அம்மாவிற்கு மனம் கொள்ளா மகிழ்ச்சி.

அம்மா அப்பா வந்திருப்பது அறிந்து எனது லக்னோ நண்பர்கள் அவர்களை பார்க்க வீட்டிற்கு வந்தனர். எனது நண்பர்களான மெஸ் மாமி,  திரு ஜெயராமன் திரு  அனந்து திரு தேவநாதன் திரு சுவாமிநாதன் திரு ராவ் மற்றும் அவர்களது குடும்பத்தினர், மற்றும் என்னைப் போல அங்கு தனியாய் வாழ்ந்து கொண்டிருந்த மட்டற்ற பேச்சுலர் நண்பர்கள்  சித்தப்பா விஜயன், தாவுஜி  ரங்கராஜன், புலி வெங்கடேஷ், மாதவன், ஊசுவா வெங்கடேஷ், வள்ளி நாயகம், டம்பளர் சிவா, சுப்புணி போன்றோரை பார்த்து விட்டு  நல்ல நண்பர்களுடன் பையன் இருக்கின்றான் என்ற நம்பிக்கையும் நிம்மதியும் அம்மாவிற்கு வந்தது.

பல வருடங்கள் அம்மா தனது பத்ரி விஜயம் பற்றி சிலாகித்து கொண்டிருந்தார். ஒவ்வொரு முறையும் அம்மா சொல்லும் பொழுது முதன் முறை கேட்பது போலவே இருக்கும். அம்மா என்னுடன் பத்ரி வந்த சமயம் அம்மாவிற்கு 60 வயதிற்கு மேல் இருக்கும்.ஆனாலும் ஒரு குழந்தையின் குதூகலத்துடன் அம்மா அந்த பயணத்தை ரசித்தது இன்றும் இனிக்கிறது. ஆபத்தான மலைப் பகுதி, தொடர் பயணம் ஆனாலும் அம்மா எப்போதும் சூழ்நிலைக்கு தகுந்தவாறு தன்னை மாற்றிக் கொண்டார். முழு பயணத்திலும் அம்மாவின் உணவு வெறும் சப்பாத்தியும் தயிரும் தான். அந்த வயதில் நம்மால் இது முடியுமா என்பது சந்தேகம்தான்.

லக்னௌவில்  ஒருநாள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது மெல்ல அம்மாவிடம் எனக்கு எப்ப கல்யாணம் எனக்  கேட்டேன். வயது 24 தானே ஆகிறது அதற்குள் என்ன அவசரம் என்றார். இல்லை என் கூட வேலை செய்யும் பசங்க எல்லாம் 25 வயசில் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. நம் வீட்டிலும் எல்லா அக்காவிற்கும் கல்யாணம்  ஆயிடுச்சு. கால காலத்தில் எல்லாம் நடந்தால் நல்லது தானே, நானும் வாழ்க்கையில் செட்டில் ஆகி விடுவேன் என்று கூறினேன். அதோடு நில்லாமல் கிண்டலாக, உனக்கு கஷ்டமா இருந்தா சொல்லு இங்கயே ஒரு நல்ல வடக்கத்தி பொண்ண பார்த்து கல்யாணம் பண்ணிக்கிறேன். பேரனோ/ பேத்தியோ பேர் வைக்க வா என்று கூறி சிரித்தேன். அம்மா நமட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டு அப்படி எல்லாம் செய்து விடாதே. ஊருக்கு சென்று பார்க்கிறேன் என்று கூறினார். சொன்னது போலவே 1991 அக்டோபரில் எனக்கு பெண் பார்த்து நிச்சயம் செய்து விட்டார். அம்மாவின் தேர்வு எனக்கு மிகச் சரியான ஒரு வாழ்க்கைத் துணையை  அமைத்துத் தந்தது. 
 
அடுத்த பயணம் 1992-93இல். அப்போது எனக்கு திருமணம் முடிந்து விட்டது. நான் சென்னை மாற்றலாகி வந்து விட்டேன். என் பெற்றோருடன் பெங்களூர், உடுப்பி, தர்மஸ்தலா, கொல்லூர், ஸ்ருங்கேரிஹொரநாடு சென்று வந்த அனுபவம். என் சகோதரி உஷா குடும்பம் மற்றும் நான் எனது பெற்றோர் அனைவரும் சென்று வந்தோம்.(என் மனைவி எனது முதல் மகளை கருவுற்றிந்ததால் அவளால் எங்களுடன் வர முடிய வில்லை - 2000ம் ஆண்டு மீதும் ஒருமுறை என் மனைவி மற்றும் குழதைகளுடன் இந்த இடங்களுக்கு சென்று வந்தேன்  அப்போது உஷா அக்கா குடும்பத்துடன் எனது மற்றொரு மருமான் கார்த்திக்கும் வந்து அந்த சுற்றுலாவைச் சிறப்பித்தான்.) 
 
ஸ்ருங்கேரியில் அம்மாவுக்கு  சங்கராச்சாரியாருடன் அளவளாவும் வாய்ப்பு கிடைத்தது. இதில் அம்மாவிற்கு ஏக மகிழ்ச்சி. நிறைய கோவில்களில் தரிசனம், கார் பயணம், இயற்க்கை எழில்,  துங்கபத்ரா ஸ்நானம்,  ஒவ்வொன்றையும் அம்மா ரசித்து அனுபவித்தார்.   

1993-94
இல் எனக்கும் என் அம்மாவிற்கும் சிறிது மனக் கசப்பு உண்டானது. எல்லா குடும்பத்திலும் நடக்கும் நிகழ்வுதான். பிள்ளைக்கு திருமணம் ஆனால் பெண்டாட்டி தாசன் ஆகிவிடுவான் என்ற கட்டுக் கதைக்கு என் தாயாரும் பலிகடா ஆனார். சொந்தத்தில் இருந்த சில புல்லுருவிகள் என் தாயின் மனதை கலைத்தன. அவர்கள் வீட்டில் நடந்த நிகழ்வுகளை சொல்லி என் தாயின் மனதைக் கலைத்தன அதில் ஓரளவு வெற்றியும் கண்டன. நானும் மீளொன்னா மனக்கிலேசத்திற்கு ஆளானேன். ஆனாலும் என் தாய் மீது கொண்ட அன்பு கொஞ்சம் கூட குறையவில்லை. அவருக்கும் அப்படித்தான் இருந்திருக்கும் என்பதில் ஐயம் இல்லை. ஆனாலும் இருவரும் இதை பற்றி ஒரு தடவை கூட பேசியது இல்லை. நான் என்ன அனுமனா என் நெஞ்சை பிளந்து காட்டநான் எனது கூட்டுக்குள் என்னை குறுக்கிக் கொண்டேன். யாரிடமும் எனது மன கஷ்டத்தை பகிர்ந்து கொள்ளவும் விரும்ப வில்லை.

1992
முதல் 1998 வரை நான் அடைந்த மன உளைச்சளுக்கு  அளவே இல்லை. அப்போது எனக்கு கைக்கும் வாய்க்குமே சரியாக இருந்தது. இதில் பிளாட் வாங்கியதற்கு உண்டான பிடித்தம் வேறு. எப்படி இதில் இருந்து மீளப்போகிறோம் என்ற மலைப்பு. மனைவி தரப்பில் ஒருவரை நம்பியதில் அவமானம் வேறு. அன்று தான் மனதிற்குள் ஒரு சங்கல்ப்பம் செய்து கொண்டேன். சுய மரியாதை வேண்டும் என்றால் அதை காப்பாற்றிக் கொள்ள பணம் வேண்டும். பணம் பந்தியிலே குணம் குப்பையிலே என்று சும்மாவா சொன்னார்கள். 

எனக்கு என்மேல் இருந்த நம்பிக்கையை விட என் மனைவி எனது திறமையை நம்பினாள். என்னால் முடியும் என்று என்னை ஊக்குவித்தாள் . பதவி உயர்வுக்கு உண்டான தேர்வு எழுத என்னை கட்டாயப் படுத்தினாள். எனக்கோ பதவி உயர்வு வந்தால் 2 ஆண்டுகள் பல்வேறு இடங்களுக்கு மாற்றப்படுவேன். மாதக் கணக்கில் குடும்பத்தை பிரிந்து இருக்க வேண்டிய சூழல் ஏற்படும். இரண்டு சின்ன குழந்தைகளை வைத்துக்கொண்டு நீ எப்படி சமாளிப்பாய்? என்றதற்கு எனக்கு தைரியம் சொல்லி என்னை பரீக்ஷை எழுத வைத்தாள். கடவுள் க்ருபயாலும் என் தாயின் அருளாலும் எனக்கு பதவி உயர்வு கிடைத்தது. வாழ்கையில் சாதிக்க வேண்டும் என்ற வெறியும் வெற்றி பெற வேண்டும் என்ற தாகமும் என்னை ஏளனம் பேசியவர்கள்  மூஞ்சியில் கரியை பூசவேண்டும் என்ற வைராக்கியமும் எனக்குள் உண்டானது. என் தாயை போன்ற குணவதியை எனது வாழ்க்கை துணையாய் எனக்கு தேர்ந்தெடுத்து தந்த  என் தாய்க்கு மனதார நன்றி பாராட்டினேன். என் தாய் மீது எனக்கு இருந்த பற்றும் பாசமும் மேலும் கூடியது.

அதன் பிறகு 1999இல் நான் பதவி உயர்வு பெற்று காரைக்கால் மாற்றல் ஆனா பொழுது ஆறு மாதம் ஆசை தீர அம்மா கையால் உண்ணும் பாக்கியம் கிடைத்தது. எனக்காக காலை சீக்கிரமே எழுந்து சமையல் செய்து கையில் கொடுத்து அனுப்புவார். இரவு நான் வீடு வர 10 மணி ஆனாலும் தன் கையால் எனக்கு உணவு பரிமாறுவார். நான் கூட ஏம்மா நீ சிரமப்  படறே. எடுத்து வைத்தால் நான் போட்டுக் கொள்ள மாட்டேனா என்று கேட்பேன். இதில் என்னடா குழந்தே சிரமம் என்று கூறி தன்  தாய்மையை வெளிக்காட்டுவார். அம்மா என்றாலே அன்புதானே. அதுவும் நிபந்தனை அற்ற (unconditional) அன்பு. அந்த கால கட்டத்தில் நான் 7 கிலோ எடை ஏற்றினேன். அந்த கால கட்டத்தில் ஒருமுறை என்னை பார்த்த என் அண்ணா என்னடா அம்மா கையால் சாப்பிட்டு குண்டு அடிச்சுட்டே என கேலி செய்தார்.

2001
ஆம் ஆண்டு அம்மாவிற்கு சிறிது உடல் நலம் சீர் கேட்டது. மாயவரம் மருத்துவ மனையில் சேர்க்க வேண்டி இருந்தது. நாகர்கோவிலில் அப்போது நான் இருந்தேன். விஷயம் அறிந்து மாயவரம் சென்று அம்மாவைப்  பார்த்தேன். எனது சகோதரி அம்மாவிற்கு என்னுடன் வந்து தங்க வேண்டும்  என்ற ஆசை இருப்பதை எனக்கு தெரியப் படுத்தினாள். நானும் மகிழ்ச்சியுடன்  என் பெற்றோரை நாகர்கோயில் அழைத்துச்  சென்றேன். என் அம்மாவின் ஆசையை நிறைவேற்றியதில் எனக்கும் என் மனைவி குழந்தைகளுக்கும்  மற்றற்ற மகிழ்ச்சி. என் தாயும் மன நிறைவுடன் திரும்பிச்  சென்றார். 

அப்பாவின் 80வது பிறந்த நாள் (சதாபிஷேகம்) விழாவிற்காக குடும்பத்துடன் நான் எனது பிறந்த ஊர் சென்றேன். அம்மா நம்மை புரிந்து கொண்டார் இனி எல்லாம் சுகமே என நான் எண்ணி இருக்கையில் குழந்தைகள் சண்டை பெரிதாகி சகோதரி ஒருவர் தனது காழ்ப்புணர்ச்சியை அமிலமாய் வார்த்தையில் கொட்ட நிலைமை ரசாபாசமானது. அது மட்டும் அல்லாமல் நாங்கள் சென்ற வேன் நடு வழியில் விபத்தை சந்திக்க, எங்கள் தரப்பு ஞாயத்தை யாருமே கேட்க முன் வராத நிலையில் நான் மௌனமாய் என்னை அன்னியப் படுத்திக்கொண்டேன்.

அதன் பிறகு மௌனமாய் நானும் என் தாயும் எங்கள் பரஸ்பர அன்பை மனதில் போட்டுப்  பூட்டிக்கொண்டோம். அதன் பிறகு நாங்கள் சகஜ நிலைக்கு திரும்பவே இல்லை.

மேலும் சொல்வேன் ......
 

தாய் எனும் கோவில் (4)

தாய் எனும் கோவில் (4)

என் பிள்ளை நன்றாக வரவேண்டுமே என்று என் அம்மாவின் தவம். எனக்கு நன்றாகவே புரிந்தது. என் எதிர் காலம் பற்றி எனக்கு  பயமே இருந்ததில்லை. காரணம் என் தாயின் பாசம், அன்பு என்னுடன் இருக்கும் பொழுது எனக்கு நல்லவை தவிர வேறு நடக்க சந்தர்ப்பம் இல்லை என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை.

அம்மாவுடன் நான் கழித்த சில பசுமையான நினைவுகளை பகிர விரும்புகிறேன்.

1989-90
லக்னோவில்  வங்கியில் நான் சேர்ந்த இரண்டாவது வருடம் என் பெற்றோரை அங்கு வரவழைத்தேன். அவர்களை உத்தர் பிரதேசத்தில் உள்ள சில புண்ணிய தலங்களுக்கு அழைத்து செல்ல நினைத்திருந்தேன். அதன் படி லக்னௌவில் இருந்து ஹரித்வார் புறப்பட்டு சென்றோம்.   சங்கர மடத்தில் தங்க ஏற்பாடு செய்திருந்தேன். ஹரித்வாரில் எனது பழைய கான்பூர் நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. பேச்சு வாக்கில்  ரிஷிகேஷ் மற்றும் பத்ரிநாத் செல்லலாம் என முடிவு செய்தோம். மூன்று கார்களில் 4 குடும்பங்கள் பயணித்தோம்.

நாங்கள் சென்ற கார் டிரைவர் திரு ஷிவ் சிங். உ.பி.காரர். இளைஞர். மலைப்  பாதையில் கார் செல்லும் பொழுது சிறிது தூரம் வரை அம்மா கொஞ்சம் பதட்டமாக இருந்தார். நேரம் செல்லச்  செல்ல அம்மா அந்த இயற்கைச் சூழலை ரசிக்க ஆரம்பித்தார். வழியெல்லாம் தம்பி (அப்படித்தான் என்னை என் அம்மா அழைப்பார்) அண்ணா என்னை காசி, அலஹாபாத், கயா எல்லாம் அழைத்து சென்றான் நீ என்னை பத்ரி அழைத்து செல்கிறாய். என் ஜென்மம் சாபல்யம் அடைத்தது போலிருக்கிறது என்றார். என் தாயை மகிழ்விக்க இறைவன் எனக்கு கொடுத்த வாய்ப்பை எண்ணி  அவனுக்கு நன்றி கூறினேன்.

 ருத்ரபிரயாகில் மந்தாகினி அலக்நந்தா நதிகள்  சங்கமிக்கும் இடம் மிகவும் ரம்யமானது அதே சமயம் மிகவும் ஆபத்தானது. மந்தாகினி நதி அமைதியின் ஸ்வரூபம். பெண்மையின் அம்சம். அலக்நந்தா வீறு கொண்டு எழும் காளை போல ஆண்மையின் ஒரு அம்சமாக ஒரு பிரளயத்தை போல, பிரவாகமாக ஓடி வரும். வரும் வழில் உள்ள பாறைகளையும் கற்களையும் உருட்டிக்கொண்டு வரும். மதகினி பசுமை நிறத்திலும் அலக்  நந்தா வெள்ளை நிறத்திலும் இருக்கும். இரண்டும் சம்கமிக்கும் இடம் மிகவும் ரம்யமாக இருக்கும். 

சங்கமத்தில் குளிக்க ஏதுவாக ஒரு படித்துறை உண்டு. பிடித்துக்கொண்டு குளிப்பதற்கு இரும்பு சங்கிலிகள் அந்த படித்துறை உடன் இணைக்கப்பட்டு இருக்கும். அங்கு குளிக்கச் செல்பவர்கள் சங்கிலியை கையில் பிடித்துக்கொண்டோ அல்லது இடுப்பில் சுற்றி கட்டிக்கொண்டோ தான் குளிக்க வேண்டும். இல்லை என்றால் நதி பிரவாகத்தில் இழுத்துப்  போக வாய்ப்பு உள்ளது.  அம்மாவின் இடுப்பில் சங்கிலி சுற்றி அம்மாவின் ஒரு கையை நான் பிடித்துக்கொண்டு ஸ்நானம் செய்வித்தேன். அன்று அம்மா அடைந்த மகிழ்ச்சி சொல்லில் அடங்காது. 
 
அங்கிருந்து பிறகு ஒவ்வொரு சங்கமாக பார்த்துக்கொண்டு சென்றோம் - கர்ண பிரயாக், தேவப் பிரயாக், நந்தப் பிரயாக் முதலின.

காலை 7:00 மணிக்கு ஹரித்வாரில் இருந்து புறப்பட்ட நாங்கள் இரவு 9:00 மணி அளவில் ஜொஷிமத் சென்று சேர்ந்தோம். அங்கிருந்த ஒரு மடத்தில் தங்கி விட்டு மறுநாள் காலை 5:30 மணிக்கு பத்ரி  புறப்பட்டோம்.  8.00 மணி அளவில் பத்ரி  சென்று சேர்ந்தோம். அங்கிருந்த ஒரு சத்திரத்தில் தங்கி சிறிது ஓய்வு எடுத்த பின் வெந்நீர் ஊற்றில் ஸ்நானம் செய்து பத்ரி நாராயணனை தரிசிக்க சென்றோம். 

பத்ரி கோவிலில் அம்மாவுக்கு அதிர்ஷ்டம் அடித்தது. பத்ரி நாராயணனுக்கு தன்  கையால் பூஜை செய்யும் பாக்கியம் அம்மாவுக்கு கிட்டியது. அங்கு கோவில் பிரசாதம் வாங்கி சாப்பிட்டு விட்டு மீண்டும் சத்திரம் சென்றோம். பிறகு பத்ரியில் இருந்து கிளம்பி கீழிறங்க ஆரம்பித்தோம். இரவு 7.30 மணி அளவில் வரும் வழியில் நல்ல மழை. டிரைவர் ஒரு கட்டத்திற்கு மேல் போவது ஆபத்தானது, மலை சரியக் கூடும் என்று எச்சரிக்கவும் நாங்கள் ஒரு இடத்தில தங்க உத்தேசித்தோம். ஆனால் அங்கு தங்க வசதியாக எந்த சத்திரமும் இல்லை. அருகில் ஒரு எங்கள் வங்கியின் கிளை இருக்க அங்கிருந்த காவலாளி இடம் என்னை அறிமுக படுத்திக்கொண்டு உதவி கேட்டேன். அவர் எங்களுக்கு அங்கு தங்க வசதி செய்து கொடுத்தார்.  குடிசை போல இருந்தது. எங்கள் கையில் வைத்திருந்த ஷால் மற்றும் கம்பளி ஆடைகள்  கொண்டு குளிரையும் அந்த இரவையும் சமாளித்தோம்.  மறுநாள் காலை அங்கிருந்து கிளம்பி ஹரித்வார் வந்தோம். வரும் வழியில் ரிஷிகேஷில் உள்ள லக்ஷமண்  ஜூலா மற்றும் சாதுக்களின் குகைகளை தரிசனம் செய்தோம்.
 
ஹரித்வாரில் இருந்து லக்னோவிற்கு ரயில் பயணம். எங்களது பயணத் திட்டம் மாறியதால் முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்கள் முன்பே ரத்து செய்யப்பட்டது. இரவு ரயிலில் செல்லலாம் என முடிவு செய்து ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகரை அணுக அவர் தனது இயலாமையை தெரிவிக்க வேறு வழி இல்லாமல் பொதுப் பெட்டியில் (general compartment) பயணம் செய்ய முடிவு செய்தோம்.
 
பெண்கள் பெட்டி ஓரளவுக்கு காலியாக இருக்க, அம்மாவிற்கு ஒரு நல்ல இடமாய் பார்த்து அவரை உட்கார வைத்தேன். எங்கள் பெட்டிகளை அம்மாவிடம் கொடுத்து விட்டு நானும் என் தந்தையாரும் பொதுப்  பெட்டியில் இடம் தேடிச் சென்றோம். அப்பாவுக்கு மட்டும் ஒரு சீட்டு கிடைக்க, நான் வாசல் படி அருகில் அமர்ந்து பயணம் செய்ய  ஆரம்பித்தேன்.
 
அம்மாவை பெண்கள் பெட்டியில் அமர வைத்து விட்டு வந்தேனே தவிர என் நினைவு முழுதும் அம்மாவிடமே இருந்தது. அம்மாவிற்கு ஹிந்தி வேறு தெரியாது. எப்படி சமாளிக்கிறார்  என்பது தெரியவில்லை. அம்மா அமர்ந்து இருந்த பெட்டிக்கும் எங்கள் பெட்டிக்கும் இடையில் 7-8 ரயில் பெட்டிகள் இருந்தன. ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் வண்டி நடை மேடைக்குள் நுழையும் பொழுதே இறங்கி விடுவேன். ஓடிச் சென்று பெண்கள் பெட்டியில் அம்மா இருக்கிறாரா என்று பார்ப்பேன். சில சமயம் அம்மா முழித்துக்கொண்டு இருப்பார். சில சமயம் அம்மா நன்றாக உறங்கிக் கொண்டு இருப்பார். எனக்கு சிறிது நிம்மதியாக இருந்தது. ஆனாலும் அம்மாவை சிரமத்திற்கு உள்ளாக்கியதற்கு மிகவும் வருந்தினேன். காலை 6.00 மணிக்கு பெண்கள் பெட்டியில் அம்மாவை தேடினால் அம்மாவை அங்கு காணவில்லை. நான் பதறிப்போய் விட்டேன். சீட்டுக் அடியில் எங்களது பெட்டிகளையும் காண வில்லை.

 

 

மேலும் சொல்வேன்