Sunday 19 January 2014

நா.ச.சு.ம (3) - டைகர் கோவிந்தராஜன்

(டைகர்) கோவிந்தராஜன் 

 
எனக்கு கிரிக்கெட் ரொம்ப தெரியாது. ஆனால் கிரிக்கெட் சம்பந்த பட்டவர்களுடன் எனக்கு நட்பு கிடைத்தது நான் செய்த பாக்கியம் என நினைக்கிறேன். தமிழ்நாடு கிரிக்கெட் சங்க (த.நா.கி.ச) சில நிர்வாகிகளுடன் எனக்கு தொடர்பு 1997-98இல் ஏற்பட்டது. அதற்கு காரணம் எனது குரு, நண்பர், என்னுடன் வங்கியில் பணிபுரிந்த திரு வி.பி.கோவிந்தராஜன் அவர்கள். செல்லமாக விபிஜி என்றும்  ஹெட் என்றும்  எங்களாலும், த.நா.கி.ச. வட்டாரத்தில் டைகர் என்றும் அன்பாக  அழைக்கப் படுபவர்.

அவருக்கு டைகர் என பெயர் வரக்  காரணம் அவர் நடத்திய டைகர் கிரிக்கெட் கிளப். என்னிடம் அவருக்கு என்ன ஈர்ப்பு வந்தது என்று எனக்கு தெரியவில்லை. என் மீது அதீத வாஞ்சையும் நட்பும் கொண்டவர். உரிமையுடன் என்னை அவர் திட்டுவார். எனக்கு தெரியும் அதெல்லாம் எனது நன்மைக்காகதான் என்று. ஒரு கட்டத்தில் அவர் என்னை மரியாதையாக பேசினால் அன்று எனக்கு எதாவது அடி படும் அல்லது காயம் உண்டாகும்.

ஒருமுறை காலை அலுவலகம் சென்ற உடன் என்னை அவர் அழைத்திருக்கிறார். நான் கவனிக்காமல் இருந்திருக்கிறேன். சார்.. என்ன உங்களை கூப்பிட்டால் காதிலே விழாதா? என்று கூறவும் நான் என் சீட்டில் இருந்து எழுந்து அவரை நோக்கி சென்றேன். நான் எழுந்த அவசரத்தில் நான் அமர்திருந்த நாற்காலி அருகில் இருந்த ஸ்டீல் அலமாரி மேல் இடிக்க, அலமாரி மேல் இருந்த பழைய பாக்ஸ் பைல் தலையில் விழுந்து தலை புடைத்து விட்டது.

1999ல் எனக்கு அதிகாரியாக பதவி உயர்வு கிடைத்தபோது எனது பதவி உயர்வு கடிதத்தை எனக்கு கொடுக்க என்னை சார் என்று அழைத்தார். அவரை நோக்கி செல்லும் பொழுது அருகில் இருந்த ஸ்டூலில் கால் இடறி கட்டைவிரலில் ரத்தம் வந்து விட்டது. அதன் பிறகு அவர் என்னை சார் என கூப்பிடுவதையே விட்டு விட்டார். திரு வி.பி.ஜி. அவர்கள் ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற்றவர். அதேபோல் சம்ஸ்க்ருதத்திலும் தேர்ச்சி பெற்றவர். நல்ல நகைச்சுவை உணர்வு மிக்கவர். நல்ல நண்பர். நல்ல மனிதர். முகத்துக்கு நேரே பேசும் சுபாவம் உள்ளவர். ஆரம்ப காலத்தில் அவரது இந்த வெளிப்படை தன்மை எனக்கு எரிச்சல் ஊட்டினாலும் அவரையும் அவரது சுபாவமும் புரிந்த பிறகு எனக்கு அது பழகி விட்டது.

1998ஆம் ஆண்டு ஜனவரி மாதம் என்று நினைக்கிறேன். அலுவலகத்தில் மாலை 5.00 மணிக்கு வீட்டுக்கு செல்ல தயாராகி கொண்டிருக்கும் பொழுது விபிஜி அவர்களிடம்  இருந்து ஒரு போன். டேய் உடனே கிரிக்கெட் சங்கத்திற்கு வா. அவசரம். வேறு எதுவும் சொல்ல வில்லை. அப்போது தான் புதிதாக பறக்கும் ரயில் சென்னைக்கு வந்திருந்தது. சென்னை கடற்கரை ரயில் நிலையம் அருகில் தான் நான் வேலை செய்த எங்களது வட்டார தலைமை அலுவலகம் இருந்தது. உடனே பறக்கும் ரயில் பிடித்து சேப்பாக்கம் இறங்கி கிரிக்கெட் சங்கத்திற்கு சென்றேன்.

அப்போது சங்கத்தின் செயலாளராக மறைந்த திரு அசோக் கும்பட் அவர்கள் இருந்தார். விபிஜி கும்பட் அவர்களின் அறைக்கு என்னை அழைத்துச் சென்று என்னை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார். யாரு இந்த பையனா? இந்த வேலைக்கு இவன் சரி படுவானா ? என கும்பட் அவர்கள் கேட்க இவரோ கரெக்டாக இருப்பான் சார் என் கூறினார். வடிவேலு காமெடியில் வருவது போல என்ன வேலை என்று அப்போது எனக்கு புரிய வில்லை. பிறகு விபிஜி அவர்கள் விளக்கிய பிறகு தான் எனக்கு தெளிவாக புரிந்தது.

அவர் சொன்ன வேலை என்னால் செய்ய முடியுமா? எனக்குள் ஒரு சின்ன சந்தேகம்... ஆனால் அவர் தந்த ஊக்கம் என்னை ஒத்துக்கொள்ள  செய்தது.

என்ன வேலை? மீண்டும் சந்திக்கும் பொழுது சொல்கிறேன்.....

தாயெனும் கோவில் - பகுதி 7

என் அம்மா (7)- நிறைவுப்  பகுதி 


அம்மாவின் மறைவு குறித்து எனக்கு போன் வந்த பிறகு கூட என்னால் நம்ப முடியவில்லை. ஆனாலும் போன் செய்தது என் சகோதரியின் கணவர். நம்பவும் முடியவில்லை நம்பாமலும் இருக்க முடியவில்லை. ஒரு வாரம் முன்பு அலுவலக வேலையாக கொழும்பு செல்லும் வழியில் சென்னையில் நான் அம்மாவை சந்தித்தது, பேசியது, அம்மாவின் கையால் காபி குடித்தது என மீண்டும் மீண்டும் அந்த நிகழ்வே என் மனத் திரையில் வந்து என் கண்ணை கண்ணீர் மறைத்தது. ஏற்கனவே அதிர்ச்சியில் இருக்கும் என் மனைவி குழந்தைகள் முன்னே தைரியமாக காட்டிக் கொண்டாலும் என்னால் என்னை கட்டுப் படுத்த முடியவில்லை. குளியல் அறையில் சென்று குழாயை திறந்து விட்டு விட்டு நான் அழுவது வெளியே கேட்கா வண்ணம் மனது விட்டு கதறி அழுதேன். மனசு கொஞ்சம் லேசானது.

வெளியில் வந்த உடன் அடுத்து என் அண்ணாவிடம் இருந்து போன். தம்பி அம்மா போய்ட்டாடா இவ்வளவுதான் அண்ணாவால் பேச முடிந்தது. நான் என்னை தேற்றிக்கொண்டு விஷயம் கேள்வி பட்டேன் அண்ணா. மாலை 5.00 மணி விமானத்தில் சென்னை வருகிறேன் என்று கூறினேன்.

அம்மா தனது பிறந்த ஊர் கிள்ளியூர் சென்று இருக்கிறாள். அம்மாவின் பிரிய தோழி மாரியம்மன் கோவிலுக்கு போயிருக்கிறார் அங்கு மயங்கி விழுந்து இருக்கிறார். டாக்டரிடம் கொண்டு போயிருக்கிறார்கள். எப்போதும் போல டாக்டர் டூ லேட் என்று சொல்லி விட்டராம்.

அடுத்து என்ன செய்வது... ஒன்றும் புரியவில்லை. சென்னைக்கு அடுத்த விமானம் எத்தனை மணிக்கு? எப்படிப் போவது? கேள்வி மேல் கேள்வி மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

மாலை 5:30 மணிக்கு விமானம். 2.00 மணிக்கே நாங்கள் தங்கி இருந்த நவிமும்பையில் (nerul) இருந்து கிளம்பினோம். சாதரணமாக நவி மும்பையில் இருந்து மும்பை சத்ரபதி சிவாஜி ஏர்போர்ட் அதிக பட்சமாக 1 மணி நேர பயணம் தான். ஆனாலும் நான் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. இங்க உட்கார்ந்து இருப்பதற்கு நாம ஏர்போர்ட் போய்க் காத்திருப்போம் என என் மனைவியும் குழந்தைகளும் ஆமோதிக்க எனக்கு ரெகுலராக வரும் மேரு டாக்ஸி டிரைவர் பிஷுவுக்கு போன் செய்து வரச் சொன்னேன். பிஷு எப்போதும் போல காலம் தாழ்த்தாமல் வந்து சேர்ந்தான். எனது சோர்வான முகத்தைப் பார்த்து அவன் விசாரிக்க என்னால் பேச முடியவில்லை. என் மகள்தான் அவனுக்கு பதில் அளித்தாள்.

 3.00 மணிக்கே ஏர்போர்ட் உள்ளே நுழைந்தோம். ஒவ்வொரு நிமிடமும் ஒரு யுகமாக கழிந்தது. எப்போது போர்டிங் கால் வரும் எப்போது விமானம் ஏறுவோம் என ஒரே தவிப்பு.

எங்களை நேரே என் பெரிய சகோதரியின் வீட்டுக்கு வரச்சொன்னதால் நாங்கள் அங்கு சென்றோம்.அதற்குள் என் உடன் பிறந்தவர்கள் அனைவரும் அங்கு திரண்டு இருந்தனர். ஒரே அழுகுரல். யாருக்கு யார் ஆறுதல் கூறுவது? ஒன்றும் புரியவில்லை.

அம்மாவுக்கு என்ன நடந்தது ...

திருநள்ளாரில் நடைபெற்ற எனது பெரியப்பாவின் (அம்மாவின் பெரிய சகோதரியின் கணவர்) 90 வது பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள என் தாயின் உடன்பிறந்தவர்களுடன் எனது பெற்றோர் சென்றுள்ளனர். விழா முடிந்த மறுநாள் எல்லோரும் கிள்ளியூர் சென்று அங்கு கோவில்களில் சிறப்பு பூஜை செய்ய ஏற்பாடு நடந்துள்ளது. எல்லோரோடும் என் பெற்றோரும் கிள்ளியூர் மாரியம்மன் கோவில் சென்றுள்ளனர்.

நான் முன்பே கூறியது போல அம்மாவிற்கு மாரியம்மன் என்றால் மிகுந்த இஷ்டம். மாரியம்மன் அம்மாவிற்கு கடவுள் என்ற நிலையை விட ஒரு உற்ற தோழி போல. ஒவ்வொரு முறையும் எங்கள் வீட்டில் எந்த விசேஷம் நடந்தாலும் அதோடு கூட மாரியம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் பூஜை முதலியன நடைபெறும். அம்மா எனது பெற்றோரின் சதாபிஷேகத்தின் பொழுது அம்மனுக்கு தங்கத்தில் தாலி சார்த்தி இருந்தார். அந்த அளவுக்கு மாரியம்மன் மீது அம்மாவுக்கு அப்படி ஒரு பிரியம்.  

சதா சர்வகாலமும் அம்மாவிற்கு தெய்வ சிந்தனை தான். எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் அம்மாவிற்கு தெய்வத்திடம் ஒரே பிரார்த்தனை தான். "நான் பூவோடும் பொட்டோடும் தீர்க்க சுமங்கலியாய் உன் சரண் அடையவேண்டும். நோய் நொடியில் கிடக்காமல் என்னை கொண்டு போ தாயே" என்பது தான்.

அம்மா வாழ்வின் உண்மையை நன்கு உணர்ந்திருந்தார் என்று தான் சொல்ல வேண்டும். அம்மா மனிதர்களை விட மகமாயியை நம்பினார். கடவுளை நம்பினோர் கை விடப் படார் என்பதற்கு அம்மாதான் ஒரு பெரிய சான்று. வாழ்வின் அனைத்து சுக துக்கங்களும் அம்மா கடந்து வந்தார். அம்மா கடந்து வந்த பாதை கடினமானது என்றாலும் அவரது சாதனை அவருக்கு வாழ்வில் ஒரு உன்னத ஸ்தானத்தை கொடுத்தது. எங்கள் குடும்பத்தில் அதாவது அம்மா வழியில் எந்த ஒரு விசேஷம் என்றாலும் அதில் முதல் ஆளாக அம்மாதான் இருப்பார். எங்கள் குடும்பத்தில் அனைத்து சம்பந்திகளுக்கும் அம்மா பிரியமானவர். இப்படிப் பட்ட ஓர் குணவதியை யாருக்கு தான் பிடிக்காது. அம்மா எந்த பல்கலைக் கழகத்தில் இந்த நற்பண்புகளை பயின்றார்?

ஒருநாள் தேவி பராசக்தி பிரும்மாவிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார். எனக்கு பிரிமான ஒரு உயிர், பல காலம் என்னை மட்டுமே எண்ணி தவம் செய்து வருகிறது. அந்த உயிருக்கு நான் அடைக்கலம் வழங்கி என் சரண் சேர்த்துக்கொள்ள ஆசைப் படுகிறேன். இந்த ஜனனம் தான் அந்த உயிர்க்கு கடைசி ஜென்மமாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன் எனக்கு உதவி செய்ய வேண்டும் என வேண்டி நின்றாள். 

தேவி ராஜராஜேஸ்வரியின் வேண்டுகோள் கேட்ட பிரம்மா தேவி தயை கூர்ந்து அந்த உயிரின் விவரங்கள் எனக்கு எடுத்து உரைக்க வேண்டும் என்றார். தேவி விவரிக்க, அப்போது பிரம்மா தாயே உமது வேண்டுகோளுக்கு நான் செவி சாய்க்கிறேன், ஆனால்  நீங்கள் சொல்லும் அந்த உயிருக்கு இன்னமும்  11 ஜென்மாக்கள் மீதம் இருக்கின்றன. அவற்றை கடந்த பின்பே அவ்வுயிர் உந்தன் சரணடைய இயலும் என்றார்.
 
பிரம்மாவின் இந்த பேச்சு தேவிக்கு திருப்தியாக இல்லை. 11 ஜென்மம் என்பது காலம் கடந்த ஒன்றாக எனக்கு தோன்றுகிறது. வேறு ஒரு உபாயம் சொல்லுங்கள் என்றாள் .
 
தேவியின் கூற்றை கேட்ட பிரம்மா  தேவி ஒரு உபாயம் உள்ளது. நீங்கள் சிபாரிசு செய்யும் உயிரானது பூமியில் ஒரு மானிட ஜென்மமாக பிறக்க வேண்டி இருக்கும். அதிலும் ஒரு பெண்ணாக ஜனிக்க வேண்டும். நான் சொல்ல வேண்டியது இல்லை, பெண்ணாக பிறக்கும் அந்த உயிரானது பல்வேறு இன்னல்களையும் கஷ்டங்களையும் அனுபவிக்க நேரும். அத்தகைய நேரத்தில், அந்த உயிர் சோர்வுறும் சமயத்தில் தாங்கள் அதற்கு உற்ற துணையாய் இருந்து அருள வேண்டும், சம்சார சாகரம் கடந்து இந்த உயிர் கரையேற வேண்டும். வாழ்கை பயணத்தில் இந்த உயிர் பல சுக துக்கங்களுக்கு ஆளாக வேண்டும். இது சாத்தியமாகும் பட்சத்தில் என்னால் உங்கள் வேண்டுகோளை ஏற்க முடியும் என்றார்.
 
பிரம்மா மேலும் கூறுகையில், அந்த பெண்ணுக்கு பத்து சந்தான பாக்யங்களை அளிக்கிறேன். பெண்ணுக்கு ஒவ்வொரு பிரசவமும் ஒரு மறு ஜென்மம் தானே. என் கணக்குப் படி 11 ஜென்மம் எடுத்தது போலும் ஆகிவிடும் என்றார்.  அந்த உயிரின் அற்பணிப்பு திறன் மீது அசைக்க முடியா நம்பிக்கை கொண்ட தேவி, சிறிதும் தயக்கமின்றி அந்த உயிரை ஆட்கொண்டாள் . அந்த உயிர் கரை ஏறியதா? யார் அந்த உயிர்? 

தேவியால் சிபாரிசு செய்யப்பட அந்த உயிர் எனது தாய் தான்.  பிரம்மா மற்றும் தேவி ராஜ ராஜேஸ்வரியின் இந்த லீலையில் எங்களை போல வேறு பல உயிர்களும் துணைக்  கதாப்  பாத்திரம் ஏற்று நடித்தன. "பூவோடு சேர்ந்து நாறும் மணப்பது போல" நாங்களும் நற்பயன் அடைவோம் என்று நம்புகிறோம். 

 
2011, மே மாதம் 20ஆம் தேதி, பிரம்மாவிடம் இருந்து தேவிக்கு அழைப்பு வந்தது. தேவி நீவிர் கூறிய அந்த உயிர் உமது பாதார விந்தம் அடையும் நாள் நெருங்கி  விட்டது. இன்றிலிருந்து பூலோக கணக்குப்படி 10 ஆம் நாள் நீவிர் அந்த உயிரை ஆட்கொள்ளலாம் என்று கூறினார். தேவி யோசித்தாள். இந்த புண்ணிய ஆத்மாவை எனது புண்ணிய ஸ்தலத்திலேயே நான் ஆட்கொள்ள விரும்புகிறேன். ஆனாலும் இவளுக்கு இன்னமும் பந்த பாசம் தீர்ந்த பாடில்லை. இவள் கடமைகளை முடித்து விட்டாள் என்றாலும் பழுத்த பழம் கிளையை விட்டு விலக மறுப்பதை போல இவள் இன்னமும் பாசம் என்னும் கிளையை விட மறுக்கிறாள், இவளை தனியே பிரித்து அழைத்து வந்து ஆட்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தாள் .

 2011, மே மாதம் 30 ஆம் தேதி - . விடியற் காலையிலேயே எழுந்த அம்மா  தன்னுடைய நித்திய பூஜைகளை முடித்துக்கொண்டு, உடன் வருபவர்கள் சாப்பிட தேவையான சிற்றுண்டி வகைகளை செய்து எடுத்துக்கொண்டு அனைவருடனும் கிள்ளியூர் சென்று இருக்கிறார். காலை முதலே அம்மா யாரிடமும் அதிகம் பேசவில்லையாம்.

கோவில் பூசாரிக்கு தகவல் சொல்லி அனுப்பி விட்டு, அவர் வருவதற்குள் அம்மாவும் மற்றவரும் மாரியம்மன் கோவிலுக்கு வந்து கோவிலை சுத்தம் செய்து, அலம்பி விட்டு கோலம் போட்டு பூஜைக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்து உள்ளனர். பூசாரி வந்த உடன் அவரைக்  கூப்பிட்டு கருவறையை திறக்கச்  சொல்லி இருக்கிறார் அம்மா. நேரே கருவறைக்குள் சென்று தான் அம்மனுக்கு அணிவித்த தாலி இருக்கிறதா என்று பார்த்து இருக்கிறார்.  அம்மனுக்கு அபிஷேகம் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் அம்மா மாவிளக்கு ஏற்றும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார். அம்மனுக்கு அபிஷேகம் முடிந்து தீபாராதனை காட்டும் பொழுது மாவிளக்கிற்கு தீபாராதனை காட்டிக்கொண்டிருந்த அம்மா, நிமிர்ந்து மாரியம்மனை நோக்கினார்.

 
கருவறையில் இருந்து தேவி ராஜ ராஜேஸ்வரி ப்ரத்யக்ஷமாகி அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியாய்  காட்சி தந்து தன்  இரு கரம் நீட்டி ருக்மணி, என் பிரியமான உயிரே, உன் ஜன்ம சாபல்யமடையும் கணம் நெருங்கி விட்டது. வா. என்னுடன் ஐக்கியமாகி விடு என்று அழைத்தாள்.அம்மாவின் முகத்தில் அப்பிடி ஒரு தேஜஸ். அந்த நேரத்திலும் கையில் ஏந்தி இருந்த தீபாரதனை தட்டை தூக்கியபடி, ஜகன் மாதா, என்னை ஆட்கொள்ள வந்தாயா என்ற அர்த்தத்தில் ஒரு புன்முறுவலுடன் அப்படியே நிலத்தில் சாய்ந்தார். அம்மாவின் இறுதி நிமிடங்களில் அவருடன் இருக்கும் பாக்கியம் அவர் பெற்ற பிள்ளைகள் யாருக்குமே கிட்டவில்லை. முன்பே கூறியதை போல இது தெய்வ சங்கல்ப்பம் என நினைக்கிறேன்.

ஆனாலும் இத்தகைய புண்ணியவதிக்கு, தேவியின் பிரிய ஆத்மாவுக்கு பிள்ளையாய் பிறந்த பாக்கியத்தை எண்ணி கர்வப் படுகிறோம். என் தாயின் குண நலன்களில் ஆயிரத்தில் ஒரு பங்கேனும் எங்களால் பின்பற்ற பட இயலுமாயின் நாங்களும் உய்வுண்டு  வாழ்வோம் என்பதில் ஐயம் இல்லை.
 
 
 

அன்னைக்கு ஓர் அஞ்சலி 

 
உருவம் கொடுத்தாய், வாழ்வில் உயர்வும் கொடுத்தாய்
இன்னல் கொடுத்தாலும் இன்முகம் காண்பித்தாய்
உன்னைப்போல் ஒருதாய் உலகார் கண்டதில்லை
ஊரார் மகவெனினும் ஊட்டியே நீ வளர்த்தாய்
தவமாய் இருந்து எனை பெற்றேன் என சொன்னாயே 
தவிக்கிறேன் உனை இழந்து  தாயே நீ வருவாயா 
 
உன் சொத்து என்று  உன் பாசம் ஒன்றுமட்டும் 
என்றென்றும் எனதென்று இறுமாந்து நின்றேனே 
உன் தாயை காணுகையில் என் தாயாய் நீ இருந்து 
எனை விட்டு போகாமல் இருந்திருக்க மாட்டாயா?
 
அதை செய்தாய் இதை செய்தாய் எனச்  சொல்லி 
எல்லோரும் அழுகையிலே  
எனக்கென்று சொல்லி அழ ஏதுமின்றி போனதம்மா 
 
என் அன்பு  என்னவென்று உன்மனம் அறிந்தாலும் 
எதிரி என எனைச் சாடி எல்லோரும் ஏசுகிறார் 
உன்பிள்ளை நான் இங்கு உறவின்றித் தவிக்கிறேன் 
உடன் இருந்து நீ என்னை உய்விக்க வருவாயா?
 
ஊட்டிய பாலும் சோறும் உதிரமாய் ஓடுதம்மா 
உனை இழந்த என் இதயம் உயிரின்றி வாடுதம்மா 
நிரபராதி நான் என்று நிச்சயம் நீ அறிவாய் 
ஆனாலும் எனக்கிந்த ஆயுள்  தண்டனை ஏன் ?
 
கடைசியாய் பிறந்ததால் கரையேறத் தெரியாமல் 
கட்டுமரமாய் உந்தன் கருணை தனை வேண்டுகிறேன் 
கண்டிப்பாய் நீ என்னை காத்திடுவாய் என்றெண்ணி 
கண்ணீர் மலரதனை உன் காணிக்கை ஆக்குகிறேன் 
 
சிறகு கொண்ட சிறு குஞ்சை தாய் பறவை  பிரிவதுபோல் 
சிறு பிள்ளை என்னை நீ பிரிந்து தான் போனாயே 
கண்கானா திருந்தாலும் கடுகத்தனை பிள்ளை நான் 
கண்கலங்க வைத்து நீ காணாமல் போனதும் ஏன் 
 
அன்னை நீ போன பின் அனாதையாய் போனேனே 
கடவுளாய் நீ இருந்து காப்பாற்ற வந்திடம்மா 
காமாக்ஷி விருத்தம் அதில் காண்கிறேன் உன் உருவை 
காத்து ரட்சித்து எனை கரை சேர்க்க வந்திடம்மா 
 
உன் உடல் இந்த உலகத்தை பிரிந்தாலும் 
உள்ளத்தில் கோவில் கட்டி உனை அதில் வைத்துள்ளேன் 
அன்னைக்கு நான் தந்த அஞ்சலி இதை ஏற்று 
அருவமாய் உடனிருந்து ஆட்கொண்டு பேணிடுவாய்!
 

எங்கள் தாய் என்றென்றும் எங்கள் உடன் இருந்து வழி நடத்துவாள் என்பதில் எள்ளளவும் எங்களுக்கு ஐயம் இல்லை.