Sunday 23 November 2014

சிறுகதை - பிள்ளை மனம் பித்து

மனசுக்கு ரொம்ப குதூகலமாய் இருந்தது. அப்பா அம்மா இருவரும் எங்களுடன் வந்து சிறிது நாட்கள் தங்கப் போவதாக கடிதம் வந்தது. எனது சந்தோஷத்தை பார்த்து எனது மகள் என்னப்பா புதுசா இருக்கு, தாத்தா பாட்டி நம்ம வீட்டுக்கு வருவது ஒன்னும் புதுசு இல்லையே என்றாள். ஆமாம் குட்டி. எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம். காரணம் என்ன தெரியுமா நாம் சென்னையில் இருக்கும் போது தாத்தா பாட்டி நம்ம வீட்டுக்கு நிறைய தடவை வந்தாலும் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு மேலே நம்மளோட தங்கினது இல்ல. சென்னையில் இருக்கும் நம் உறவுக் காரர்கள் வீட்டுக்கு போகணும்னு போய்டுவாங்க. ஆனால் இந்த ஊருல நம்ம உறவுக் காரங்க யாருமே இல்ல. அதனால தாத்தா பாட்டி இருவரும் புல் டைம் நம்மோடவே இருப்பாங்க. அப்பாவோட சந்தோஷத்திற்கு காரணம் அதுதான் என்றேன். சின்ன குழந்தைக்கு என்ன புரிந்ததோ, சரிப்பா என்று சொல்லி விளையாட சென்றாள்.
 
அம்மா அப்பா வரும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தேன். அலுவலகத்தில் ஒருவாரம் லீவ் போட்டு விட்டு அவர்களை எங்கெல்லாம் அழைத்து செல்லலாம் என்று பிளான் போட ஆரம்பித்தேன். என் மனைவியோ எனக்கு மேலே. அம்மாவிற்கு (மாமியாரை அம்மா என்று தான் அவள் அழைப்பாள்) என்னவெல்லாம் பிடிக்கும், அவர்களுக்கு வாய்க்கு ருசியாக என்னவெல்லாம் செய்து போடலாம் என்று லிஸ்ட் போட்டு அதற்கு தேவையான மளிகை சாமான் வாங்கிப் போட்டாள். பூக்காரியிடம் ஒரு வாரத்திற்கு 2 முழம் மல்லிகை பூ அதிகப் படியாக கொடுக்கச் சொன்னாள். மரிக்கொழுந்து கிடைத்தால் வாங்கி வரச் சொன்னாள். என் மாமியார் ஊரில் இருந்து வராங்க, அவங்களுக்கு மரிக்கொழுந்து ரொம்ப இஷ்டம் என்று சொல்லி மகிழ்ந்தாள்.
 
நாங்கள் எதிர்பார்த்த நாளும் வந்தது. காலை சீக்கிரமாக எழுந்து ரயில் நிலையம் சென்று அவர்களை அழைத்து வந்தேன். அன்று சனிக் கிழமை ஆகையால் என் மகளுக்கு பள்ளி விடுமுறை. அவள் விடுமுறை நாட்களில் சாதாரணமாக 8 மணி வரை தூங்குவாள். ஆனால் இன்றோ எனக்கு முன்னாலேயே எழுந்து தயாராக நின்றாள். தாத்தா பாட்டி வருகைக்காக வாசல் கேட் அருகிலேயே நின்று கொண்டிருந்தாள்.
 
ரயில் நிலையத்தில் அவர்கள் வருகைக்காக காத்திருந்த பொழுது, சென்ற முறை சொந்த ஊருக்கு போன பொழுது நடந்த நிகழ்வுகள் மனக் கண் முன்னே வந்து போனது. என் அம்மா நல்ல முற்போக்கு சிந்தனை உள்ளவர் தான். ஆனாலும் எல்லா தாயை போல அவர்களும் மகள் பாசத்திற்கு அடிமை ஆனார்கள். மகளை விட மகன் வசதியாக இருப்பதால் மகளுக்கு நிறைய செய்ய வேண்டும் என நினைத்தார்கள். ஆனால் மகளோ, எவ்வளவு கொடுத்தாலும் திருப்தி அடையவில்லை. இல்லாதும் பொல்லாதும் சொல்லி அம்மாவை எப்போதும் பதட்டத்திலேயே வைத்திருந்தாள். அவளுக்கு எவ்வளவு கொடுத்தாலும் விடியவில்லை. கூடப் பிறந்தவன் செய்த உதவிகளை அம்மாவிடம் சொல்லாமலும், மருமகளை பற்றி அவதூறு பேசியும் அம்மாவிடம் தன் காரியங்களை சாதித்து கொண்டு இருந்தாள். உடன் பிறந்தவன் செய்த உதவிகளை அம்மாவிடம் சொல்லாமல் எப்போதும் என் மீது குற்றம் சொல்லிக் கொண்டே இருந்தாள். நானும் அவளுக்கு செய்த உதவிகள் பற்றி அம்மாவிடம் ஒன்றும் சொல்ல வில்லை.
 
சென்ற முறை நான் ஊருக்கு சென்றிருந்த பொழுது அம்மாவிற்கு அவள் எழுதிய கடிதத்தை படித்து விட்டேன். அது குறித்து அம்மாவிடம் பேச, அம்மா விஷயம் தெரியாமல் என்னை கடுமையாக பேசிவிட்டார். அம்மாவின் பேச்சு எனக்கு அதிர்ச்சியை தந்தது. அம்மாவின் மனதில் அவள் நஞ்சை கலந்திருப்பது எனக்கு அப்பட்டமாக புரிந்தது. மீண்டும் மீண்டும் அவளுக்க ஆதரவாகவே அம்மா பேச, மேற்கொண்டு இதைபற்றி விவாதிப்பதோ அல்லது என் நிலையை விவரிப்பதோ விழலுக்கு இறைத்த நீர்தான் என்பது தெளிவாக எனக்கு தெரிந்தது. இவ்வளவு ஆன பிறகு தொடர்ந்து ஊரில் தங்குவது தேவையில்லாத மனக் கசப்பை உண்டாக்கும் என எண்ணி, மறுநாள் அங்கிருந்து கிளம்பி விட்டேன். அம்மாவும் என்னை தடுக்க வில்லை. மறுப்பு ஏதும் சொல்ல வில்லை.
 
அதன் பிறகு ஊருக்கு வந்து என் அலுவல்களில் மூழ்கி விட்டாலும் இந்த விஷயம் மனதில் ஒரு ஆறா வடுவாகிப் போனது. திடீர் என்று ஒருநாள் ஊரில் இருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. பக்கத்து வீட்டு அக்கா பேசினார். அம்மாவிற்கு உடல் நிலை சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பதாக சொன்னார்கள். அடித்து பிடித்துக் கொண்டு சென்றேன். வயதானத்தின் காரணமாக அம்மாவிற்கு ரத்த அழுத்தம் கூடுதலாக இருக்கிறது, தொடர்ந்து மருந்து மாத்திரைகள் சாப்பிட்டால் அதை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம் பயப்பட ஒன்றும் இல்லை என்று டாக்டர் கூறினார். எனக்கு மனதிற்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. அம்மாவிற்கு ஆஸ்பத்திரியில் இருக்க பிடிக்கவே இல்லை. ஓரிரு நாட்களில் டாக்டர் கவலை பட ஒன்றும் இல்லை இன்று டிஸ்சார்ஜ் செய்து விடலாம் என்று கூறினார். நான் டாக்டர் இடம் அம்மாவை நான் என்னுடன் அழைத்து போவது பற்றி தனியாக சென்று பேசினேன். ரயில் பயணம் செய்ய உடம்பு அவர்களுக்கு ஒத்துழைக்கட்டும் அப்போது அழைத்து செல்லுங்கள். 15 நாட்களுக்கு அவர்கள் ஓய்வு எடுக்கட்டும் என்று கூறினார்.
 
என் மனைவியை அம்மாவிற்கு உதவிக்கு விட்டு விட்டு வந்தேன். ஒரு வாரத்தில் மீண்டும் போன் வந்தது, அம்மா தற்போது நார்மல் ஆக இருக்கிறார் என்றும் நான் கிளம்பி ஊருக்கு வரட்டுமா என்று என் மனைவி கேட்டாள். நானும் அம்மா சரி என்று சொன்னால் கிளம்பி வா குழந்தைக்கும் ஸ்கூல் போகவேண்டும் என்றேன். மனைவி ஊருக்கு வந்த பிறகு தான் தெரிந்தது, அம்மா அவளிடம் தினமும் உடன் பிறந்தவள் பற்றி புலம்பி இருக்கிறார்கள். இடையிடையே என் மனைவியையும் ஏசி இருக்கிறார்கள். நான் பெத்து வளர்த்து ஆளாக்கினேன், நீ மினுக்கரே என்று திட்டினார்களாம். இவள் பதில் ஏதும் பேசாது குழந்தயை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு சென்று விட்டாளாம். அதோடு நில்லாமல் குழந்தையிடம் ஜாடை மாடையாக பேசி இருக்கிறார்கள். குழந்தை வந்து அப்படியே என்னிடம் சொன்னாள். நான் இதுவும் கடந்து போகும் என்று என் மனைவியிடம் கூறி சமாதானம் செய்தேன்.
 
அம்மா அப்பா வரும் தகவல் தெரிந்த நாள் நானும் என் மனைவியும் ஒன்றாய் பேசி ஒரு முடிவெடுத்தோம். அம்மா என்ன பேசினாலும் மறு பேச்சு பேசுவதில்லை என்று. அம்மாவுக்கு இந்த பயணம் ஒரு சந்தோஷமான அனுபவமாக இருக்கவேண்டும், நம்மால் அவருக்கு எந்த மனக் கிலேசமும் வரக் கூடாது என்பதில் திடமாக இருந்தோம். ரயில் வரும் அறிவிப்பு என் சிந்தனையை கலைத்தது.
 
தாத்தா பாட்டியை பார்த்த குழந்தைக்கும், பேத்தியை பார்த்த அவர்களுக்கும் மட்டில்லா மகிழ்ச்சி. ஒருவாரம் விடுப்பு எடுத்துக் கொண்டு நாங்கள் எல்லோரும் கோயில், குளம், சுற்றுலா தலங்கள் என்று ஒரு இடம் விடாமல் சுற்றினோம். எங்கள் மனம் குளிர அவர்களுக்கு பணிவிடை செய்தோம். குழந்தை பாட்டியிடம் இடை விடாது நிறைய கதைகள் கேட்டாள். பத்து நாட்கள் போனதே தெரியவில்லை.
 
அம்மாவிற்கு பத்து நாட்களுக்கு மேல் இருப்பு கொடுக்க வில்லை. அடுத்த வாரம் என் உடன் பிறந்தவள் அம்மாவை பார்க்க வருவதாக போனில் சொன்னாளாம் அதனால் தான் அம்மாவிற்கு ஊர் நினைப்பு வந்து விட்டது. ஊரில் நிறைய வேலைகள் இருக்கிறது, அதனால் நாங்கள் கிளம்புகிறோம் ரயில் டிக்கெட் எடுத்துவிடு என்று கூற, ஊருக்கு போக ஏற்பாடு செய்தேன். அவர்களை வழி அனுப்ப நாங்கள் மூவரும் ரயில் நிலையம் சென்றோம். அம்மாவின் முகத்தில் மகிழ்ச்சி. பழைய பொலிவு திரும்பி இருந்தது. அவர்களுக்கு பிரியா விடை கொடுத்து நிம்மதியாக வீடு வந்து சேர்ந்தோம். எங்களுக்கு தெரியும் அவள் மீண்டும் அம்மா மனதில் நஞ்சை விதைப்பாள் என்று.

தாம்பரம் பீச் லோக்கல்

 தெற்கு சென்னை வாசிகளின் வாழ்வாதாரம் எலெக்ட்ரிக் டிரைன் எனப்படும் மின்சார தொடர் வண்டி. மும்பை வாசிகள் மொழியில் லோக்கல் டிரைன்.

1980 முதலே எனக்கு லோக்கலில் அடிக்கடி பயணிக்கும் அனுபவம் கிடைத்தது.  அதற்கு முன் பலமுறை சென்னை வந்த போதெல்லாம் லோக்கலில் பயணம் செய்யும் அனுபவம் இருந்தாலும் மேல்நிலை பள்ளியில் சேர்ந்த பிறகு, சுயமாக, தனியாக லோக்கலில் பயணம் செய்யும் அனுபவம் மறக்க முடியாது. வண்டி காலியாக இருந்தாலும், உட்கார இருக்கை இருந்தும் வாசல் படியில் நின்று காற்று வாங்கிக் கொண்டு பயணம் செய்வது என்பது ஒரு சுகமான அனுபவம்.

ஆதம்பாக்கத்தில் சகோதரியின் வீட்டில் தங்கி படித்துக் கொண்டிருந்தேன். அந்த கால கட்டத்தில் எல்லா பொருட்களுக்கும் மாம்பலம் தான் செல்ல வேண்டும். மலிவாக அங்கு தான் கிடைக்கும். பரங்கிமலை ரயில் நிலையத்தில் சைக்கிளை போட்டுவிட்டு லோக்கல் பிடித்து மாம்பலம் சென்று பொருட்கள் வாங்கி திரும்புவது வழக்கம். மாம்பலம் சென்றால் லட்சுமி சாப்ட்டி கார்னரில் கோன் ஐஸ் சாப்பிடாமல் வருவதில்லை.


திரும்பும் பொழுது வண்டி கூட்டமாக இருந்தாலும் பரங்கி மலை வந்தால் வண்டி காலி ஆகி விடும். அந்த கால கட்டத்தில் புறநகர் விரிவாக்கம் பரங்கி மலை வரைதான்.

அதன் பிறகு 1982-85 கல்லூரி படித்த கால கட்டத்தில் student concession வாங்கி வைத்துக் கொண்டு லோக்கலில் நிறைய பயணம் செய்திருக்கிறேன். ராஜஸ்தான் யூத் அசோசியேஷன் மூலம் கல்லூரி பாட புத்தகங்கள் பெற்று அதை வாங்கவும் கொடுக்கவும் பலமுறை பயணம் செய்து இருக்கிறேன்.

விடுமுறை நாட்களில் அமெரிக்கன் லைப்ரரி செல்லும் பழக்கம் அப்போது தான் வந்தது. Audio Visual Equipments எனக்கு பரிச்சயம் ஆனது அங்கேதான். அங்கு லைப்ரரியில் கிடைக்கும் புத்தகங்களும்  முற்றிலும் குளிரூட்டப்பட்ட அந்த அமைதியான சூழலும் எனக்கு மிகவும் பிடித்து போனது.

லோக்கல் இருந்ததால் எனக்கு ரயில் நிலையம் சார்ந்த பகுதிகள் பரிச்சயம் ஆனது. வாழ்வில் தேடல் தொடங்கிய காலம் அது. இன்னும் தொடருகிறது.

1985 செப்டம்பர் மாதத்தில் வேலை தேடி என் தமக்கை வீட்டிற்கு புவனேஸ்வரம் (ஒரிசா) சென்றேன்.  பின் அங்கிருந்து அதே வருடம் அக்டோபர் மாதத்தில் என் அண்ணாவின் வீட்டிற்கு கான்பூர் சென்றேன். எனக்கு  பிடித்த நீண்ட ரயில் பயணம்.

கான்பூரில் வேலை கிடைத்து. முதலில் Calcutta Security Printers (35 days), பிறகு Lohia Machines Ltd. (Presently LML Ltd.) 2 வருடங்கள்.  1988 January பாரத ஸ்டேட் வங்கியில் லட்சுமணபுரி (LUCKNOW) வட்டார தலைமை அலுவலகத்தில் சென்று சேர்ந்தேன். எனது உத்தர பிரதேச அனுபவம் பற்றி ஒரு தனி பதிவு இடுகிறேன்.

1992இல் மீண்டும் சென்னை திரும்பினேன். பாரத ஸ்டேட் வங்கியில் சென்னை வட்டார தலைமை அலுவலகத்தில் மாற்றலாகி வந்து சேர்ந்தேன். 1992 தொடங்கி 1999 இறுதி வரை தினமும் அலுவலகம் செல்ல மீண்டும் லோக்கல் பயணம் .

பிறகு 2000 அக்டோபரில் மாற்றலாகி நாகர்கோயில் பயணம். 2003இல் தக்கலை கிளைக்கு மாற்றல். 2004இல் மார்த்தாண்டம் கிளைக்கு மாற்றல். 2004 ஏப்ரல் மாதம் மும்பை தகவல் பாதுகாப்பு பிரிவுக்கு மாற்றல் ஆகி சென்றேன்.

7 ஆண்டுகள் கழித்து 2011-Novemberஇல் SBI வேலையில் விருப்ப ஒய்வு கொடுத்து சென்னையில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் சேர்ந்தேன்.

மீண்டும் 2012 முதல் எனக்கு பிடித்த லோக்கல் மின்சார வண்டி பயணம். இப்பொது meter guage broad guage ஆக மாறிவிட்டது. ஆனாலும் காலை வேலையில் அதே கூட்டம். சென்னையில் ஜனத் தொகை பெருகிவிட்டது. புலம் பெயர்ந்த வட இந்திய தொழிலாளர்கள் அதிகமாகி விட்டனர். புறநகர் தற்போது பரங்கி மலையில் இருந்து செங்கல்பட்டு வரை விரிவடைந்து விட்டது. 1980களில் பரங்கிமலை எப்படி இருந்ததோ தற்போது குரோம்பேட்டை இருக்கிறது.

காலையில் லோக்கல் குரோம்பேட்டையில் நிரம்பி மாலையில் காலியாகிறது. ராதா நகர், புருஷோத்தம் நகர், ஹஸ்தினாபுரம், நெமிலிச்சேரி, நன்மங்கலம், கோவிலம்பாக்கம் என பல பகுதிகளுக்கு குரோம்பேட்டை மைய பகுதியாக செயல் படுகிறது.

லோக்கலில் முதல் வகுப்பு பெட்டி பாதியாக குறைக்கப்பட்டு விட்டது. ஆனால் முதல் வகுப்பில் சீசன் எடுத்து பயணம் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. இதன் காரணமாக முதல் வகுப்பு பயணமும் நெரிசலாக தான் உள்ளது. 2015 மார்ச் மாதத்தில் பரங்கிமலை கோயம்பேடு மெட்ரோ வழித் தடம் திறக்கப் படும் என்று தகவல். அது வந்தால் ஒருவேளை காலை வேலையில் லோக்கலில் சற்று நெரிசல் குறைய வாய்ப்பு உள்ளது.

எப்படி இருந்தாலும் சென்னை ஒரு Cosmopolitan City ஆகிவிட்டது என்பது நிதர்சனமான உண்மை.

Saturday 22 November 2014

இராஜேந்திர சோழன்

அண்மையில் எழுத்து யோகி திரு பாலகுமாரன் அவர்களின் இராஜேந்திர சோழன் (கங்கை கொண்ட சோழன் என்று அழைக்கப் பட்டவர்) நான்கு பாகங்களும் படிக்கும் பேறு கிடைத்தது.  இது சரித்திர நாவல் தான். இதில் ஒரு சுவயூட்டலுக்காக ஆசிரியரின் கற்பனைகளும் சேர்த்து நாவலாக எழுதப் பட்டிருக்கிறது என்றாலும், பண்டை நாகரிகமும் கலாச்சாரமும் அறிந்துகொள்ள விரும்புவோர் கண்டிப்பாக படிக்க வேண்டிய ஒன்றாகும்.
கல்கியின் பொன்னியின் செல்வன் இவை அனைத்திற்கும் முன்னோடி என்பது மறுக்க முடியாது. ஆனாலும் பாலகுமாரனின் வார்த்தை பிரயோகங்களும் எழுத்து நடையும் இந்த நாவலுக்கு ஒரு புது வடிவத்தை கொடுத்துள்ளது என்பது மிகை அல்ல.
ஒவ்வொரு பாகமும் 500 பக்கங்களுக்கு மேல். மொத்தம் 4 பாகங்கள்.  ஒவ்வொரு தமிழனும் அதுவும் தஞ்சை மண்ணில் பிறந்த ஒவ்வொருவரும் படித்து அறியவேண்டிய ஒரு நூலாகும்.

Friday 18 April 2014

காமாக்ஷி விருத்தம்


காமாக்ஷி விருத்தமதை படிக்கும் பொழுது
அம்மா உன்குரல் செவியிலே கேக்குதே
இதயம் வேர்த்து இமைகள் கசியுதே
உன்குரல் இனி நேரில் கேட்க இயலாது
என்றதை நினைக்கையில் மனம் மருகி போகுதே....
என் தாயின் நினைவாக...
காமாக்ஷி  விருத்தம்

மங்களஞ்சேர்   காஞ்சிநகர்  மன்னுகாமாட்சி   மிசை
துங்கமுள  நற்பதிகஞ்  சொல்லவே --   திங்கட்
புயமருவும்  பணியனியும்  பரமனுளந்தனின்   மகிழும்
கயமுகவைங்  கரனிருதாள்   காப்பு.

ஆசிரிய  விருத்தம்

சுந்தரி  சௌந்தரி நிரந்தரி  துரந்தரி
  சோதியாய்  நின்ற  உமையே,
சுக்ர  வாரத்திலுனை  கண்டு  தரிசித்தவர்கள்
 துன்பத்தை  நீக்கி  விடுவாய்,
சிந்தைதனிலுன்  பாதந்  தன்னையே  தொழுபவர்கள்
   துயரத்தை   மாற்றி  விடுவாய்,
ஜெகமெலா  முன்  மாய்கை  புகழவென்னா  லாமோ
   சிறியனால்  முடிந்திடாது.
சொந்தவுன்   மைந்தனா  யெந்தனை  யிரட்சிக்கச்
    சிறிய  கடன்  உன்னதம்மா,
சிவ   சிவ  மஹேஸ்வரி   பரமனிட  யீஸ்வரி
   சிரோன்மணி   மனோன்  மணியுநீ
அந்தரி  துரந்தரி  நிரந்தரி  பரம்பரி
   யனாத   ரட்சகியும்  நீயே,
அழகான   காஞ்சியில்  புகழாக  வாழ்ந்திடும்
  அம்மை   காமாட்சி   யுமையே.                            [ 1 ]


பத்துவிரல்  மோதிரம்  எத்தனை  பிரகாசமது
  பாடகந்   தண்டை   கொலுசும்,
பச்சை  வைடூரியம்  மிச்சையா  இழைத்திட்ட
  பாதச்  சிலம்பினொலியும்
முத்து  மூக்குத்தியும்  ரத்தினப்  பதக்கமும்
   மோகன  மாலை  யழகும்,
முழுதும்  வைடூரியம்   புஷ்பரா  கத்தினால்
   முடிந்திட்ட  தாலி  யழகும்,
சுத்தமாயிருக்கின்ற  காதினிற்   கம்மலுஞ்
  செங்கையிற்  பொன்   கங்கணமும்
ஜெகமெலாம்  விலைபெற்ற  முகமெலா  மொளியுற்ற
  சிறுகாது   கொப்பி   னழகும்
அத்திவரதன்   தங்கை   சக்தி   சிவரூபத்தை
  யடியனாற் சொல்ல  திறமோ
அழகான   காஞ்சியில்  புகழாக  வாழ்ந்திடும்
  அம்மை   காமாட்சி   யுமையே.                             [ 2 ]

கெதியாக வுந்தனைக் கொண்டாடி நினதுமுன்
   குறைகளைச் சொல்லி  நின்றும்,கொடுமையா
யென்மீதில் வறுமையாய் வைத்து நீ
   குழப்பமா யிருப்பதேனோ,
சதிகாரியென்று  நானறியாம லுந்தனைச்  
   சதமாக  நம்பி னேனே,
சற்றாகிலும் மனது வைத்தென்னை ரட்சிக்க
   சாதக னக்  கில்லையோ?
மதிபோல வொளியுற்ற புகழ்நெடுங் கரமுடைய
  மதகஜனை யீன்ற தாயே,
மாயனிட  தங்கையே  பரமனது  மங்கையே
   மயானத்தில்   நின்ற  வுமையே
அதிகாரி யென்றுநா னாசையால்  நம்பினேன்
  அன்பு வைத்தென்னை யாள்  வாய்,
அழகான   காஞ்சியில்  புகழாக  வாழ்ந்திடும்
  அம்மை   காமாட்சி   யுமையே.                               [ 3 ]

பூமியிற்  பிள்ளையாய்ப்  பிறந்தும் வளர்ந்துநான்  
  பேரான  ஸ்தலமு மறியேன்,
பெரியோர்கள் தரிசன மொருநாளும் கண்டுநான்
  போற்றிக்  கொண்டாடி  யறியேன்
வாமியென்  றுன்னைச்  சிவகாமி  யென்றே சொல்லி
  வாயினாற்  பாடியறியேன்.
மாதா  பிதாவினது  பாதத்தை  நானுமே
  வணங்கியொரு  நாளுமறியேன்,
சற்குருவின்  பாதார  விந்தங்களைக்  கண்டு
  சாஷ்டாங்க  ெண்டனிட்டறியேன்,
ஆமிந்த   பூமியிலடியனைப்   போல்   மூடன்
  ஆச்சிநீ   கண்ட  துண்டோ,
அழகான   காஞ்சியில்  புகழாக  வாழ்ந்திடும்
  அம்மை   காமாட்சி   யுமையே.                                [ 4 ]


பெற்றதா  யென்றுன்னை  மெத்தவும்  நம்பிநான்
  பிரியமா யிருந்தே னம்மா
பித்தலாட்டக் காரியென்று நானறியாது உன்
  புருஷனை மறந்தே னம்மா,
பக்தனாயிருந்து  உன் சித்தமும்  இரங்காமல்
   பாராமுகம்  பார்த்திருந்தால்
பாலன்  யானெப்படி  விசனமில்  லாமலே
   பாங்குட னிருப்பதம்மா,
இத்தனை மோசங்க ளாகாது ஆகாது
   இது தர்மமல் லவம்மா,
எந்தனை  ரக்ஷிக்க  சிந்தனை  களில்லையோ
   யிது  நீதி   யல்ல  வம்மா
அத்தி  முகனாசையா  லிப்புத்திரனை  மறந்தாயோ
   அதை  யெனக்கருள்   புரிகுவாய்,
அழகான   காஞ்சியில்  புகழாக  வாழ்ந்திடும்
   அம்மை   காமாட்சி   யுமையே.                               [ 5 ]


மாயவன்  தங்கை  நீ  மரகத  வல்லிநீ
     மணிமந்திர   காரிநீயே
மாயசொ  ரூபிநீ   மகேஸ்வரியு   மானநீ
    மலையரை    யன்மக    ளானநீ
தாயே  மீனாட்சிநீ   சற்குண   வல்லிநீ
    தயாநிதி   விசாலாட்சிநீ,
தாரணியில்  பெயர் பெற்ற  பெரிய நாயகியும்நீ
    சரவணனை   யீன்ற  வளும்நீ
பேய்களுடனாடிநீ     அத்தனிட    பாகமதில்
    பேறுபெற    வளர்ந்த   வளும்நீ,
பிரணவசொரூபிநீ   பிரசன்ன   வல்லிநீ
     பிரியவுண்    ணாமுலையுநீ
அகிலாண்டவல்லி    நீயே  
அழகான   காஞ்சியில்  புகழாக  வாழ்ந்திடும்
  அம்மை   காமாட்சி   யுமையே.                               [ 6 ]

பொல்லாத  பிள்ளையாய்  இருந்தாலும்  பெற்றதாய்
    புத்திகளைச்    சொல்லவில்லையோ,
பேய்பிள்ளை   யானாலும்  தான்  பெற்ற  பிள்ளையை
 பிரியமாய்  வளர்க்க  வில்லையோ
கல்லாகிலும்  மூச்சு  நில்லாமல்  வாய்  விட்டுக்
  கதறி  நானழுத   குரலில்,
கடுகதனிலெட்டிலொரு   கூறுவதி  லாகிலுன்
  காதி  னில்   நுழைந்த  தில்லையோ,
இல்லாத  வன்   மங்களென்   மீதிலேனம்மா
    இனி  விடுவதில்லை  சும்மா
இருவரும்  மடிபிடித்துத்  தெருதனில்   வீழ்வது
     இதுதரும    மல்ல   வம்மா,
எல்லாரு   முன்னையே   சொல்லியே  யேசுவார்
      அது   நீதியல்ல   வம்மா,
அழகான   காஞ்சியில்  புகழாக  வாழ்ந்திடும்
  அம்மை   காமாட்சி   யுமையே.                               [ 7 ]

முன்னையோர்   சென்மாந்திர  மேனென்ன  பாவங்கள்
     இம்   மூடன்   செய்தா   னம்மா
மெய்யென்று   பொய்சொல்லி  கைதனிற் பொருள்தட்டி
   மோசங்கள்    பண்ணினேனோ,
என்னமோ  தெரியாது  இக்கணந்  தன்னிலே
   இக்கட்டு   வந்த  தம்மா,
ஏழைநான்   செய்தபிழை   தாய்பொறுத்தருள்   தந்து
     என்கவலை   தீரு   மம்மா.
சின்னங்களாகாது   ஜெயமில்லையோ  தாயே
   சிறுநாண   மாகுதம்மா,
சிந்தனைக  ளென்மீதில்   வைத்து   நற்பாக்கியமருள்
    சிவசக்தி   காமாட்சி  நீ
அன்னவாகனமேறி   யானந்தமாக  வுன்
   அடியேன்  முன்வந்து  நிற்பாய்,
அழகான   காஞ்சியில்  புகழாக  வாழ்ந்திடும்
  அம்மை   காமாட்சி   யுமையே.                               [ 8 ]

எந்தனைப்   போலவே  செனன  மெடுத்தோர்கள்
   இன்பமாய்    வாழ்ந்  திருக்க,
யான்  செய்த  பாவமோ  யித்தனை   வறுமையினுள்
    உன்னடியேன்   தவிப்பதம்மா,
உன்னையே  துணையென்   றுறுதியாய்   நம்பினேன்
    உன்  பாதஞ்   சாட்சியாக
உன்னையன்றி   வேறுதுணை  யினியாரை   யுங்காணேன்
  உலகந்தனி    லெந்தனுக்கு
பிள்ளை  யென்றெண்ணி   நீ  சொல்லாம  லென்வறுமை
  போக்கடித்   தென்னைரட்சி,
பூலோக  மெச்சவே   பாலன்  மார்க்கண்டன்போல்
  பிரியமாய்க்    காத்திடம்மா,
அன்னையே யின்னமுன்ன  டியேனை   ரட்சிக்க
   அட்டி   செய்யா   தேயம்மா,
அழகான   காஞ்சியில்  புகழாக  வாழ்ந்திடும
  அம்மை   காமாட்சி   யுமையே.                               [ 9 ]

பாரதனிலுள்ளவும்  பக்கியத்தோடென்னைப்
  பாங்குட   னிரட்சிக்கவும்
பக்தியாய்   உன்பாதம்   நித்தந்   தரிசித்த
  பாலருக்   கருள்   புரியவும்,
சீர்பெற்ற  தேகத்தில்  சிறுபிணிகள்  வாராமல்
    செங்கலிய   னணு    காமலும்,
சேயனிட  பாக்கியஞ்   செல்வங்களைத்  தந்து
    ஜெயம்  பெற்று  வாழ்ந்து  வரவும்,
பேர்பெற்ற   காலனைப்   பின்தொடர  வொட்டாமற்
    பிரியமாய்க்    காத்திடம்மா,
பிரியமாயுன்மீதில்    சிறுயனான்   சொன்னகவி
   பிழைகளைப்    பொறுத்து   ரட்சி,
ஆறதனில்   மணல்   குவித்  தரியபூசை   செய்தவென்
    னம்மையேகாம்பரி     நீயே,
அழகான   காஞ்சியில்  புகழாக  வாழ்ந்திடும்
  அம்மை   காமாட்சி   யுமையே.                               [ 10 ]

எத்தனை  ஜெனனம்   எடுத்தேனோ  தெரியாது
  இப்பூமி   தன்னி   லம்மா,
இனியாகிலும்   கிருபை  வைத்தென்னை   ரட்சியும்
   இனி   ஜெனன்   மெடுத்   திடாமல்,
முத்திதர   வேணுமென்று   உன்னையே    தொழுதுநான்
    முக்காலும்    நம்பி   னேனே,
முன்பின்னுந்   தோணாத   மனிதரைப்   போலநீ
      முழித்திருக்    காதே   யம்மா,
வெற்றி  பெற  வுன்மீதில்   பக்தியாய்   நான்   சொன்ன
      விருத்தங்கள்    பதினொன்றையும்,
விருப்பமாய்க்   கேட்டு   நீயளித்திடுஞ்   செல்வத்தை
     விமலனா    ரேசப்    போறார்.
அத்தனிட   பாகமதை   விட்டு   வந்தேயென்
     அருங்குறை   யைத்தீரு    மம்மா,
அழகான   காஞ்சியில்  புகழாக  வாழ்ந்திடும்
  அம்மை   காமாட்சி   யுமையே.                               [ 11 ]

               ************************************