Sunday 23 November 2014

தாம்பரம் பீச் லோக்கல்

 தெற்கு சென்னை வாசிகளின் வாழ்வாதாரம் எலெக்ட்ரிக் டிரைன் எனப்படும் மின்சார தொடர் வண்டி. மும்பை வாசிகள் மொழியில் லோக்கல் டிரைன்.

1980 முதலே எனக்கு லோக்கலில் அடிக்கடி பயணிக்கும் அனுபவம் கிடைத்தது.  அதற்கு முன் பலமுறை சென்னை வந்த போதெல்லாம் லோக்கலில் பயணம் செய்யும் அனுபவம் இருந்தாலும் மேல்நிலை பள்ளியில் சேர்ந்த பிறகு, சுயமாக, தனியாக லோக்கலில் பயணம் செய்யும் அனுபவம் மறக்க முடியாது. வண்டி காலியாக இருந்தாலும், உட்கார இருக்கை இருந்தும் வாசல் படியில் நின்று காற்று வாங்கிக் கொண்டு பயணம் செய்வது என்பது ஒரு சுகமான அனுபவம்.

ஆதம்பாக்கத்தில் சகோதரியின் வீட்டில் தங்கி படித்துக் கொண்டிருந்தேன். அந்த கால கட்டத்தில் எல்லா பொருட்களுக்கும் மாம்பலம் தான் செல்ல வேண்டும். மலிவாக அங்கு தான் கிடைக்கும். பரங்கிமலை ரயில் நிலையத்தில் சைக்கிளை போட்டுவிட்டு லோக்கல் பிடித்து மாம்பலம் சென்று பொருட்கள் வாங்கி திரும்புவது வழக்கம். மாம்பலம் சென்றால் லட்சுமி சாப்ட்டி கார்னரில் கோன் ஐஸ் சாப்பிடாமல் வருவதில்லை.


திரும்பும் பொழுது வண்டி கூட்டமாக இருந்தாலும் பரங்கி மலை வந்தால் வண்டி காலி ஆகி விடும். அந்த கால கட்டத்தில் புறநகர் விரிவாக்கம் பரங்கி மலை வரைதான்.

அதன் பிறகு 1982-85 கல்லூரி படித்த கால கட்டத்தில் student concession வாங்கி வைத்துக் கொண்டு லோக்கலில் நிறைய பயணம் செய்திருக்கிறேன். ராஜஸ்தான் யூத் அசோசியேஷன் மூலம் கல்லூரி பாட புத்தகங்கள் பெற்று அதை வாங்கவும் கொடுக்கவும் பலமுறை பயணம் செய்து இருக்கிறேன்.

விடுமுறை நாட்களில் அமெரிக்கன் லைப்ரரி செல்லும் பழக்கம் அப்போது தான் வந்தது. Audio Visual Equipments எனக்கு பரிச்சயம் ஆனது அங்கேதான். அங்கு லைப்ரரியில் கிடைக்கும் புத்தகங்களும்  முற்றிலும் குளிரூட்டப்பட்ட அந்த அமைதியான சூழலும் எனக்கு மிகவும் பிடித்து போனது.

லோக்கல் இருந்ததால் எனக்கு ரயில் நிலையம் சார்ந்த பகுதிகள் பரிச்சயம் ஆனது. வாழ்வில் தேடல் தொடங்கிய காலம் அது. இன்னும் தொடருகிறது.

1985 செப்டம்பர் மாதத்தில் வேலை தேடி என் தமக்கை வீட்டிற்கு புவனேஸ்வரம் (ஒரிசா) சென்றேன்.  பின் அங்கிருந்து அதே வருடம் அக்டோபர் மாதத்தில் என் அண்ணாவின் வீட்டிற்கு கான்பூர் சென்றேன். எனக்கு  பிடித்த நீண்ட ரயில் பயணம்.

கான்பூரில் வேலை கிடைத்து. முதலில் Calcutta Security Printers (35 days), பிறகு Lohia Machines Ltd. (Presently LML Ltd.) 2 வருடங்கள்.  1988 January பாரத ஸ்டேட் வங்கியில் லட்சுமணபுரி (LUCKNOW) வட்டார தலைமை அலுவலகத்தில் சென்று சேர்ந்தேன். எனது உத்தர பிரதேச அனுபவம் பற்றி ஒரு தனி பதிவு இடுகிறேன்.

1992இல் மீண்டும் சென்னை திரும்பினேன். பாரத ஸ்டேட் வங்கியில் சென்னை வட்டார தலைமை அலுவலகத்தில் மாற்றலாகி வந்து சேர்ந்தேன். 1992 தொடங்கி 1999 இறுதி வரை தினமும் அலுவலகம் செல்ல மீண்டும் லோக்கல் பயணம் .

பிறகு 2000 அக்டோபரில் மாற்றலாகி நாகர்கோயில் பயணம். 2003இல் தக்கலை கிளைக்கு மாற்றல். 2004இல் மார்த்தாண்டம் கிளைக்கு மாற்றல். 2004 ஏப்ரல் மாதம் மும்பை தகவல் பாதுகாப்பு பிரிவுக்கு மாற்றல் ஆகி சென்றேன்.

7 ஆண்டுகள் கழித்து 2011-Novemberஇல் SBI வேலையில் விருப்ப ஒய்வு கொடுத்து சென்னையில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் சேர்ந்தேன்.

மீண்டும் 2012 முதல் எனக்கு பிடித்த லோக்கல் மின்சார வண்டி பயணம். இப்பொது meter guage broad guage ஆக மாறிவிட்டது. ஆனாலும் காலை வேலையில் அதே கூட்டம். சென்னையில் ஜனத் தொகை பெருகிவிட்டது. புலம் பெயர்ந்த வட இந்திய தொழிலாளர்கள் அதிகமாகி விட்டனர். புறநகர் தற்போது பரங்கி மலையில் இருந்து செங்கல்பட்டு வரை விரிவடைந்து விட்டது. 1980களில் பரங்கிமலை எப்படி இருந்ததோ தற்போது குரோம்பேட்டை இருக்கிறது.

காலையில் லோக்கல் குரோம்பேட்டையில் நிரம்பி மாலையில் காலியாகிறது. ராதா நகர், புருஷோத்தம் நகர், ஹஸ்தினாபுரம், நெமிலிச்சேரி, நன்மங்கலம், கோவிலம்பாக்கம் என பல பகுதிகளுக்கு குரோம்பேட்டை மைய பகுதியாக செயல் படுகிறது.

லோக்கலில் முதல் வகுப்பு பெட்டி பாதியாக குறைக்கப்பட்டு விட்டது. ஆனால் முதல் வகுப்பில் சீசன் எடுத்து பயணம் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. இதன் காரணமாக முதல் வகுப்பு பயணமும் நெரிசலாக தான் உள்ளது. 2015 மார்ச் மாதத்தில் பரங்கிமலை கோயம்பேடு மெட்ரோ வழித் தடம் திறக்கப் படும் என்று தகவல். அது வந்தால் ஒருவேளை காலை வேலையில் லோக்கலில் சற்று நெரிசல் குறைய வாய்ப்பு உள்ளது.

எப்படி இருந்தாலும் சென்னை ஒரு Cosmopolitan City ஆகிவிட்டது என்பது நிதர்சனமான உண்மை.

No comments:

Post a Comment

உங்கள் விமர்சனம்/ கருத்துக்கள் அளித்து எனக்கு ஊக்கம் அளிக்க வேண்டுகிறேன்