Monday 20 January 2014

நா.ச.சு.ம (3) - (டைகர்) கோவிந்தராஜன் (2)

(டைகர்) கோவிந்தராஜன்  - (2)

 
டைகர் அவர்கள் எனக்கு நல்ல நண்பர், ஆசான், வழிகாட்டி இன்னும் என்னவெல்லாம் உண்டோ எல்லாம் சொல்லலாம். எங்களுக்குள் அப்படி ஒரு புரிதல் (Chemistry) அமைந்தது.
 
ஜனவரி 23, 1999இல் நான் த.நா.கி.ச. விற்கு டைகர் அவர்களால் அழைக்கப்பட்டேன்.
 
விஷயம் இதுதான். ரோடக், ஹரியானாவில் நடைபெறும் விஜய் ஹஜாரே கோப்பைக்கான 16 வயதிற்கு உட்பட்ட தென் மண்டல அணியின் பொறுப்பாளராக என்னை நியமித்து, ஜனவரி  23, 1999 அன்று இரவு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் வண்டியில் தில்லி சென்று அங்கிருந்து ரோடக் செல்ல வேண்டும். அங்கு நடக்கும் பந்தயங்களில் கலந்து கொண்டு விட்டு பிறகு தென் மண்டல அணியை பத்திரமாக சென்னை அழைத்து வர வேண்டும். இததான் எனக்கு இடப்பட்ட கட்டளை.
 
நான் கொஞ்சம் மலைத்துப்  போனேன். முதல் முறையாக எனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பு, டைகர் அவர்கள் என்னை  நம்பி  ஒரு பெரிய பொறுப்பை கொடுத்துள்ளார். நன்றாக செய்ய வேண்டுமே என்ற படபடப்பு ஒருபுறம். மற்றொரு புறம் வீட்டில் என் மனைவிக்கு தகவல் சொல்ல வேண்டும். இரண்டு கைக் குழந்தைகளை வைத்துக் கொண்டு அவள் எப்படி சமாளிப்பாள் , ஒருவேளை நான் போகக் கூடாது என்று மறுத்து விடுவாளோ? அப்படி செய்தால் எப்படி சமாளிப்பது? டைகர் இடம் எனது சங்கடத்தை சொன்னேன். திரு கும்பட் அவர்களின் அறையில் இருந்தே எனது வீட்டுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். சுருக்கமாக விஷயம் சொல்லி விட்டு, இரவு நான் தில்லிக்கு கிளம்ப வேண்டும் என்று சொன்னேன். மேலும் இது டைகர் அவர்களின் விருப்பம் என்பதையும் சொன்னேன்.
 
சேப்பாக்கத்தில் இருந்து உடனடியாக எனது வீடு திரும்பினேன். வீடு சென்று சேரும் பொழுது மணி இரவு 7.30. 10.30க்கு எனக்கு ரயில். அதற்கு முன் நான் செய்ய வேண்டிய விவரங்களை வரும் நபரிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். கொஞ்சம் படபப்ப்பு தான். ஆனாலும் எனக்குள் நம்மால் முடியும் என்ற ஒரு நம்பிக்கை  ஒரு பிரயாண  பையில்  கையில் கிடைத்த துணிகளை எடுத்து வைத்துக்கொண்டு , அவசரமாக உணவு உண்டு 8.30 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டேன்.  
 
அப்போது கைபேசி வசதி எல்லாம் இல்லை. இரண்டு நாள் கழித்து ரோடக் சென்ற பிறகுதான் என் மனைவியோடு பேச முடியும் என்ற நிலைமை. 9.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சென்று சேர்ந்தால் அங்கு தா.நா.கி.ச.வைச் சேர்ந்த நபர் மற்றும் என்னுடன் பயணம் செய்யகூடிய விளையாட்டு வீரர்கள் நின்று கொண்டு இருந்தனர்.
 
வந்தவர் என் வசம் பயண சீட்டு மற்றும் நான் செய்ய வேண்டிய விவரங்கள் அடங்கிய பைல்  ஒன்றையும் கொடுத்தார். பயண சீட்டில் என் பெயர் சம்பத், வயது 43 என எழுதப்பட்டிருந்தது. எனக்கோ அப்போது வயது 33 தான். மேலும் 33 வயதிலும் நான் 25 வயது போலத்தான் காட்சி அளித்தேன். என்ன செய்வது, அமைதியாக பயணச் சீட்டு மற்றும் பைல் -ஐ பெற்றுக் கொண்டு, விளையாட்டு வீரர்கள் யார் யார் என அறிய முயன்றேன். ஒவ்வொருவரையும் தங்களை அறிமுகப்  படுத்திக் கொள்ள சொன்னேன். அவர்களின் விவரங்கள்  இதோ :
 
  1. கலீல்
  2. விக்ரம் குமார் 
  3. சௌகலே 
  4. ஆதித்யா ஸ்ரீகாந்த்  (கிருஷ்  ஸ்ரீகாந்தின் மகன்)
  5. ஜெய ஷங்கர் 
  6. அம்பட்டி ராயுடு (IPL ராயுடுதான்)
  7. ஞானேஸ்வர ராவ்  
  8. அப்பா ராவ் 
  9. லஜாராஸ் 
  10. டி-சோசா 
  11. தர்மி சந் 
  12. மல்லிக் 
  13. ஸ்ரீனிவாச ராவ் மற்றும் இருவர் பெயர் மறந்து விட்டது.
எல்லாம் விடலை பையன்கள். ஒரே கூச்சல் கும்மாளமாய் இருந்தனர். மனசுக்குள் மெல்லிய பயம் ஒன்று உண்டானது. எப்படி இவர்களை சமாளிக்கப் போகிறோம் என்று. மொத்தம் 16 டிக்கெட். பயணச் சீட்டு மற்றும் பையன்களை என்னிடம் ஒப்படைத்து விட்டு வந்த நபர் கிளம்பிச் சென்றார். அவர் சொன்ன விவரம் என்ன வென்றால் அந்த வருடம் ஜனவரி  26-30 நாட்களில் இந்திய பாகிஸ்தான் டெஸ்ட் போட்டி சென்னையில் நடப்பதால் திரு சம்பத் அவர்கள் வர இயலாமல் போனது என்பதாகும்.
 
ரயிலில் 3AC பெட்டியில் எங்களுக்கு முன்பதிவு செய்யப் பட்டிருந்தது. பயணிகள் பட்டியல் ஓட்டப்பட்டவுடன் எங்கள் பெயர் விவரங்கள் சீட்டு எண் சரியாக இருக்கிறதா என் சோதித்து விட்டு வண்டியில் ஏறினேன் (எப்போதிருந்து  எனக்கு இது ஒரு பழக்கம் வந்தது என்பதை வேறோர் முறை சொல்கிறேன்). பையன்கள் எல்லாம் ஒரே ரகளை செய்தனர். எல்லோரையும் அடக்கி, அவர் அவர் சீட்டில் அவர்களை இருக்க செய்து விட்டு, என் கையில் கொடுக்கப் பட்ட பைல் -ஐ படிக்க ஆரம்பித்தேன்.
 
Match Schedule-ஐ பார்த்தேன்.
 
26 Jan 1999 
East Zone Under-16s v South Zone Under-16sMaharaja Aggarsain Stadium, Rohtak
26 Jan 1999 
North Zone Under-16s v Central Zone Under-16sVishkarma High School Ground, Rohtak
27 Jan 1999 
Central Zone Under-16s v East Zone Under-16sMaharaja Aggarsain Stadium, Rohtak
27 Jan 1999 
North Zone Under-16s v West Zone Under-16sVishkarma High School Ground, Rohtak
28 Jan 1999 
Central Zone Under-16s v West Zone Under-16sMaharaja Aggarsain Stadium, Rohtak
28 Jan 1999 
North Zone Under-16s v South Zone Under-16sVishkarma High School Ground, Rohtak
30 Jan 1999 
Central Zone Under-16s v South Zone Under-16sMaharaja Aggarsain Stadium, Rohtak
30 Jan 1999 
East Zone Under-16s v West Zone Under-16sVishkarma High School Ground, Rohtak
31 Jan 1999 
North Zone Under-16s v East Zone Under-16sMaharaja Aggarsain Stadium, Rohtak
31 Jan 1999 
South Zone Under-16s v West Zone Under-16sVishkarma High School Ground, Rohtak
 
எங்களுக்கு மொத்தம் 4 பந்தயங்கள். ஜனவரி 26, 28, 30 மற்றும் 31.
பிப்ரவரி 1, 1999 எங்களுக்கு இதே தமிழ் நாடு எக்ஸ்பிரஸ் மூலம் சென்னை திரும்ப 3AC ரயில் டிக்கெட் எடுக்கப்பட்டு அதுவும் அந்த பைல்-இல் வைக்கப் பட்டிருந்தது. இத்துடன் வழி செலவுக்காக ரூபாய் 5000 எனக்கு அளிக்கப் பட்டிருந்தது மேற்கொண்டு செலவுக்கு அங்கு சென்று பெற்றுக்கொள்ளச் சொல்லி எனக்கு அறிவுத்தப் பட்டிருந்தது. பையன்கள் அனைவரையும் அவர் அவர் படுக்கையில் படுக்க சொல்லி விட்டு நான் டிக்கெட் பரிசோதகர் வரும் வரை அந்த பைல்-இல் கொடுக்கப்பட்ட விவரங்கள் அனைத்தையும் மீண்டும் ஒரு முறை வாசித்து மனதில் ஏற்றிக் கொண்டேன். பரிசோதகர் வந்து டிக்கெட் பரிசோதித்த உடன் நான் உறங்கச் சென்றேன்.
 
இரவு 1:30 - 2.00 மணி அளவில் ரயில்வே பறக்கும் படை (flying squad) அதிகாரி ஒருவரால் எழுப்பப் பட்டேன். விளையாட்டு வீரர்களுக்கு உண்டான சலுகை விலையில் பயணச்  சீட்டு வாங்கப் பட்டிருந்தது.  வந்தவர்கள் அனைவரும் விளையாட்டு வீரர்கள் தானா என்பதை பரிசோதனை செய்ய வேண்டும். ஒவ்வொருவராக எழுப்புங்கள் என்றார். எனக்கோ இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது.
 
மீண்டும் பேசுவோம்