Thursday 23 January 2014

நாம் மறந்தவை

மண் பாண்டம் 

எங்களது இளமை காலம்  கிராமத்தில் கழிந்தது. இன்றைய  கலாச்சாரமும் ஆடம்பரங்களும் இல்லாத  ஒரு கால கட்டம்  அது.  மண்ணால் ஆன சட்டி, பானைகள் மற்றும்  வேறு பல பொருட்கள் வீடுகளில் புழங்கப்பட்ட காலம் அது. வெயில் காலங்களில் மண் பானையில் வெட்டி வேர் போடப்பட்ட தண்ணீர் தாகம் தணித்ததுடன் உடலுக்கு குளிர்ச்சியும்  தந்தது. சரும பிரச்சினைகள் உண்டாகாமல் தடுத்து, வெயில் காலங்களில் ஏற்படும்  கோடை கட்டி மற்றும்  அம்மை நோய்களில் இருந்தும் பாதுகாப்பு தந்தது. இன்றோ நாம்  குளிர்ச் சாதனப்  பெட்டியில் இருந்து தண்ணீர் மற்றும் பூச்சி கொல்லி கலந்த உற்சாக பானங்களை அருந்துவதை நாகரீகமாக கருதுகிறோம். நமக்கு பண விரயம் மட்டும் அன்றி சுகாதார கேடு விளைவிக்கும். சமீபத்தில் இணைய தளத்தில் நான் படித்த ஒரு கட்டுரையை உங்களுக்காக இங்கு அளிக்கிறேன்.
 
"Quote"
"தம் பிரியாணி" –  இன்று ஹோட்டலுக்கு சென்றவுடன் நாம் ஸ்பெஷலாக ஆர்டர் செய்யும் ஒரு உணவு. இந்த ஹோட்டல்ல இது ரொம்ப பிரசித்தி, சமைச்ச மண் பானையோடு கொண்டுவந்து வைப்பான் பாருங்க அதன் மணம், டேஸ்ட் எல்லாமே தனிதான். அதேபோல இன்று கிராமத்து சமையல் என தொலைக்காட்சிகளிலும் கூட பாட்டு பாடற பாட்டி வந்து பானையில் சமைத்து காட்டுவார்கள். மண் பானை சமையல் என்று சொல்லாமல் ஏன் கிராமத்து சமையல் என்று சொல்கிறார்கள் என்று விளங்கவில்லை. நல்லது என்றுதானே சொல்கிறார்கள்.. இதில் கிராமம் மட்டும் ஏன்? நகரங்களில் சமைக்கக் கூடாதா?
மண் பானை சமையலில் அப்படி என்ன சுகம்? அதற்கு முன் ஒரு சில வரிகள். அந்தக் காலத்தில் கூரை வீடுகள், ஓட்டு வீடுகள் மிக சாதாரணமாக எங்கும் தெரிந்தவை. வீட்டிற்கு களிமண் கலந்து பூசப்பட்ட சுவர், களிமண் கலந்து செய்யப்பட்ட ஓடுகள், கட்டாந்தரை தூக்கம் ஆகியன இன்று அது மாதிரி வராது என்று பேசப்படும் விஷயங்கள். களிமண் அப்படி என்ன சுகம் அதில்? 1970ல் சீனாவில் ஒரு கிராமப் பகுதியில் 100 வருடமாக இயங்கிவரும் ஒரு பீங்கான் தொழிற்சாலையில் சேர்ந்த ஒரு உற்பத்தித்துறை மேலாளர் அங்கு வேலை செய்யும் பணியாளர்கள் கட்டாந்தரையில் வெகுநேரம் நின்றுகொண்டே வேலை செய்வதை பார்த்து குளிரிலும், வெயிலிலும் இவர் இப்படி நின்று கொண்டே வேலை செய்கிறார்களே இவர்களுக்கு மூட்டு வாத நோய் வந்துவிடுமே என வருத்தப்பட்டு, ஒரு மெடிக்கல் டெஸ்ட் செய்ய முனைந்தார். ஆச்சரியமாக ஒருவருக்கும் இந்த நோய் இல்லை எனத் தெரிந்தபோது பிறந்த ஆராய்ச்சியின் விளைவு களிமண்ணால் செய்யப்பட்ட உலை, தரை ஆகியன far infrared கதிர்களை வெளியிடுகின்றன. இதனால் மூட்டு வாத நோய், தசை சம்பந்தப்பட்ட வலிகள் ஆகிய நோய்களுக்கு ஒரு பலன் உள்ளது எனும் அறிவும் கிடைத்தது. இன்று மெடிக்கல் உலகில் களிமண்ணின் உபயோகங்கள் பல. இதனால் தான் அன்று நாம் களிமண்ணை எங்கும் உபயோகித்தோமா? தெரியவில்லை.
 
களிமண்ணால் செய்யப்பட்ட மண் பானைகளுக்கும் இந்த சக்தி உண்டுதானே. அறியாமலேயே ஒரு farinfrared therphy யை நம் முன்னோர்கள் தினம் தினம் செய்துகொண்டார்களோ? அதை விடுங்கள். மண் பானை சமையலுக்கு வருவோம். மண் பானையில் சமைக்க முக்கியமானது பாலிஷ் செய்யப்படாத பானை. இந்த பானையை குறைந்தது 30 நிமிடங்கள் தண்ணீரில் ஊற விட வேண்டும். இதனால் பானையில் உள்ளசிறு துளைகள் தண்ணீரை இழுத்துக் கொள்கிறது. இந்த பானையில் மூடி வைத்து சமைக்கும்போது, அடுப்பின் சூடு, பானையில் உள்ள ஈரப்பதத்தை முதலில் குறைக்கும் இதனால் உள்ளே உள்ள உணவின் ஈரப்பதம் குறையாமல், உணவு அதன் சொந்த ஈரப்பதத்தில் வேகிறது. பாணியின் ஈரப்பதம் குறைவதற்கு முன் உணவு நன்றாக சமைக்கப்படுகிறது. மேலும் மண் பானை, far infrared கதிர்களை வெளியிடுவதால் இதன் வெப்பம் உணவுக்குள் நன்கு ஆழமாகப் புகுந்து உணவோடு நாம் சேர்த்த உப்பு மற்றும் உணவைப் பதப்படுத்தி சுவை தரும் பொருள்களை உள்ளுக்குள்ளும் நிறைக்கிறது. இதனால் உணவு உண்ணும்போது ஒரு தனிச் சவை இருப்பதாக அறிகிறோம். ஏன் மண்பானையில் செய்த மட்டன் பிரியாணி சுவை அதிகமாக தெரிகிறது என்பதை உணர்ந்தீர்களா? பானையை காற்று வெளிவராமல் அடைத்து, குறைந்த தீயில் சமைக்கும்போது, பானையின் ஈரப்பதம் மெதுவாக குறைய, உணவின் ஈரப்பதம் சற்றும் குறையாமலும், காற்று வெளிச் செல்ல முடியாததாலும் உணவு நமக்கு சமைக்கப் படுவதுடன், சத்துக்கள் உணவிலேயே தங்குகிறது. முக்கியமான ஒரு விஷயம் இது உணவுப் பொருள்களில் ஏற்கனவே உள்ள நீர், எண்ணெய் ஆகியவற்றையே திரும்ப உபயோகிப்பதால் அதிக எண்ணெய் விடத் தேவையில்லை. உங்கள் உணவில் தேவையில்லாத கொழுப்புச் சத்து குறைய வாய்ப்புண்டு இல்லையா?

மேலும் clay ஒரு alkaline ( கார குணம்) என்பதால் இது உணவில் உள்ள அமிலத்துடன் வினை செய்து அதன் அமிலத் தன்மையைக் (ph level) குறைக்கிறது. தக்காளி சாறு அதிகமுள்ள உணவை மண் பானையில் சமைத்து பாருங்கள் ஒரு சிறிய இனிப்பு கலந்த சுவையுடன் மிக நன்றாக இருக்கும். என்ன , சமைக்கும் நேரம் அதிகம் தேவை. மண் பானை உடையாமலிருக்க மேலும் பாதுகாப்பும் அதிகம் தேவை. எனவே மண்பானையில் சமைக்கும்போது கணவனை/மனைவியை (சமைப்பவர்களைப் பொறுத்து) நினைக்க வேண்டாம் ஏதாவது கோபத்தில் கரண்டியை வேகமாக சுழற்ற பானை உடையும் அபாயம் உண்டு. இன்றைய fast உலகத்தில் இதன் மதிப்பு அதனால்தான் குறைந்து வருகிறது. மற்ற பாத்திரங்கள் சூடு சீக்கிரம் ஆவதால் வேகமாக சமைக்க முடிகிறது. இந்த வசதிக்காக நாம் சத்துக்களை இழக்க உடன்பாடு செய்கிறோம். அடுத்த நல்ல பாத்திரம் கண்ணாடி. அதனால் தான் இன்று microwave cooking அதிக பிரபலமாகி வருகிறது.
மற்ற பத்திரங்களில் என்ன பிரச்சனை?

நான் ஸ்டிக்: இன்று மிக பிரபலமானது. அதிக கொழுப்பு இல்லாத உணவை தயாரிக்க உதவும். ஆனால் அதிக நேரம் வெரும் நான் ஸ்டிக் பாத்திரத்தை அடுப்பில் வைக்கும்போது அதிலுள்ள perfluorooctanic acid ( PFOA) நச்சுப் பொருள்களை வெளிவிட வாய்ப்புண்டு. கவனம் தேவை.
அலுமினியம்: இது ஆக்சிஜனுடன் சுலபமாக வினை செய்து அலுமினியம் ஆக்சைடு உருவாக்குகிறது. இது உணவுடன் உள்செல்வது நம் உடலுக்கு நல்லதல்ல. குறிப்பாக salt, tea, leafy vegetables, soda, lemon, tamarind and tomato போன்ற உணவுப் பொருள்களை அலுமினியப் பாத்திரத்தில் சமைப்பதோ, சமைத்த பின் வைத்திருப்பதோ நல்லதல்ல. anodized aluminum cookware அதிக கேடு விளைவிப்பதில்லை.
துரு ஏறா எஃகு(stainless steel): நல்லது என்று நாம் நம்புவது. இதிலுள்ள nickel, molybdenum, titanium, aluminum, and carbon steel ஆகியன உணவுடன் கலக்கிறது. ஆனால் மிகக்குறைவான அளவே எனவே சாதாரண மனிதனுக்கு கேடு இல்லை. இதிலுள்ள nickel சிலருக்கு கேடு விளைவிக்க வாய்ப்புண்டு. Stainless steelளுடன் உள்ளே porcelain coating கொடுக்கப்பட்ட பாத்திரங்கள் நல்லது. இப் பாத்திரங்களை தேய்க்கும் பொது அதிக கீறல் விழாமல் பார்த்துக்கொள்ளவும். கீறல்களில் நோய் கிருகிகள் தங்க வாய்ப்புண்டு, இவை கழுவதாலோ, துடைப்பதாலோ வெளிச் செல்வதில்லை.

காப்பர் மற்றும் பித்தளைப் பாத்திரங்கள் ஈயம் பூசப்பட்டு உபயோகிக்கப்படுகின்றன, ஈயச் சொம்பு ரசம் சூப்பர் டேஸ்ட் என சொல்பவர்கள் உண்டு. உண்மையில் அது ஈயம் அல்ல வெள்ளீயம் எனப்படும் tin metal ஆகும். இது காற்றில் உள்ள ஆக்சிஜனுடன் எளிதில் வினை புரிவதில்லை. ஈயம் உடலுக்கு கெடுதல் விளைவிக்கும் அது நீங்கள் சிறு குழந்தைகளுக்கு வாங்கும் விளையாட்டு பொருள்களில் இருந்தாலும்.
எனவே மண்பானை சமையல் மிக நல்லது பொறுமை இருந்தால். அன்று என்ன தெரிந்தா செய்தார்கள்? அதுதான் கிடைத்தது. இயற்கை நல்லதையே நமக்குத் தருகிறது. இதை தவிர்த்து, நாம் தான் செயற்கை வாழ்க்கையில் நம்மை சந்தோசப்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறோம்.
"unquote

நம் உடலுக்கு  நல்லவை என்று எது இருந்தாலும் அதை நாம் நடைமுறை படுத்துவது தானே புத்திசாலித் தனம். உடல் ஆரோக்கியமாய் இருந்தால்தானே நாம் நம் வாழ்வை நிம்மதியாகவும் மகிழ்ச்சியுடனும் கழிக்க முடியும்?

நானும் என் மனைவியும் உடனே எங்கள் வீட்டிற்கு 3 மண் பானைகள் வாங்கி வந்தோம். ஒன்று தண்ணீர் அருந்த, மற்றொண்டு குழம்பு மற்றும் ரசம் வைக்க, மூன்றாவது தயிர் தோய்ப்பதற்கு. மண் பானையில் தோய்க்கப்பட்ட தயிர் நீண்ட நாள் புளிப்பதில்லை. மேலும் அதில் ஒரு கூடுதல் சுவை உள்ளது. இந்த  மூன்று மண் பாண்டங்களும் எங்களுக்கு திருப்தி அளிக்க  மேலும் மூன்று வாங்கி வந்தோம், as fall back arrangement.

என் மனைவி தற்போது மண் பானையில் என்னென்ன செய்யலாம் என்பது குறித்து நிறைய யோசித்துக் கொண்டிருக்கிறார். மண் பானையில் வைக்கப்பட்ட  சின்ன வெங்காயம் போட்ட புளிக் குழம்பு மறு நாள் காலை பழைய சாதத்துடன் வெகு ருசியாக இருக்கிறது. மண்  பானையில் தண்ணீர் ஊற்றி வைக்கப்பட்ட பழைய சாதம் ருசியுடன் இருப்பது மட்டும் அன்றி உடலுக்கு குளிர்ச்சியையும் தருகிறது.

மேலும் ஒரு ருசிகர தகவல், மண்பானையில் வைக்கப்பட்ட பழைய சாதத்தை பெண்கள் தினசரி உண்டு வந்தால் அவர்களுக்கு மாதவிலக்கு காலங்களில் வரும் வயிற்று வலி மற்றும்  வெள்ளை படுத்தல் மட்டுப்படுகிறதாம்.

நீங்கள் உங்கள் மனைவி மற்றும் மகளின் ஆரோக்யத்தை விரும்புகிறவரா? உடனே மண் பானை வாங்கி உபயோகித்து பயன் அடைவீர்.

மீண்டும் பேசுவோம்