சேதுராமன் சார்
வலைப் பதிவில் சுவாரஸ்யமான மனிதர்கள் பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றிய உடன் எங்கு ஆரம்பிப்பது என்ற குழப்பம் உண்டானது. நிறைய முகங்கள் மனத் திரையில் தோன்றி மறைந்தன. ஏறு வரிசையில் செல்வதா அல்லது இறங்கு வரிசையில் செல்வதா என்ற சிறிது நேர அலை பாய்தலுக்கு பிறகு ஏறு வரிசை என முடிவானது. அதாவது எனது இளவயது முதல் ஆரம்பிக்கிறேன்.
நான் முதன்முதல் பள்ளிக்கு சென்ற நாள் எனக்கு நினைவு உள்ளது. அப்போதேல்லாம் 5 வயதிற்கு தான் பள்ளிக்கு அனுப்புவார்கள். இப்போது போல 2-1/2 வயதிலேயே பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு பெற்றோர் அவரது எதிர்காலம் பற்றி பயப்படும் நிலைமை அப்போது இல்லை. ஆனாலும் எனது குறும்புகளும் கொட்டங்களும் தாங்காமல் எனது அப்பா என்னை 4-1/2 வயதில் பள்ளிக்கு அனுப்பினார். 1970இல் விஜய தசமி அன்று பழம் பாக்கு வெற்றிலை தட்டோடு எனக்கு புதுத் துணி உடுத்தி என்னை பள்ளியில் சேர்க்க எனது தந்தையார் அழைத்து சென்றது இப்போதும் எனக்கு பசுமையாக நினைவில் உள்ளது. அப்போது பள்ளியில் ஆசிரியராக திரு சேதுராமன் அவர்கள் இருந்தார். என்னை அவர் முன் கொண்டு எனது தந்தையார் நிறுத்தினார். திரு சேதுராமன் அவர்கள் எனது தந்தைக்கு நெருங்கிய நண்பர். எங்கள் குடும்ப நண்பரும் கூட. என்னை பார்த்த அவர் தலை மேலாக கையை தூக்கி மறுபுறம் உள்ள காதை தொடச் சொன்னார். கைக்கு காது எட்டினால் பள்ளி செல்லும் வயது வந்து விட்டது என்று கணக்காம். அப்போதெல்லாம் பிறப்பு இறப்பு சான்றிதழ் நடை முறையில் இல்லை.
எனது கை காதுக்கு எட்டியதால் நானும் பள்ளியில் சேர்க்கப்பட்டேன். எங்கள் வீட்டில் இருந்து மூன்றாவது வீட்டில் தான் எங்களது பள்ளி இயங்கிக் கொண்டிருந்தது. நானோ மிகுந்த அம்மா செல்லம். அம்மாவை விட்டு அங்கு இங்கு போக மாட்டேன். பள்ளி அரை நேரம் என்றாலும் அவ்வளவு நேரம் அம்மாவை விட்டு பிரிவது என்பது எனக்கு ஆகாத காரியம். அவ்வப்போது ஒற்றை விரலை காண்பித்து விட்டு பள்ளியின் கொல்லை வழியாக எங்கள் வீட்டிற்கு சென்று விடுவேன். என் அம்மா என்னை இழுத்து கொண்டு வந்து பள்ளியில் விட்டு விட்டு செல்வார்.
சில நேரம் திரு சேதுராமன் அவர்கள் என்னை என் வீட்டிற்கு மோரோ அல்லது காபியோ வாங்கி வர சொல்லி அனுப்புவார். அதை சாக்கு வைத்து வீட்டுக்கு ஓரிரு முறை சென்று வரும் வாய்ப்பு கிட்டும்.
எனது முதல் ஆசான் என்ற முறையில் திரு சேதுராமன் அவர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதையும் மதிப்பும் உண்டு. பிற்காலத்தில் அவரது புதல்வர் திரு ராஜு எனது அக்காவின் கணவரானது எனக்கு அவரது கடைசி காலம் வரையில் அவருடன் தொடர்பில் இருக்கும் பெரும் பாக்கியத்தை அளித்தது.
சார் பற்றி சொல்ல வேண்டும் என்றால் அவருக்கு எனது தாயார் உடன் பிறவா சகோதரி போல. எங்களை அவர் தனது பிள்ளைகள் போலவே பாவித்தார். கடின உழைப்பாளி. நல்ல மனிதர். தன்னலம் இல்லாதவர். எங்கள் குடும்பத்தில் ஒரு மூத்த உறுப்பினாராகவே எனது பெற்றோரால் பாவிக்கப் பட்டவர். அவரைப் போன்ற மேன் மக்களின் தொடர்பு என்பது இன்றைய காலக் கட்டத்தில் அரிது.
அந்த காலத்தில் அவர் எங்கள் ஊருக்கு அருகில் உள்ள சிறுபுலியூர் மற்றும் பேரளத்தில் டியூஷன் எடுக்க செல்வார். இரவு திரும்பும் போது தினமும் எங்களுக்கு வறுத்த வேர் கடலை வாங்கி வருவார். வேர் கடலை என சொல்ல தெரியாமல் டகலடொக்க என நான் கூறுவேணாம். ஒரு சில நாட்களில் அவர் வர நேரம் ஆனால் வேர் கடலைக்காக நாங்கள் தூங்காமல் காத்திருந்ததும் உண்டு. எவ்வளவு நேரம் ஆனாலும் கதவை தட்டி டகல டொக்க கொடுக்காமல் அவர் சென்றது இல்லை. பல வருடங்கள் இது தொடர் நிகழ்ச்சியாக நடந்தது.
குழந்தைகள் மேல் அவருக்கு அலாதி பிரியம். எங்களுக்கு நிறைய கதைகள் சொல்வார். அதில் அவர் சந்தித்த நிகழ்வுகள், சம்பவங்களும் அடங்கும். அந்த கால கட்டத்தில் கிராமங்களில் பேய் நடமாட்டம் என்பது மிகவும் சாதாரணமான ஒன்று. அவர் ஒரு முறை மோகினி பேயின் வசமிருந்து தப்பித்து வந்த கதை இன்றும் என்னால் மறக்க முடிவதில்லை.
எனது முதல் ஆசானுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.