Sunday 12 January 2014

நா.ச.சு.ம (2)




என் செல்லம்மா பாட்டி ....
 

பெயருக்கு ஏற்றார் போல் ரொம்ப செல்லமான பாட்டி. என் அப்பாவின் தாயார். வீட்டுக்கு நான் கடைக் குட்டி என்பதால் எனக்கு செல்லம் அதிகம். பாட்டி பற்றி சொல்ல வேண்டும் என்றால் அன்பு எவ்வளவு கொடுத்தாரோ அதே போல் கண்டிப்பும் நிறைந்தவர். தாத்தா பாட்டி உறவு அரிதாகி கொண்டு வரும் இந்த கால கட்டத்தில் நாங்கள் எல்லாம் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். எங்களை வழி நடத்தி செல்ல பெரியவர்கள் வீட்டில் இருந்தனர். பாட்டி நிறைய கதைகள் சொல்லுவார். பாட்டியின் சாகச கதைகள் தான் எங்களுக்கு சின்ன வயசில் பெரிய பொழுது போக்கு.
 
பாட்டியின் பிடிவாதம் கண்டிப்பு பற்றி எனது சகோதரிகளும் தாயும் சொல்ல நிறைய கேள்விப்பட்டிருந்தாலும் நான் கண்டது பாட்டியின் சாந்த முகம் மட்டும் தான்.  பாட்டி மிகவும் சுறுசுறுப்பானவர். 90 வயதிலும் பாட்டியின் சுறுசுறுப்பு அசர வைக்கும். எங்கள் வீட்டில் பாட்டிதான் ராணி. பாட்டி வைத்ததுதான் சட்டம். பாட்டியின் பேச்சுக்கு மறு பேச்சு என்பதே இல்லை. செல்லம்மா பாட்டி எனது அம்மாவிற்கு பெரிய பக்க பலமாக இருந்ததாக எனது அம்மா அடிக்கடி சொல்லி சிலாகிப்பது உண்டு. தாத்தாவின் மறைவிற்கு பிறகு ஒற்றை மனுஷியாக இருந்து எனது அப்பாவையும் பெரியப்பாவையும் வளர்த்து ஆளாக்கிய பாட்டி எனக்கு ஒரு அவதார புருஷியாகவே தோன்றுவார்.
 
ஒற்றை மனுஷியாக வீட்டையும் நிர்வாகம் செய்து, வயல் வரப்பையும் பார்த்துக்கொண்டு, மாடு கன்றுகளை சமாளித்து அவரது திறமைக்கு அளவில்லை. எனது பாட்டியின் திறமைக்கு அவர் பல மேலாண்மை சான்றிதழ்களுக்கு (MBA degrees) தகுதியானவர்.

பாட்டி ஓலை விற்ற காசு, மட்டை விற்ற காசு புடவை தலைப்பில் எப்போதும் முடிந்து வைத்திருப்பார். எங்கள் இளவயது கால கட்டத்தில் கைப் பணம் (pocket money) கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது.  பாட்டியை தாஜா பண்ணி நானும் எனது சகோதரி உஷாவும் அவ்வப்போது பாட்டியிடம் 5 பைசா 10 பைசா பெறுவது உண்டு. அந்த கால கட்டத்தில் 5 மற்றும் 10 பைசாக்கள் என்பது எங்களுக்குப் பெரிய கைப் பணம்.

பாட்டியின் மேலாண்மை திறமைக்கு மற்றொரு எடுத்துக்காட்டு குடும்ப நிர்வாக அதிகாரத்தை  சரியான நேரத்தில் இளைய தலைமுறையின் கையில் கொடுத்தது. வீட்டை நிர்வகிக்கும் பொறுப்பு என் தாய் வசம் கொடுக்கப் பட்டாலும் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் என் பாட்டியின் கையில் இருந்தது. ஒரு தலைமை நிர்வாக அதிகாரிக்கு (CEO) உண்டான அனைத்து தகுதிகளும் அவருக்கு இருந்தது. இத்தனைக்கும் பாட்டி பெரிய படிப்பெல்லாம் படித்ததில்லை. எல்லாம் வாழ்கைப் பாடம் தான்.

எங்கள் பாட்டி ஒரு பட்டம் பெறாத ஆனால்  கை தேர்ந்த மகப்பேறு மற்றும் குழந்தை நல மருத்துவர். எனது தாயின் அனைத்து பிரசவங்களும் கிராம செவிலியைக் கொண்டு எனது பாட்டியின் மேற்பார்வையில்தான் நடந்ததாம். எல்லாமே சுகப் பிரசவங்கள் தான்.

நான் பிறந்தது கார்த்திகை மாதம். ஒரு அடைமழை நாள். நான்கு கூடல் வாயும் ஒன்றாய் கொட்டியது என்று உவமானம் கூறுவார். கூடல்வாய் என்பது வீட்டு முற்றத்தில் நான்கு மூலையிலும் மழை நீர் வெளியேற அமைக்க பட்டது. மழை அதிகமாக பெய்யும் பொழுது அருவி போல் கூடல்வாய் வழியாக நீர் கொட்டும். செவ்வகமான முற்றத்தில் நான்கு கூடல்வாயும் ஒன்றாக கொட்டியது என்றால் மழையின் தீவிரத்தை கற்பனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள்.  நான் பிறந்தவுடன் கூடல் வாய் நீரில் பாட்டி என்னை குளிப்பாட்டினாராம். பாட்டியின் இந்த செயலுக்கு தர்க்க ரீதியான காரணம் எனக்கு புரியவில்லை என்றாலும் பாட்டியின் அந்த தைரியத்தைப் பாராட்ட வேண்டும். 

குழந்தைகள் நலம் காப்பதில் பாட்டிக்கு நிகர் யாரும் இல்லை. எல்லாமே கை வைத்தியம் தான். வீட்டின் கொல்லையில் அனைத்து மூலிகைகளும் இருக்கும். எந்த விதமான உடல் சுகவீனம் என்றாலும் அதற்கு மூலிகை மருந்துதான். வாரம் ஒருமுறை எண்ணைக் குளியல். மாதம் ஒரு முறை வயிற்றுக்கு விளக்கெண்ணை என எங்களுக்கு நிரந்தர நோய் எதிர்ப்புச் சக்தியை கொடுத்தவர்.

சின்ன சின்ன வேளைகளில் எங்களை ஈடுபடுத்தி எங்களை அறியாமல் எங்கள் கடமையை எங்களுக்கு உணர்த்தியவர். கடைசிக் காலத்தில் பாட்டி படுத்த படுக்கையாய் போனது எங்களுக்கெல்லாம் அதிர்ச்சி. கொல்லைப் புறத்தில் வழுக்கி விழுந்ததில் பாட்டிக்கு பக்க வாதம் வந்தது. இந்த கால கட்டத்தில் 
பாட்டிக்கு சின்னச் சின்ன பணிவிடைகள் செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்தது.

90 வயதுக்கு பிறகு கூட பாட்டி ஆரோக்யமாக இருந்ததற்கு காரணம் அவர்களது முறையான வாழ்வியல் சித்தாந்தங்களால் தான் என்பது நிதர்சனமான உண்மை. நம் முன்னோர்கள் விட்டு சென்ற நல்ல பழக்க வழக்கங்களை பின் பற்றி நம் வாழ்கையையும் நெறி படுத்திக்கொள்வோம். 

மீண்டும் பேசுவோம் 
 

No comments:

Post a Comment

உங்கள் விமர்சனம்/ கருத்துக்கள் அளித்து எனக்கு ஊக்கம் அளிக்க வேண்டுகிறேன்