Tuesday 14 January 2014

தாய் எனும் கோவில் (1)

தாய் எனும் கோவில் 

 எல்லோரையும் பற்றி  எழுதறே அப்பா...  நம்ம ருக்மணி பாட்டி பத்தி எழுத மாட்டியா? என் மகள் என்னைப் பார்த்துக் கேட்டாள்.  என் தாயை பற்றி எழுத எனக்கும் ஆசைதான். ஆனால்  ஒரு பக்கத்தில் முடிக்கும் விஷயம் இல்லையே. எனக்கு நினைவு  தெரிந்து என் தாயுடன் நான் இருந்த நாட்கள் மிக குறைவே. ஆனாலும் நமக்கு பிரியமான ஒருவருடன் இருக்கும் ஒவ்வொரு நொடியும் நமக்கு இனிமையானதாகவே இருக்கும். தாய் பற்றி பேசும் பொழுது நான் எனது மனம் திறந்து சில விஷயங்கள் பற்றி கூற வேண்டிய அவசியம் உண்டாகிறது.

என்னைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைத்திருந்தாலும் அவற்றை எல்லாம் புறம் தள்ள வேண்டிய நிர்பந்தம் எனக்கு பல சமயங்களில் இருந்திருக்கிறது. அந்த மாதிரி நேரங்களில் நான் எனது நிலையை எடுத்துக் கூற விரும்பினாலும் அது செவிடன் காதில் ஊதிய சங்காகி இருக்கும் என்பது எனக்கு நிதர்சனமாக தெரியும். ஆகவே அதுபோன்ற நேரங்களில் நான் மௌனம் காத்து எனது கிலேசத்தை மனதிற்குள் போட்டு புதைத்து இருக்கிறேன். எனக்கு அவமானங்களும் ஏமாற்றங்களும் புதிது அல்ல. சிறுவயதில் எனக்கு ஏற்பட்ட நிகழ்வுகள் பிற்காலத்தில் என்னை செப்பனிட உபயோகமாய் இருந்தது. பிறர் மனதை எந்தெந்த விஷயங்கள் புண்படுத்தும் என்பது எனது அனுபவத்தின் மூலம் அறிந்து கொள்ள எனக்கு கடவுள் கொடுத்த வாய்ப்பாக அவற்றை எடுத்துக் கொண்டேன். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக எனது கூட்டுக்குள் நான் முடங்கிப் போனேன். வீட்டின் கடைக் குட்டி என்பது வரமா சாபமா என்பது இன்று வரை எனக்கு புரியாத ஒரு புதிர் தான்.
 
எல்லாக் குழந்தைகள் போல எனக்கும் என் தாய்தான் இந்த உலகின் முதல் பரிச்சயம். பிற்காலத்தில் அம்மாவை விட்டு நிறைய விலகப்போகிறேன் என்ற காரணத்தாலோ என்னவோ ஆரம்ப காலத்தில் அம்மாவை விட்டு நான் விலகியதே இல்லை. விளையாடிக் கொண்டு இருக்கும் போதே அம்மா ஞாபகம் வந்து விட்டால் தண்ணி குடித்து விட்டு வருகிறேன் என்று கூறி வீட்டுக்கு செல்வேன். அம்மாவுக்கு தெரியும் நான் வந்த காரணம் என்ன என்று. பாட்டியிடம் சில நேரம் சொல்லி என்னை கேலி செய்வார்.

அம்மாவின் பிறந்தகம் பேரளம் அருகில் உள்ள கிள்ளியூர் ஆகும். எங்களுக்கு விடுமுறை கால பொழுது போக்கு என்பது கிள்ளியூர் செல்வது தான். எனக்கு தெரிந்து அம்மாவுக்கு மிகவும் பிடித்த விஷயங்கள் என்றல் அது கிள்ளியூர் மாரியம்மனை தரிசனம் செய்வது, மாயவரம் காவேரி ஸ்நானம், சேந்தங்குடி துர்க்கை கோயில் முதலியன. காவிரியில் அம்மா நீச்சல் அடிக்கும் அழகே தனிதான்.

சிலநேரம் அம்மா வெளியூர் செல்ல நேர்ந்தால் எனக்கு தெரியாமல் கொல்லை  வழியாக சென்று விடுவார். பலமுறை நான் மேல் சட்டைக்  கூட போடாமல் அழுதுகொண்டே அம்மா பின்னால் ஓடி இருக்கிறேன். ஒருமுறை எனது சகோதரி லதா என்னை பஸ்ஸில் ஏறவிடாமல் தடுத்த போது அவரை கீழே தள்ளிவிட்டுக் கூட போயிருக்கிறேன். சில வேளைகளில் அம்மா என்னை சமாதானம் செய்துவிட்டு வெளியூர் செல்ல நேரும். அந்த மாதிரி தருணங்களில் அம்மாவின் ஒன்பது கஜ புடவை தான் எனக்கு துணை. வீடு நிறைய மனிதர்கள் இருந்தாலும் அம்மா இல்லை என்றால் அந்த வீடு எனக்கு வெறிச்சோடி இருக்கும். அந்த அம்மாவை விட்டு நான் சிறு வயதிலேயே பிரிந்து செல்ல நேரும் என்று அப்போது நான் நினைத்ததில்லை.

தகவல் பாதுகாப்பு கருத்தரங்குகளில் (Information Security Seminar) பேசும் போது நான் எப்போதும் கூறும் உதாரணம் ஒன்று உண்டு. இணையத்தில் நிறைய பயன்பாடுகள் (utilities) / கருவிகள் (tools) இலவசமாகக் கிடைக்கின்றன. அவை எல்லாம் உண்மையில் இலவசமா என்று பார்த்தால் இல்லை என்றே கூறலாம். ஒன்று அவற்றின் பயன்பாட்டை நம் மூலம் சோதிக்கின்றனர் அல்லது நமக்கு தெரியாமல் ஏதாவது  ட்ரோஜன் அல்லது தீங்கிழைக்கும் குறியீடுகள் (malicious codes) பதிவிறக்கம் (டவுன்லோட்) செய்யப்படுகிறது  அல்லது விளம்பர உத்தியாக இருக்கும் என்று அர்த்தம். உலகில் எதிர்பார்ப்பு இல்லாமல் இலவசமாக கிடைக்கும் ஒரே வஸ்து தாயன்பு தான். இதை நான் நன்றாகவே உணர்ந்திருக்கிறேன் ஆகையால் இணையத்தில் பாதுகாப்பு முறை பற்றி பேசும் பொழுது தாயன்பு பற்றி உதாரணம் சொல்வது மிகச் சரியான செய்தியாக இருக்கும் என்பது எனது எண்ணம்.

உலகில் தாயைப்  போல நம் மீது அக்கறை உள்ளவர்கள் யாரும் இருக்க முடியாது. பவித்ரா படத்தில் கவிப் பேரரசின் வரிகள் இங்கு எனக்கு நினைவுக்கு வருகிறது :

"விண்ணை படைத்தான் மண்ணை படைத்தான் 
காற்றும் மழையும் ஒளியும் படைத்தான் 
பூமிக்கு அதனால் நிம்மதி இல்லை 
சாமி தவித்தான் .... சாமி தவித்தான் ....
தாயைப்  படைத்தான் ...."

உன்னிக்ருஷ்ணனின் குரல், இசைப்புயலின் இசை, கவிபேரரசின் வைர வரிகள் ...... கல் மனதையும் கரைய வைக்கும் கண்களை பனிக்க வைக்கும். தாயை நேசிக்கும் ஒவ்வொருவரும் கேட்க வேண்டிய ஓர் பாடல்.

அம்மாவின் வார்த்தைகளே எனக்கு வேதம். அம்மா எனக்கு சிறு வயதில் கூறிய அறிவுரைகள் என் மனதில் பசுமரத்து ஆணிபோல் பதிந்தன. இன்றும் அவற்றை கடை பிடித்து வருகிறேன்.

அம்மாவுக்கு பிடித்தது எல்லாம் எனக்கும் பிடித்திருந்தது. என்னை பற்றி/ என் எதிர் காலம் பற்றி என் பெற்றோருக்கு என்ன சந்தேகம் வந்ததோ தெரியவில்லை, என்னை பத்தாம் வகுப்பு முடித்த பிறகு மேலே படிக்க சென்னைக்கு அனுப்பினர். இரண்டும் கெட்டான் வயதில் அடுத்தவர் வீட்டில் தன் பிள்ளை நன்றாய் இருப்பான் என அவர்கள் நினைத்தது சரியா தவறா என்பது எனக்கு தெரியவில்லை. இளமையில் நான் இழந்த சின்ன சின்ன சந்தோஷங்களை நான் இன்று குழந்தைகளுடன் கொண்டாடி மகிழ்கிறேன். அருண் ஆனந்த் முதல் அனிக்கா வரை அவர்களில் நான் என்னைப் பார்க்கிறேன், என் குழந்தை பருவத்தைப் பார்க்கிறேன்.
 
"நேற்றை மற,  நாளையை  நினையாதே, இன்றைக்காக வாழ் " இதுதான் என் தாயிடம் நான் கற்ற வாழ்வியல் பாடம்.
 
சென்னையில் சகோதரிகள் வீட்டில் ராஜ வாழ்க்கைதான் என்றாலும் அம்மாவின் இடத்தை யாரால் நிரப்ப முடியும்? இதை பற்றி நான் ஒரு முறை பேச நேர்ந்த பொழுது அது திரிக்கப்பட்டு வேறு விதமாக பேசப் பட்டது. என் சகோதரிகட்கு அது மன வருத்தம் தந்தது என்று கேள்விப் பட்டேன். ஏழை சொல் அம்பலம் ஏறாது என்பது தெரிந்து நான் மௌனம் காத்தேன்.

நான் கைக் குழந்தையாய் இருந்த காலம் தொட்டு கர்நாடக சங்கீதம் கேட்க்கும் பாக்கியம் எனக்கு கிட்டியது. எனது சகோதரிகள் திரு ராமலிங்கம் என்னும் நாதஸ்வர வித்வான் இடம் சங்கீதம் பயின்றனர். கேள்வி ஞானத்தில் ஓரளவு சங்கீதம் பயின்றேன். எனது தாய்  மிக அருமையாக பாடக் கூடியவர். அம்மா பாடும் கல்யாண பாடல்களும், நலங்கு மற்றும் ஓடப் பாடல்களும் எங்கள் குடும்பத்தில் மிக பிரசித்தம். 85 வயதில் எங்கள் வினோத் திருமணத்தில் அம்மா பாடிய போஜனம் செய்ய வாருங்கள் இன்னும் என் மனக்கண் விட்டு அகலவில்லை.

சின்ன வயதில் இருந்து எனக்கு உடம்பு படுத்திக் கொண்டே இருக்கும். அந்த நேரங்களில் அம்மாவின் அன்பு ஒன்று மட்டுமே என்னை மீட்டு வந்தது என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. சில தருணங்களை இங்கு குறிப்பிட ஆசைப் படுகிறேன்.
 
மனது சிறிது கனமாக இருக்கிறது. மீண்டு வந்து மீண்டும் சொல்கிறேன்......
 

No comments:

Post a Comment

உங்கள் விமர்சனம்/ கருத்துக்கள் அளித்து எனக்கு ஊக்கம் அளிக்க வேண்டுகிறேன்