Tuesday 14 January 2014

தாய் எனும் கோவில் (2)

தாய் எனும் கோவில் (2)
  
பெரியக்காவின் திருமணத்தின் பொழுது மாட்டு வண்டியில் விளையாடுகிறேன் என்று வண்டி குடை சாய்ந்து எனக்கு மூக்கில் அடிபட்டு ரத்தம். கல்யாண கலாட்டாவில் இது வேறு . ஒருமுறை தீபாவளி முடிந்து பீசாய் போன வெடிகளை எடுத்து அதன் மருந்தை சேகரித்து அதை கொளுத்தும் பொழுது எனது நெஞ்சில் ஒரு பெரிய தீக்காயம் பட்டது. பிறகு ஒருமுறை சைக்கிளை இரண்டு கையையும் விட்டு விட்டு ஓட்டி மண்ணைக்  கவ்வி முட்டி பேர்ந்தது. அம்மாசை குளத்தில் தாமரை காய் பறிக்க போய் சகதியில் மாட்டி தாமரைக் கொடி  காலெல்லாம் பின்னி கிழித்து கால் ரணகளமானது, பெரிய கோவில் குளத்தில் மதில் மேல் இருந்து குதித்து காலில் உடைந்த கண்ணாடி கிழித்தது. ஐந்தாம் வகுப்பு படிக்கும் பொழுது கதவிடுக்கில் இடது கை கட்டவிரல் மாட்டி விரல் நசுங்கியது. இது தவிர அவ்வப்போது எனக்கு வரும் ஜுரம், அம்மை, கழுத்தில் கழலை, கணை என்று உடல்நிலை சீர்கேடு நிறைய  வந்தது, இவ்வாறு அம்மாவிற்கு நிறைய கஷ்டங்களை கொடுத்துள்ளேன்.

என் அம்மாதான் எனக்கு கேடயம் (firewall). எனது தந்தையின் கோப அஸ்திரங்களில் இருந்து என்னை காப்பாற்றிய கேடயம். ஆனாலும் கண்மூடித்தனமாக எனக்கு பாதுகாப்பு கொடுத்தது இல்லை. கண்டிக்க வேண்டிய நேரத்தில் அடி கொடுக்க வேண்டிய நேரத்தில் அது சரியாக கிடைக்கும்.
இதை தவிர நான் ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் பொழுது எனக்கு மஞ்சள் காமாலை வந்தது. அப்போது இரவு 1 மணி 2 மணி என்று  அகாலத்தில் பேய்ப் பசி எடுக்கும். அம்மா அந்த நேரத்திலும் எழுந்து எனக்கு உணவு ஊட்டியது  என்றும் மறக்கக் கூடியது இல்லை.
எனக்கு சின்ன வயதில் நோயெதிர்ப்புச் சக்தி குறைவு. நோயெதிர்ப்பு சக்தி கூடுவதற்கு அம்மா என் மீது தனிக்  கவனம் எடுத்துக் கொண்டார். தினமும் கறந்த பசும் பால், கறந்த சூடு ஆறும் முன் எனக்கு  ஒரு கோப்பை கிடைக்கும். அதேபோல் அம்மா கையால் பிசைந்த பழைய சாதமும் அதற்கு தொட்டுக்கொள்ள கிடைக்கும்  மாவடு அல்லது மோர் மிளகாய் அல்லது ஆவக்காயை மறக்க முடியுமா பெரிய சம்சாரத்திலும் வருடம் முழுவதும் ஒவ்வொரு பண்டிகையும் வீட்டில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். சித்திரை மாதம் தொடங்கி பங்குனி வரை. தமிழ் புத்தாண்டு, சித்ரா பௌர்ணமி, வரலக்ஷ்மி நோன்பு, கிருஷ்ண ஜெயந்தி, ஆவணி அவிட்டம், தீபாவளி, கார்த்திகை, மார்கழி நோன்பு, பொங்கல் என எனக்கு தெரிந்து வருடம் முழுவதும் கொண்டாட்டம் தான்.  அம்மா முகம் சுளித்து நான் பார்த்ததில்லை. அம்மா தான் செய்யும் ஒவ்வொரு வேலையையும் மிகவும் சிரத்தையோடும் ஒரு அர்ப்பணிப்போடும் செய்வது தான் அவரது சிறப்பு.
 
மார்கழி மாதம் என்றால் வீட்டில் வைபவம்தான். அம்மா செய்யும் பொங்கல் எங்கள் தெருவில் இருந்த கிருஷ்ணன் கோவிலில் நைவேத்யம்  செய்யப்பட்ட பிறகே  நாங்கள் சாப்பிட முடியும். சில சமயம் எனக்குத் தோன்றும். சாமி என்ன சாப்பிடாமலா இருக்கிறது? அல்லது சாமிக்கு நாம் சாப்பாடு போடவில்லை என்றால் அது என்ன கண்ணையா  குத்தி விடும் என்று. ஒரு நாள் அம்மாவிடம் இதை கேட்டேன். அம்மா சொன்ன பதில் - இது  நாம் கடவுளுக்கு நன்றி பாராட்டும் செயல். அவன் நமக்கு தந்ததை அவனுக்கு காட்டுகிறோம். உண்ணச் சொல்லி கூறுகிறோம். குழந்தை தன் கையில் உள்ள சாக்லேட்டை அம்மாவுக்கு தரும். சாக்லேட் வாங்கித் தந்ததே அம்மாதான். ஆனாலும் குழந்தை  அம்மாவுக்கு தரும் பொழுது அம்மா என்ன அதை வாங்கியா சாப்பிடுகிறாள்? அது போலத்தான் என்றார். வாழ்வியல் தத்துவத்தை இதை விட எளிமையாக யாரால் விளக்க முடியும்.
 
பொங்கல் சமயத்தில் அம்மா செய்யும் குழம்பு மீந்து போனால் மறுநாள் அது எரித்த குழம்பாக உருமாறும். அம்மாவின் கை பட்ட அந்த குழம்புக்கு உள்ள ருசியே தனிதான். பழைய சாதத்துடன் எரித்த குழம்பு பேஷ் பேஷ்.எனக்கு சமையல் கற்றுக் கொடுத்தது எனது அம்மா தான். சமையல் மட்டும் அல்ல சிக்கனம், சேமிப்பு போன்றவையும் எனது தாயிடம் நான் கற்ற பாடங்கள், வாசலில் குச்சி ஐஸ் வந்தால் அம்மாவை கெஞ்சி வாங்கி தின்பேன். ஆனால் மாதத்திற்கு ஓரிரு முறை மட்டும் தான் கிடைக்கும். அடிக்கடி கேட்டால் அம்மா எப்பவாவது ஒருமுறை சாப்பிடலாம் குழந்தே, அடிக்கடி சாப்பிட  முடியுமா. நம்ம குடும்ப நிலைமைக்கு இதெல்லாம் கட்டுப்படி ஆகுமா? என்று வீண் செலவை குறைப்பதின் மதிப்பை எனக்கு உணர்த்தினார்..
 
அம்மா மருதாணி அரைக்கும் அழகே அழகுதான். பொறுமையாய் எனக்கும்  கை மற்றும் கால்களில் அம்மா மருதாணி இட்டு விடுவார்.
அம்மா மிகவும் தைரியசாலி. அம்மா பயந்து நான் பார்த்ததே இல்லை. இக்கட்டான நேரங்களில் அம்மா நிலைமையை சமாளிக்கும் அழகே தனி. அம்மாவின் பொறுமை நான் கண்டு வியந்த ஒன்று. அம்மாவிற்கு என்னை மிகவும் பிடிக்கும். நான் தவம் இருந்து பெற்ற பிள்ளை நீ என்று அம்மா பல சந்தர்பங்களில் கூறுவது உண்டு. எனக்கு நினைவு தெரிந்து அம்மாவுக்கு மன வருத்தம் ஏற்படுத்தும் விதமாக நான் நடந்து கொண்டதில்லை. சில சம்பவங்கள் சில சந்தர்ப்பங்கள் என்னை என் அம்மாவின் முன்னால்  குற்றவாளியாக நிறுத்தி இருக்கிறது. அதற்கு சில சந்தர்ப்பவாதிகளின் சதியே காரணம். நான் முன்பே சொன்னது போல கடைக் குட்டியாய் இருந்தது சில நேரங்களில் சாபமாக போனது. அம்மா கண்டிப்பாக அதை நம்பி இருக்க மாட்டார். ஆனாலும் அம்மா சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவித்திருப்பார் என்பது எனக்கு நன்கு தெரியும். ஒரு காலக்கட்டத்தில் அம்மாவால் என் மீது வைத்த பாசத்தைக்  கூட வெளிப்படையாக காட்ட இயலாத சூழல் இருந்தது என்பது எனக்கு நன்றாக புரிந்தது. நான் தனிமையில் இதை நினைத்து வருந்துவதை தவிர எனக்கு வேறு வடிகால் அமைய வில்லை.


மேலும் பேசுவோம்...

No comments:

Post a Comment

உங்கள் விமர்சனம்/ கருத்துக்கள் அளித்து எனக்கு ஊக்கம் அளிக்க வேண்டுகிறேன்