Sunday, 12 January 2014

நா.ச.சு.ம (2)




என் செல்லம்மா பாட்டி ....
 

பெயருக்கு ஏற்றார் போல் ரொம்ப செல்லமான பாட்டி. என் அப்பாவின் தாயார். வீட்டுக்கு நான் கடைக் குட்டி என்பதால் எனக்கு செல்லம் அதிகம். பாட்டி பற்றி சொல்ல வேண்டும் என்றால் அன்பு எவ்வளவு கொடுத்தாரோ அதே போல் கண்டிப்பும் நிறைந்தவர். தாத்தா பாட்டி உறவு அரிதாகி கொண்டு வரும் இந்த கால கட்டத்தில் நாங்கள் எல்லாம் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். எங்களை வழி நடத்தி செல்ல பெரியவர்கள் வீட்டில் இருந்தனர். பாட்டி நிறைய கதைகள் சொல்லுவார். பாட்டியின் சாகச கதைகள் தான் எங்களுக்கு சின்ன வயசில் பெரிய பொழுது போக்கு.
 
பாட்டியின் பிடிவாதம் கண்டிப்பு பற்றி எனது சகோதரிகளும் தாயும் சொல்ல நிறைய கேள்விப்பட்டிருந்தாலும் நான் கண்டது பாட்டியின் சாந்த முகம் மட்டும் தான்.  பாட்டி மிகவும் சுறுசுறுப்பானவர். 90 வயதிலும் பாட்டியின் சுறுசுறுப்பு அசர வைக்கும். எங்கள் வீட்டில் பாட்டிதான் ராணி. பாட்டி வைத்ததுதான் சட்டம். பாட்டியின் பேச்சுக்கு மறு பேச்சு என்பதே இல்லை. செல்லம்மா பாட்டி எனது அம்மாவிற்கு பெரிய பக்க பலமாக இருந்ததாக எனது அம்மா அடிக்கடி சொல்லி சிலாகிப்பது உண்டு. தாத்தாவின் மறைவிற்கு பிறகு ஒற்றை மனுஷியாக இருந்து எனது அப்பாவையும் பெரியப்பாவையும் வளர்த்து ஆளாக்கிய பாட்டி எனக்கு ஒரு அவதார புருஷியாகவே தோன்றுவார்.
 
ஒற்றை மனுஷியாக வீட்டையும் நிர்வாகம் செய்து, வயல் வரப்பையும் பார்த்துக்கொண்டு, மாடு கன்றுகளை சமாளித்து அவரது திறமைக்கு அளவில்லை. எனது பாட்டியின் திறமைக்கு அவர் பல மேலாண்மை சான்றிதழ்களுக்கு (MBA degrees) தகுதியானவர்.

பாட்டி ஓலை விற்ற காசு, மட்டை விற்ற காசு புடவை தலைப்பில் எப்போதும் முடிந்து வைத்திருப்பார். எங்கள் இளவயது கால கட்டத்தில் கைப் பணம் (pocket money) கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது.  பாட்டியை தாஜா பண்ணி நானும் எனது சகோதரி உஷாவும் அவ்வப்போது பாட்டியிடம் 5 பைசா 10 பைசா பெறுவது உண்டு. அந்த கால கட்டத்தில் 5 மற்றும் 10 பைசாக்கள் என்பது எங்களுக்குப் பெரிய கைப் பணம்.

பாட்டியின் மேலாண்மை திறமைக்கு மற்றொரு எடுத்துக்காட்டு குடும்ப நிர்வாக அதிகாரத்தை  சரியான நேரத்தில் இளைய தலைமுறையின் கையில் கொடுத்தது. வீட்டை நிர்வகிக்கும் பொறுப்பு என் தாய் வசம் கொடுக்கப் பட்டாலும் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் என் பாட்டியின் கையில் இருந்தது. ஒரு தலைமை நிர்வாக அதிகாரிக்கு (CEO) உண்டான அனைத்து தகுதிகளும் அவருக்கு இருந்தது. இத்தனைக்கும் பாட்டி பெரிய படிப்பெல்லாம் படித்ததில்லை. எல்லாம் வாழ்கைப் பாடம் தான்.

எங்கள் பாட்டி ஒரு பட்டம் பெறாத ஆனால்  கை தேர்ந்த மகப்பேறு மற்றும் குழந்தை நல மருத்துவர். எனது தாயின் அனைத்து பிரசவங்களும் கிராம செவிலியைக் கொண்டு எனது பாட்டியின் மேற்பார்வையில்தான் நடந்ததாம். எல்லாமே சுகப் பிரசவங்கள் தான்.

நான் பிறந்தது கார்த்திகை மாதம். ஒரு அடைமழை நாள். நான்கு கூடல் வாயும் ஒன்றாய் கொட்டியது என்று உவமானம் கூறுவார். கூடல்வாய் என்பது வீட்டு முற்றத்தில் நான்கு மூலையிலும் மழை நீர் வெளியேற அமைக்க பட்டது. மழை அதிகமாக பெய்யும் பொழுது அருவி போல் கூடல்வாய் வழியாக நீர் கொட்டும். செவ்வகமான முற்றத்தில் நான்கு கூடல்வாயும் ஒன்றாக கொட்டியது என்றால் மழையின் தீவிரத்தை கற்பனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள்.  நான் பிறந்தவுடன் கூடல் வாய் நீரில் பாட்டி என்னை குளிப்பாட்டினாராம். பாட்டியின் இந்த செயலுக்கு தர்க்க ரீதியான காரணம் எனக்கு புரியவில்லை என்றாலும் பாட்டியின் அந்த தைரியத்தைப் பாராட்ட வேண்டும். 

குழந்தைகள் நலம் காப்பதில் பாட்டிக்கு நிகர் யாரும் இல்லை. எல்லாமே கை வைத்தியம் தான். வீட்டின் கொல்லையில் அனைத்து மூலிகைகளும் இருக்கும். எந்த விதமான உடல் சுகவீனம் என்றாலும் அதற்கு மூலிகை மருந்துதான். வாரம் ஒருமுறை எண்ணைக் குளியல். மாதம் ஒரு முறை வயிற்றுக்கு விளக்கெண்ணை என எங்களுக்கு நிரந்தர நோய் எதிர்ப்புச் சக்தியை கொடுத்தவர்.

சின்ன சின்ன வேளைகளில் எங்களை ஈடுபடுத்தி எங்களை அறியாமல் எங்கள் கடமையை எங்களுக்கு உணர்த்தியவர். கடைசிக் காலத்தில் பாட்டி படுத்த படுக்கையாய் போனது எங்களுக்கெல்லாம் அதிர்ச்சி. கொல்லைப் புறத்தில் வழுக்கி விழுந்ததில் பாட்டிக்கு பக்க வாதம் வந்தது. இந்த கால கட்டத்தில் 
பாட்டிக்கு சின்னச் சின்ன பணிவிடைகள் செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்தது.

90 வயதுக்கு பிறகு கூட பாட்டி ஆரோக்யமாக இருந்ததற்கு காரணம் அவர்களது முறையான வாழ்வியல் சித்தாந்தங்களால் தான் என்பது நிதர்சனமான உண்மை. நம் முன்னோர்கள் விட்டு சென்ற நல்ல பழக்க வழக்கங்களை பின் பற்றி நம் வாழ்கையையும் நெறி படுத்திக்கொள்வோம். 

மீண்டும் பேசுவோம் 
 

நான் சந்தித்த சுவாரஸ்யமான மனிதர்கள் (1)

சேதுராமன் சார் 

வலைப் பதிவில் சுவாரஸ்யமான மனிதர்கள் பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றிய உடன் எங்கு ஆரம்பிப்பது என்ற குழப்பம் உண்டானது. நிறைய முகங்கள் மனத் திரையில் தோன்றி மறைந்தன. ஏறு வரிசையில் செல்வதா அல்லது இறங்கு வரிசையில் செல்வதா என்ற சிறிது நேர அலை பாய்தலுக்கு பிறகு ஏறு வரிசை என முடிவானது. அதாவது எனது இளவயது முதல் ஆரம்பிக்கிறேன்.
 
நான் முதன்முதல் பள்ளிக்கு சென்ற நாள் எனக்கு நினைவு உள்ளது. அப்போதேல்லாம் 5 வயதிற்கு தான் பள்ளிக்கு அனுப்புவார்கள். இப்போது போல 2-1/2 வயதிலேயே பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு பெற்றோர் அவரது எதிர்காலம் பற்றி பயப்படும் நிலைமை அப்போது இல்லை. ஆனாலும் எனது குறும்புகளும் கொட்டங்களும் தாங்காமல் எனது அப்பா என்னை 4-1/2 வயதில் பள்ளிக்கு அனுப்பினார். 1970இல் விஜய தசமி அன்று பழம் பாக்கு வெற்றிலை தட்டோடு எனக்கு புதுத் துணி உடுத்தி என்னை பள்ளியில் சேர்க்க எனது தந்தையார் அழைத்து சென்றது இப்போதும் எனக்கு பசுமையாக நினைவில் உள்ளது.  அப்போது பள்ளியில் ஆசிரியராக திரு சேதுராமன் அவர்கள் இருந்தார். என்னை  அவர் முன் கொண்டு எனது தந்தையார் நிறுத்தினார். திரு சேதுராமன் அவர்கள் எனது தந்தைக்கு நெருங்கிய நண்பர். எங்கள் குடும்ப நண்பரும் கூட. என்னை பார்த்த அவர் தலை மேலாக கையை தூக்கி மறுபுறம் உள்ள காதை தொடச்  சொன்னார். கைக்கு காது எட்டினால் பள்ளி செல்லும் வயது வந்து விட்டது என்று கணக்காம். அப்போதெல்லாம் பிறப்பு இறப்பு சான்றிதழ் நடை முறையில் இல்லை.
 
எனது கை காதுக்கு எட்டியதால் நானும் பள்ளியில் சேர்க்கப்பட்டேன். எங்கள் வீட்டில் இருந்து மூன்றாவது வீட்டில் தான் எங்களது பள்ளி இயங்கிக் கொண்டிருந்தது. நானோ மிகுந்த  அம்மா செல்லம். அம்மாவை விட்டு அங்கு இங்கு போக மாட்டேன். பள்ளி அரை நேரம் என்றாலும் அவ்வளவு நேரம் அம்மாவை விட்டு பிரிவது என்பது எனக்கு ஆகாத காரியம். அவ்வப்போது ஒற்றை விரலை காண்பித்து விட்டு பள்ளியின் கொல்லை  வழியாக எங்கள் வீட்டிற்கு சென்று விடுவேன். என் அம்மா என்னை இழுத்து கொண்டு வந்து பள்ளியில் விட்டு விட்டு செல்வார்.
 
சில நேரம் திரு சேதுராமன் அவர்கள் என்னை என் வீட்டிற்கு மோரோ அல்லது காபியோ வாங்கி வர சொல்லி அனுப்புவார். அதை சாக்கு வைத்து வீட்டுக்கு ஓரிரு முறை சென்று வரும் வாய்ப்பு கிட்டும்.
 
எனது முதல் ஆசான் என்ற முறையில் திரு சேதுராமன் அவர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதையும் மதிப்பும் உண்டு. பிற்காலத்தில் அவரது புதல்வர் திரு ராஜு எனது அக்காவின் கணவரானது எனக்கு அவரது கடைசி காலம் வரையில் அவருடன் தொடர்பில் இருக்கும் பெரும் பாக்கியத்தை அளித்தது.
 
சார் பற்றி சொல்ல வேண்டும் என்றால் அவருக்கு எனது தாயார் உடன் பிறவா சகோதரி போல. எங்களை அவர் தனது பிள்ளைகள் போலவே பாவித்தார். கடின உழைப்பாளி. நல்ல மனிதர். தன்னலம் இல்லாதவர். எங்கள் குடும்பத்தில் ஒரு மூத்த உறுப்பினாராகவே எனது பெற்றோரால் பாவிக்கப் பட்டவர்.  அவரைப் போன்ற மேன் மக்களின் தொடர்பு என்பது இன்றைய காலக் கட்டத்தில் அரிது.
 
அந்த காலத்தில் அவர் எங்கள் ஊருக்கு அருகில் உள்ள சிறுபுலியூர் மற்றும் பேரளத்தில் டியூஷன் எடுக்க செல்வார். இரவு திரும்பும் போது  தினமும் எங்களுக்கு வறுத்த வேர் கடலை வாங்கி வருவார்.  வேர் கடலை என சொல்ல தெரியாமல் டகலடொக்க என நான் கூறுவேணாம். ஒரு சில நாட்களில் அவர் வர நேரம் ஆனால் வேர் கடலைக்காக நாங்கள் தூங்காமல் காத்திருந்ததும் உண்டு. எவ்வளவு நேரம் ஆனாலும் கதவை தட்டி டகல டொக்க கொடுக்காமல் அவர் சென்றது இல்லை. பல வருடங்கள் இது தொடர் நிகழ்ச்சியாக நடந்தது.
 
குழந்தைகள் மேல் அவருக்கு அலாதி பிரியம். எங்களுக்கு நிறைய கதைகள் சொல்வார். அதில் அவர் சந்தித்த நிகழ்வுகள், சம்பவங்களும் அடங்கும். அந்த கால கட்டத்தில் கிராமங்களில் பேய் நடமாட்டம் என்பது மிகவும் சாதாரணமான ஒன்று. அவர் ஒரு முறை மோகினி பேயின் வசமிருந்து தப்பித்து வந்த கதை இன்றும் என்னால் மறக்க முடிவதில்லை.
 
எனது முதல் ஆசானுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
 

Sunday, 5 January 2014

எனக்கு தமிழூட்டிய ஆசான்கள் (2)




திரு தி. இராமலிங்கம்

திரு திஇரா அவர்கள் தமிழ் கற்பிக்கும் முறையே தனி. சிரிக்க சிரிக்க பாடம் நடத்துவார். அதே சமயம் மிகவும் கண்டிப்பானவர். தமிழ் இலக்கணம் அவரிடம் பயின்றால் பிறகு பரீட்சைக்கு படிக்க வேண்டிய அவசியமே இல்லை. கேள்வித்தாளை பார்த்தவுடன் தி-இரா அவர்களின் முகமும் அவர் பாடம் நடத்திய விதமும் அவர் மேற்கோள் காட்டிய உதாரணங்களும் நம் மனக்கண் முன்னே விரியும் .

முழுவதும் தமிழிலேயே பாடங்கள் நடத்துவார். எங்களுடன் உரையாடும் பொழுது கூட ஆங்கில வார்த்தை வராது.  அவரை அய்யா என்றே நாங்கள் அழைக்க வேண்டும். சில சமயங்களில் வாய் தவறி அவரை சார் என்று அழைத்து விட்டால் அவர் செய்யும் கிண்டலும் கேலியும் மறு முறை அவரை அவ்விதம் அழைக்க தோன்றாது . எனக்கு தமிழ்பால் ஊட்டி தமிழ்பால் எனக்கு பற்று வர தி-இரா அய்யாவும் ஒரு காரணம். அவரது தாக்கம் தான் என்னை இந்த வலைப் பதிவை முழுவதும் தமிழிலேயே தர தூண்டுகோலாய் அமைந்தது.

உவம உருபுகள் பற்றி ஒரு முறை அவர் என்னை பாடலாக படிக்க சொன்னது இன்றும் என் நினைவில் உள்ளது.
"போல அன்ன ஒப்ப புரைய மான கடுப இயைப ஏற்ப நேர நிகர அன்ன இன்ன என்பவும் பிறவும் உவமத்துருபே"

அதேபோல் ஒரு செய்யுள்... நளன் தமயந்தி என்று நினைக்கிறேன்..
பனியால் நனைந்தும் வெயிலால் உலர்ந்தும் பசியால் அலைந்தும் உலவா 
அநியாய வெங்கை அரவால் இறந்த அதிபாவம் என்கொல் அறியேன் 
தனியே கிடந்து விட நோய் செறிந்து தரைமேல் உருண்ட மகனே 
இனி யாரை நம்பி உயிர் வாழ்வோம் எந்தன் இறையோனும் நானும் அவமே ....

இந்த செய்யுளை அவர் உணர்ச்சி ததும்ப எங்களுக்கு நடத்திய போது எங்கள் கண்ணில் நீர் கசிந்தது இன்றும் என்னால் மறக்க முடியவில்லை.

அடுத்து திருஅருட்பா போட்டி பற்றி இங்கு சொல்ல நான் கடமை பட்டிருக்கிறேன்.

ஒவ்வொரு ஆண்டும் பள்ளியில் நடக்கும் இசை போட்டியில் எனக்கு நிச்சயம் ஒரு பரிசு உண்டு. எனது திறமையை ஊக்குவிக்கும் பொருட்டு மாவட்ட அளவில் நடந்த திருஅருட்பா போட்டி நடந்தது. என்னை போல் சில நேரம் என்னை விட நன்கு பாடக்கூடிய மாணவிகள் இருக்க போட்டிக்கு எனது பெயரை பள்ளியின் சார்பாக அவர் முன் மொழிந்தார்.

எனக்கோ சிறிது பயமாக போய்விட்டது. என்னை ஊக்குவித்து என்னை சிறப்பாக பாட வைத்த பெருமை அவரையே சாரும். எனக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு வாங்கி தந்த பாடல் இதுதான்.

"ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும் 
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் 
பெருமையுடன் நினது திருப் புகழ் பேச வேண்டும் 
பொய்மை பேசாதிருக்க வேண்டும் 
பெரு நெறி பிடித்தொழுக வேண்டும் 
மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும் 
மருவு பெண்ணாசையை மறக்க வேண்டும் 
உன்னை மறவாதிருக்க வேண்டும் 
மதி வேண்டும் நின் கருணை நிதி வேண்டும் 
நோயற்ற வாழ்வை நான் வாழ வேண்டும் 
தரும மிகு சென்னையில் கந்த கோட்டத்தில் வளர் தலமோங்கு கந்தவேலே!
சண்முக துய்ய மணி இன்முக செய்வ மணி ஷண்முக துய்ய மணியே!"

அவர் எனக்கு கற்பித்த விதம் என்னை மிக இலகுவாக போட்டியில் பாட வைத்ததும் அல்லாமல் எனக்கு மாவட்ட அளவில் முதல் பரிசும் பெற்று தந்தது என்னால் மறக்க இயலாத ஒன்று.
 
அவர் கூறும் மேற்கோள்கள் மிகவும் விசித்திரமானவை. அந்தந்த  கால கட்டத்தில் வந்த தமிழ் திரைப்பட வசனங்களை மேற்கோள் காட்டி பேசுவார். எல்லா படங்களும் பார்த்துவிடுவார். இப்படி அவர் நடத்தும் பாடங்கள் மாணவர்கள் மனதில் பசுமரத்து ஆணி போல பதிந்து விடும்.

நாங்கள் பத்தாவது படிக்கும் பொழுது பொது தேர்வுக்கு முன்பு மாணவர் மன்றம் நடத்தும் தமிழ் தேர்வு நடக்கும். திரு தி-இரா அய்யாவின் மாணவனாக நான் மாணவர் மன்ற தமிழ் தேர்வில் மாவட்டத்தில் முதல் மாணவனாக 91 மதிப்பெண் எடுத்து அவருக்கு சமர்பித்தேன்.

20 ஆண்டுகள் கழித்து எனது பெற்றோரின் சதாபிஷேக (80 வயது) நிகழ்ச்சிக்கு அவர் வந்த பொழுது இதை என் மனைவியிடம் நினைவு கூர்ந்தார்.

மேன்மக்கள் மேன்மக்கள் தான் என்பதற்கு அவர் ஒரு சிறந்த உதாரணம்.

திரு சடாக்ஷரம் மற்றும் திரு தி-இரா அய்யா இருவருக்கும் எனது சிரம்தாழ்த வணக்கங்கள்.
 

Thursday, 2 January 2014

எனக்கு தமிழூட்டிய ஆசான்கள் (1)

திரு சடாக்ஷரம் 

எனக்கு தமிழ் மீது பற்று ஏற்பட காரணமாக இருந்த இரு பெரும் தமிழ் ஆசான்கள் திரு சடாக்ஷரம் மற்றும் "திஇரா" எனப்படும் திரு தி. ராமலிங்கம். மங்கை நல்லூர் கே எஸ் ஓ உயர் நிலை பள்ளியில் இருவரும் எனக்கு ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு தமிழ் ஆசிரியர்கள்.

திரு சடாக்ஷரம் அவர்கள் எளிய மனிதர். நகைச் சுவை உணர்வு மிக்கவர். சிலேடை பேசுவதில் வல்லவர். தமிழில் மிகுந்த பற்று உள்ளவர். பள்ளியின் ஆண்டு விழாக்களில் சரித்திர நாடகங்கள் போடுவோம். ஒவ்வொரு ஆண்டும் ஓர் நாடகம் அதற்கு இவர் தான் திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதுவார். எனக்கு இருந்த கொஞ்சம் இசை திறமை என்னை அவர் அணியில் சேர்த்துக்கொள்ள உதவி செய்தது. பள்ளி நாடகங்களில் பின்னணி பாட எனக்கு அவர் பலமுறை வாய்ப்பு அளித்தார்.

1979ஆம் ஆண்டு. பள்ளி ஆண்டு விழாவில் திருப்பூர் குமரன் (கொடி காத்த குமரன்) நாடகம் போட்டோம். அது ஒரு இசை நாடகமாக அமைந்தது.  இன்றும் அந்த நாடகத்தின் பாடல் வரிகள் சில நேரங்களில் என்னையும் அறியாமல் நான் பாடுவது உண்டு. இந்த வலை பதிவை வாசிக்கும் உங்களுக்காக அந்த வரிகள் இதோ:

கதை களம் இதுதான். சுதந்திர போராட்ட வீரர்கள் கொடிகாத்த குமரனின் தலைமையில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து ஊர்வலம் போகின்றனர். சாதாரணமாக இது போன்ற ஒரு சூழ்நிலையில் வீர வசனங்கள் பேசப்படும். திரு சடக்ஷரம் அவர்கள் இதற்கு ஒரு இசைக்  கோலம் போட்டார்.

பிரிட்டிஷ் சிப்பாய்

ஊர்வலம் செல்ல வேண்டாம் எங்கள் உத்தரவை மீறி சென்றால் மரணம் தான். ஊர்வலம் செல்ல வேண்டாம்.
வந்தே மாதரம் என்றே நீங்கள் வாய் கிழிய கத்தி என்ன பயன் கண்டீர் கட்டளை கேட்டிடுவீர் உமக்கு காசு பணம் பட்டம் கனமாக தருகிறோம் - கட்டளை கேட்டுடுவீர்

கொடிகாத்த குமரன்

பட்டம் பணம் எல்லாம் எங்களுக்(கு ஏ )ண்டா ஒங்க கொட்டம் அடக்கியே ஒட்டிடுவோண்டா 
கத்தி ரத்தம் இல்லாம கட்டுப்பாடா சேர்ந்து வந்து மொத்தமாக எதிர்த்து நிப்போம் வெள்ளைய ராஜா 
நீயும் மூட்டை கட்டி ஓட வேண்டும் இல்லையா ராஜா 
பட்டம் பணம் எல்லாம் எங்களுக்(கு ஏ )ண்டா ஒங்க கொட்டம் அடக்கியே ஒட்டிடுவோண்டா போடா போடா போ ......

திரு சடாக்ஷரம் அவர்களின் எளிய தமிழ் நடை எனக்கு கவிதை எழுத ஒரு ஊக்கம் கொடுத்தது.

திரு திஇரா அவர்கள் பற்றி பிறகு பேசுகிறேன்.

 

Wednesday, 1 January 2014

நினைவலைகள்

1998

எனது அம்மாஞ்சி (மாமா மகன்) ஸ்ரீகாந்த் விஸ்வநாதனுக்கு நன்றி.
இந்த படம் 1988 இல் எனது சகோதரி ஹேமாவின் திருமணத்தின் பொழுது எடுக்கப்பட்டது. இடம் கணேஷ் மண்டலி கல்யாண மண்டபம், நங்கநல்லூர், சென்னை 
நிற்பது  : (இடமிருந்து வலம்) விஸ்வேஸ்வரன் கௌரிஷங்கர், ரம்யா ஆனந்த், கோகுல் ஸ்ரீனிவாசன், மீனா கார்த்திக்,
நடுவில் நான் (ஸ்ரீ முகி)
என் மடியில் கோபமாய் இருப்பது கார்த்திக் லக்ஷ்மினரயணன் - சிரிப்பது வினோத் பாலசுப்ரமணியன் 
 

நான் வியந்த முதல் மனிதர் - SUPER STAR

 சூப்பர் ஸ்டார் ரஜினி  

எனது முதல் பதிப்பாக நான் வியந்த ஒரு மனிதரை பற்றி சொல்ல ஆசைப்படுகிறேன். இவரை பற்றி எல்லாருக்கும் மிக நல்லாகவே தெரியும். நான் புதிதாக சொல்ல ஒன்றும் இல்லை. ஆனாலும் என்னுள் இவர் உண்டாக்கிய தாக்கம் பற்றி இங்கு சொல்ல ஆசைப்படுகிறேன்.
 
1976 - எனக்கு 10 வயது. அந்த காலத்தில் திரைப்படம் பார்க்க போவது என்பது ஒரு பெரிய சலுகை. எல்லா படமும் பார்க்க அனுமதி இல்லை. படம் சென்சார் பண்ண படுவதை போல, படத்தின் தரம், நடிகர்கள், படம் திரையிடப்படும் திரையரங்கம் ஆகியவற்றை பொறுத்தே எங்களுக்கு அனுமதி அளிக்கப்படும்.
 
அப்படி ஒரு படம் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. எனக்கு நினைவு தெரிந்து நான் தூங்காமல் முழுதாக பார்த்த படம் அது.  அது தான் மூன்று முடிச்சு படம். கமல், ரஜினி, ஸ்ரீதேவி நடித்து. அப்போது ரஜினி வெறும் நடிகர் தான். அதுவும் வில்லன் நடிகர். ஆனாலும் ரஜினியின் நடிப்பு, அவரது ஸ்டைல் என்னை மிகவும் கவர்ந்தது. அதுவரை சினிமாவில் அப்படி ஒன்றும் ஈர்ப்பு இல்லாத எனக்கு ரஜினி ஒரு தாக்கம் உண்டாக்கினார்.
 
விளைவு, எங்கள் கீரனூர் வீட்டு திண்ணையில் இருந்த சிறிய ரூமில் அகில இந்திய ரஜினி ரசிகர் மன்றம் ஆரம்பிக்க வைத்தது. எனது அப்பாவுக்கு தெரியாமல், செல்லம்மா பாட்டிக்கு தெரியாமல் ரகசியமாக வைத்திருந்தேன். தினத் தந்தி பேப்பர் மற்றும் குமுதம் ஆனந்த விகடன் பத்திரிக்கைகளில் வந்த ரஜினி படங்களை கத்தரித்து அந்த அறை முழுவதும் ஒட்டி இருந்தேன். வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள் பாடலில்  ரஜினி பாடும் வரிகள் "மண வினைகள் யாருடனோ மாயவனின் விதி வகைகள்" வரிகள் ரஜினி பாடும் விதமும் அவரது மானரிசமும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

அந்தகாலத்தில் எதாவது படம் பார்த்துவிட்டு வந்தால் அதன் கதையை மற்ற நண்பர்களுக்கு சொல்லுவதே ஒரு தனி த்ரில்ல்தான். அந்த வகையில் பட்டாபி, ரவி, வெங்கடேஷ், பட்டாபி தம்பி கணேஷ்  (அப்போது அவனுக்கும் 3 வயது தான் இருக்கும்) ஆகியோருக்கு சொல்லி ரஜினி புராணம் பாடி அவர்களையும் சங்கத்தில் மெம்பெர் ஆக்கினேன். மெம்பெர் ஆவதற்கு ஒவ்வொருவரும் தலா 3 ரஜினி போட்டோ  - பேப்பரில் இருந்தோ அல்லது எதாவது பத்திரிக்கையில் இருந்தோ எடுத்து வர வேண்டும்.

ரஜினிக்கு கற்பூரம் எடுத்து கொண்டாடாத குறைதான். வாரம் ஓரிரு முறை ரஜினி ரசிகர் மன்ற கூட்டம் நடை பெரும். சங்க ரூமில் இடம் இல்லாததால், கிருஷ்ணன் கோவில் வாசலில் உள்ள ண்டபத்திலோ அல்லது வீட்டுக்கு மேலண்ட கொல்லையில் உள்ள கிணற்று மேடையிலோ மீட்டிங் நடைபெறும்.

ரஜினியை பற்றி நாங்கள் படித்த அல்லது இலங்கை வானொலி மூலம் கேட்ட செய்திகளை சுவாரசியமாக பகிர்ந்து கொள்வோம். எங்கள் ரஜினி ரசிகர் மன்றம் இன்று தொடர்ந்து இருந்தால் அது மிகவும் தொன்மையானதாக இருந்திருக்கும்.

எங்கள் ஆர்வத்தை பார்த்து மாடியாத்து கண்ணன் போன்ற எங்கள் ஊர் வாலிபர்கள் சிவாஜி ரசிகர் மன்றம் ஆரம்பித்தனர். ஒரு ஆறு மாதம் ஒரு வருடம் கழித்து ஒரு நாள் எங்களது ரஜினி ரசிகர் மன்றம் கலைக்கப்பட்டது. ரஜினி மனஉளைச்சல் காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டது தான் காரணம்.

எனது தந்தையார்  ஒருநாள் பேப்பர் படித்துவிட்டு ரஜினி மருத்துவ மனையில் அனுமதிக்க பட்ட விஷயம் பற்றி வீட்டில் கூறினார். அதை கேட்ட என் இளைய சகோதரி தம்பி நீ ரசிகர் மன்றம் ஆரம்பித்த நேரம் ரஜினிக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது என்று போட்டு உடைக்க, எங்களது ரசிகர் மன்றம் என் அப்பாவால் அப்புறப் படுத்தப்பட்டது. ஆனாலும் சில காலம் ரசிகர் மன்ற நிர்வாகிகள்  ரகசிய கூட்டம் போடுவது தொடர்ந்தது. அதன் பிறகு எங்கள் ரசிகர் மன்ற ரகசிய கூட்டமும் நின்று போனது. ஆனாலும் ரஜினி பற்றிய எங்கள் அபிப்ராயமும், அவர் மீது இருந்த எங்கள் அன்பும், அபிமானமும் குறையவே இல்லை. 

 
 

இனிய துவக்கம்

முகவுரை  

அனைவருக்கும் எனது புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். எனக்கு சிறு வயது முதல் எழுதுவது பிடிக்கும். என்னுடைய விருப்பங்கள், நான் சந்தித்த நபர்கள், சென்ற இடங்கள், எனது பழைய நினைவுகள், சிறு வயது குறும்புகள் போன்ற பல்வேறு விஷயங்களை பதிவு செய்ய ஒரு வாய்ப்பாக இந்திய வலைப்பதிவை (Blog) பயன் படுத்த விரும்புகிறேன்.