Tuesday, 14 January 2014

தாய் எனும் கோவில் (3)

என் அம்மா (3)

 ஐந்து பெண்களை பெற்றவன் ஆண்டி என்பார். என் தாய்க்கோ ஆறு பெண்கள். எப்படி கரை சேர்க்கப் போகிறாள்? எங்கள் குடும்பம் எப்போது சறுக்கும் வேடிக்கை பார்க்கலாம் என கிராமத்தில் சில கழுதைப்  புலிகள் காத்திருந்தன. கழுதை புலி இயற்கையில் ஒரு கோழை. அதனால் தான் புலியுடன் அதற்கு கழுதை என்ற அடை மொழியும் கூட சேர்ந்திருக்கிறது. காட்டிலும் அது பதுங்கி பதுங்கி தான் வாழும்.  எங்கள் கிராமத்து கழுதை புலிகள் என் தந்தைக்கும் அவரது சகோதரருக்கும் சச்சரவு கூட்டி குடும்பத்தை பிரிக்க சூழ்ச்சி செய்து அதில் வெற்றியும் பெற்றனர். ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் அதை நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.  

கடவுளின் சித்தம் போலும். அடுக்கடுக்காய் கஷ்டங்கள். சங்கடங்கள். சூப்பர் ஸ்டார் பட வசனம் போல 

"ஆண்டவன் நல்லவங்களை சோதிப்பான் கைவிடமாட்டான்
கெட்டவர்களுக்கு நிறைய கொடுப்பான் ஆனால்  கை விட்டுவிடுவான்" 

உண்மைதான். நிறைய சோதனைகள். நிறைய சங்கடங்கள். இதனால் அம்மா இறை சக்தியை மிக சமீபமாக நெருங்கும் ஆற்றலை பெற்றார். பீஷ்மர் போல தனது இறுதிநாளை நிர்ணயிக்கும் சக்தி அம்மாவிற்கு வந்தது என்றேதான் சொல்ல வேண்டும். பிற்காலத்தில் நடந்த நிகழ்வுகள் எங்களுக்கு இதைத் தான் உணர்த்தியது.

 

ஆனால் கழுதை புலிகளின் நிலையோ வாழும் போதே இறப்பு வரதா என ஏங்கி நரக வேதனை அனுபவித்து வாழ்ந்த  தடமும் இருந்த இடமும்  தெரியாமல் மடிந்தன.

 
பாகப் பிரிவினைக்கு அச்சாரம் போடப்பட்டது 1975-இல் எனது இரண்டாவது சகோதரியின் திருமணத்தில்தான். 76-77இல் அது உச்சக்கட்டம் அடைந்து  செல்லம்மா பாட்டியின் மறைவிற்கு பின் வீடு ரெண்டானது. பாகப்பிரிவினயால் எட்டு கட்டு கிராமத்து வீடு கூறு போடப்பட்டது. வீட்டுக்கு குறுக்கே ஆங்காங்கே தட்டிகளும்  சுவர்களும் வைக்கப்பட்டன. இந்த களேபரங்கள் நடக்கும் பொழுது இரண்டு பெண்களே கரை சேர்திருந்தனர். குஞ்சும் குளவானுமாக மீதம் நான்கு பெண்கள் மற்றும் நான். கண் முன்னே கட்டிக் காத்த வீடு சிதிலமானது குறித்து என் தாய் பட்ட வேதனைகள் கொஞ்சம் நஞ்சமல்ல.
 
அம்மாவால் அனுகூலப் பட்டவர்கள் கூட இந்த இக்கட்டான சூழ்நிலையில் எங்களுக்கு ஆதரவாக பேச முன் வரவில்லை. அம்மா சோறூட்டி வளர்த்த எனக்கு அண்ணன் முறை உள்ள ஒருவரிடம் அம்மா தனது மனக்குறையை சொல்லிக் கொண்டிருந்தார். கையாலாகாத அவன் அம்மாவிற்கு ஆறுதல் சொல்லாமல் தனது பேச்சில் கீழ் கண்ட அமில வார்த்தையைக்  கொட்டினான்.
 
"கவலை படதே சித்தி... எனக்கு தெரிந்த  கன்னிகா மடம் இருக்கிறது உன் பெண்களை அதில் சேர்த்து விடுகிறேன்" என்றான்.  
 
அப்படிப்பட்ட ஒரு அரக்கனைக்  கூட மன்னிக்கும் பெரிய மனசு என் தாயிடம் இருந்தது. எனக்கு அப்போது 11-12 வயசு தான் இருக்கும். அவன் பேசிய வார்த்தையின் முழு அர்த்தமும் அந்த வயதில் எனக்கு புரியவில்லை. ஆனால் பிறகு என் தாய் பட்ட மனவேதனையை பார்த்த பொழுது அவன் பேசியது ஏதோ மிகப் பெரிய தவறு என்று புரிந்தது. எனக்கு விவரம் தெரிய ஆரம்பித்த பிறகு அவனது பேச்சை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. எவ்வளவு பெரிய கல் நெஞ்சம் கொண்ட கயவன் அவன் என்பது புரிந்தது.   என்னால் அவனை மன்னிக்கவே முடியவில்லை. அந்த நன்றி கெட்ட ஜென்மம் என் தாயிடம் கூறிய வார்த்தை இன்னும் என் மனதில் தீராக் காயமாகவே உள்ளது.
 
ஆனால் என் தாய்க்கு மிகப் பெரிய மனது. பிற்காலத்தில்  அவனையும்  என் தாய் மன்னித்து ஏற்றுக் கொண்டார். அவன் தனது வெட்கங்கெட்ட செயலுக்கு வருந்தினானா என்பது எனக்கு தெரியவில்லை. அப்படி அவன் வருந்தவில்லை என்றால் அவனெல்லாம் வாழவே தகுதி அற்றவன் என்பதே எனது கருத்து.
 
வீட்டில் சொத்துப்  பிரச்சினை வந்த பொழுது அதனால் எனது தாய் பெற்ற மன உளைச்சலை அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். அப்பாவை தேற்றுவாரா, படுத்த படுக்கையாய் இருந்த பாட்டியைப் பார்ப்பாரா, குடும்ப பாரம் சுமப்பாரா? அம்மா மனதளவில் சுருண்டு போனார். மன அழுத்தம் தாளாது அம்மா ஒருநாள் காணாமல் போனார். நாங்கள் தேடாத இடமில்லை. அம்மா மாயவரம் பேருந்து ஏறி சென்றதை பார்த்ததாக ஒருவர் சொல்ல நானும் பக்கத்து வீடு சீனுவும் மாயவரம் ரயிலடி, பேருந்து நிலையம் எல்லாம் தேடி அலைந்து  பிறகு சேந்தங்குடி துர்க்கை கோவிலில் அம்மாவை கண்டு பிடித்தோம். அந்த இக்கட்டான நேரத்திலும் அம்மாவின் மனது இறை சக்தியை மட்டுமே நம்பி இருந்திருக்கிறது.
 
ஆனாலும் என் தாயின் மன உறுதி, தைரியம், தன்னம்பிக்கை மற்றும்  அவரது  இறைப்பணி அவரை ஒரு சாதனையாளராக இறுதிவரை இருக்க வைத்தது. அவரது அயராத உழைப்பு எங்களை உயர வைத்தது. 
 
என் தாயின் நிலையில் நான் இருந்திருந்தால் நினைக்கவே உள்ளம் பதறுகிறது. உத்தமி சாதித்து காட்டினாள். முப்பது ஆண்டு கழித்து பிரிவினை செய்யப்பட முழு வீடும்   எங்கள் வசம் வந்தது. நாங்கள் எல்லோரும் இன்று நல்ல நிலையில், எங்கள் தாயின் த்யாகத்திற்கும், அன்புக்கும், உழைப் பிற்கும் உதாரணமாக இருக்கிறோம்.
 
உடன் பிறந்தவர்களின்  பாசம், சொந்த பந்தங்களின் மனப்போக்கு முதலியன காலப் போக்கில் மாறலாம். அனால் அம்மாவின் அன்பு மட்டும் நிபந்தனை அற்றது (un conditional love). அதனால் தான் கடவுள் பெண்களுக்கு மட்டும் பிள்ளைப் பேற்றைக் கொடுத்திருக்கிறான் என நினைக்கிறேன். அதை உணர்ந்தவன் உயர்கிறான். உணராதவன் உழல்கிறான். நான் உயர்திருப்பதில் எனக்கு திருப்தி.
 
அம்மா ஒரு வெள்ளந்தி. சிலசமயம் அம்மாவின் வெள்ளந்தி தனத்தை சாக்காக வைத்து சிலர் குடும்பத்தில் கும்மி அடித்ததும் உண்டு. நான் அதில் நிறையவே பாதிக்கப் பட்டிருக்கிறேன். யாரால் எல்லாம் நான் பாதிக்கப் பட்டேனோ அவர்களை விட்டு விலகினேன். அம்மாவின் இறைப் பற்றும், பரோபகாரமும்  வேறு யாருக்கும் வராது. அம்மாவின் கட்டுப்பாடான வாழ்க்கை முறைதான் அவரது உடல் வலிமைக்கு ஆதாரம். அவரது கடவுள் நம்பிக்கைதான் அவருக்கு மன வலிமை கொடுத்திருக்கிறது. இல்லை என்றால் இவ்வளவு பெரிய குடும்பத்தை கட்டிக் காப்பது என்பது ஒரு சாதாரண மனுஷியால் ஆகாத காரியம். 

ஒரு முறை குடும்பத்தில் பாகப்பிரிவினை வந்து அல்லோல்ல கல்லோல்ல பட்டது போதும் இனி இப்படி ஒரு தவறு நம் குடும்பத்தில் நிகழக் கூடாது என்பதில் அம்மா மிக உறுதியாக இருந்தார். எனது முரட்டுத் தனத்தை மனதில் கொண்டு அம்மா பிற்காலத்தில் என்னால் அப்படி ஒரு பிரச்சினை  வரலாம் என்று எதிர் பார்த்தார் போலும். மீண்டும் ஒருமுறை நம் குடும்பத்தில் சொத்துப் பிரச்சினை  வரக் கூடாது அதற்கு ஒருநாளும் நீ காரணமாக இருக்கக் கூடாது இது தான் நீ உன் தாய்க்கு செய்யும் கைம்மாறு என்று என் தாய் என்னிடம் கூறினார். இந்த நிகழ்ச்சி எனக்கு ஒரு பாடமாக இருந்தது. பூர்வீக வீடு விற்கப் பட்ட பொழுது கூட மறு பேச்சு பேசாமல் கையெழுத்து போட்டுக் கொடுத்தேன். அம்மாவிற்கு கொடுத்த வாக்கை காப்பாற்றினால் ஆண்டவன் எனக்கு வேண்டியதை கொடுப்பான் என உறுதியாக நம்பினேன். என் அம்மாவே இப்போது எனக்கு கடவுளாய் நின்று என்னை வழி நடத்தி செல்கிறார்.
 
"நான் விதியை ஆணித்தரமாக நம்புகிறேன். நமக்கு கிடைக்க வேண்டியதை யாராலும் தடுக்க முடியாது அதேபோல் நமக்கு என எழுதப் படாததை யாராலும் தர முடியாது"
 
எனது உயர்வும் எனது வாழ்க்கையும் என் கையில் மட்டுமே. எந்த ஒரு விஷயத்திற்கும் வாழ்க்கையில் பிறர் கையை எதிர்பார்க்கக் கூடாது என முடிவெடுத்தேன்.

ஒருமுறை பார்த்தவர்கள் ஆகட்டும், பலநாள் பழகியவர்கள்  ஆகட்டும் அம்மாவை பிடிக்காதவர்கள் என்று  யாருமே இருக்க முடியாது. அப்படி இருக்க என்னை அம்மாவின் எதிரியாக சிலர் சித்தரித்து என்னை அம்மாவிடம்  இருந்து பிரித்தனர். அவர்கள் செய்த அநாகரீகமான செயல்களை மறைத்து என்னையும் என் மனைவியையும் குற்றம் சொல்வதிலேயே குறியாய் இருந்தனர். அம்மாவும் யாருக்கு பரிந்து பேசுவது என புரியாமல் இருதலை கொல்லி எறும்பாக தவித்திருப்பார் என்று நினைக்கிறேன்.

அம்மாவிடம் இது குறித்து பேச நேர்ந்த பொழுது அவர்கள் எல்லாம் அப்படித்தான் இருப்பார்கள் உனக்கு வேண்டாம் என்றால் விலகி நில். யாரும் உன் தயவை எதிர் பார்க்கவில்லை என மூஞ்சியில் அடித்தது போல் கூறினார்.  நிதானமாக உட்கார்ந்து யோசித்த பொழுதுதான் அம்மா கூறிய வார்த்தையின் உள் அர்த்தம் எனக்கு சிறிது தாமதமாகவே விளங்கியது. உன் வாழ்க்கை உன் கையில். யாரையும் நம்பாதே! இந்த உலகம் சுயநலம் மிக்கது. நீ இருக்கியா நான் இருக்கேன் என்று இரு அதுதான் அனைவருக்கும் நல்லது என்ற உள் அர்த்தத்தை உணர்ந்தேன். எதிர்பார்ப்புகளே வாழ்க்கையில் விரக்திக்கு காரணம். உள்ளத்தில் பளிச் என ஒரு பல்பு மிக தாமதமாக எரிந்தது. பிற்காலத்தில் பல குடும்ப நிகழ்சிகளில் இது எனக்கு நிதர்சனமாக தெரிந்தது.

நான் எந்தக் காலத்திலும் எனது சுயமரியாதையை இழக்க விரும்ப வில்லை. இதுவும் எனக்கு என் தாய் கற்றுத் தந்த பாடம் தான். அதனால் என்னை திமிர் பிடித்தவன்முரடன் என்று பலர் பேசலாம், நினைக்கலாம். என் வாழ்கையை நான் விரும்பும் வகையில் வாழ எனக்கு உரிமை உண்டு என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இருந்தது இல்லை.

இன்னும் பேசுவேன்  

தாய் எனும் கோவில் (2)

தாய் எனும் கோவில் (2)
  
பெரியக்காவின் திருமணத்தின் பொழுது மாட்டு வண்டியில் விளையாடுகிறேன் என்று வண்டி குடை சாய்ந்து எனக்கு மூக்கில் அடிபட்டு ரத்தம். கல்யாண கலாட்டாவில் இது வேறு . ஒருமுறை தீபாவளி முடிந்து பீசாய் போன வெடிகளை எடுத்து அதன் மருந்தை சேகரித்து அதை கொளுத்தும் பொழுது எனது நெஞ்சில் ஒரு பெரிய தீக்காயம் பட்டது. பிறகு ஒருமுறை சைக்கிளை இரண்டு கையையும் விட்டு விட்டு ஓட்டி மண்ணைக்  கவ்வி முட்டி பேர்ந்தது. அம்மாசை குளத்தில் தாமரை காய் பறிக்க போய் சகதியில் மாட்டி தாமரைக் கொடி  காலெல்லாம் பின்னி கிழித்து கால் ரணகளமானது, பெரிய கோவில் குளத்தில் மதில் மேல் இருந்து குதித்து காலில் உடைந்த கண்ணாடி கிழித்தது. ஐந்தாம் வகுப்பு படிக்கும் பொழுது கதவிடுக்கில் இடது கை கட்டவிரல் மாட்டி விரல் நசுங்கியது. இது தவிர அவ்வப்போது எனக்கு வரும் ஜுரம், அம்மை, கழுத்தில் கழலை, கணை என்று உடல்நிலை சீர்கேடு நிறைய  வந்தது, இவ்வாறு அம்மாவிற்கு நிறைய கஷ்டங்களை கொடுத்துள்ளேன்.

என் அம்மாதான் எனக்கு கேடயம் (firewall). எனது தந்தையின் கோப அஸ்திரங்களில் இருந்து என்னை காப்பாற்றிய கேடயம். ஆனாலும் கண்மூடித்தனமாக எனக்கு பாதுகாப்பு கொடுத்தது இல்லை. கண்டிக்க வேண்டிய நேரத்தில் அடி கொடுக்க வேண்டிய நேரத்தில் அது சரியாக கிடைக்கும்.
இதை தவிர நான் ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் பொழுது எனக்கு மஞ்சள் காமாலை வந்தது. அப்போது இரவு 1 மணி 2 மணி என்று  அகாலத்தில் பேய்ப் பசி எடுக்கும். அம்மா அந்த நேரத்திலும் எழுந்து எனக்கு உணவு ஊட்டியது  என்றும் மறக்கக் கூடியது இல்லை.
எனக்கு சின்ன வயதில் நோயெதிர்ப்புச் சக்தி குறைவு. நோயெதிர்ப்பு சக்தி கூடுவதற்கு அம்மா என் மீது தனிக்  கவனம் எடுத்துக் கொண்டார். தினமும் கறந்த பசும் பால், கறந்த சூடு ஆறும் முன் எனக்கு  ஒரு கோப்பை கிடைக்கும். அதேபோல் அம்மா கையால் பிசைந்த பழைய சாதமும் அதற்கு தொட்டுக்கொள்ள கிடைக்கும்  மாவடு அல்லது மோர் மிளகாய் அல்லது ஆவக்காயை மறக்க முடியுமா பெரிய சம்சாரத்திலும் வருடம் முழுவதும் ஒவ்வொரு பண்டிகையும் வீட்டில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். சித்திரை மாதம் தொடங்கி பங்குனி வரை. தமிழ் புத்தாண்டு, சித்ரா பௌர்ணமி, வரலக்ஷ்மி நோன்பு, கிருஷ்ண ஜெயந்தி, ஆவணி அவிட்டம், தீபாவளி, கார்த்திகை, மார்கழி நோன்பு, பொங்கல் என எனக்கு தெரிந்து வருடம் முழுவதும் கொண்டாட்டம் தான்.  அம்மா முகம் சுளித்து நான் பார்த்ததில்லை. அம்மா தான் செய்யும் ஒவ்வொரு வேலையையும் மிகவும் சிரத்தையோடும் ஒரு அர்ப்பணிப்போடும் செய்வது தான் அவரது சிறப்பு.
 
மார்கழி மாதம் என்றால் வீட்டில் வைபவம்தான். அம்மா செய்யும் பொங்கல் எங்கள் தெருவில் இருந்த கிருஷ்ணன் கோவிலில் நைவேத்யம்  செய்யப்பட்ட பிறகே  நாங்கள் சாப்பிட முடியும். சில சமயம் எனக்குத் தோன்றும். சாமி என்ன சாப்பிடாமலா இருக்கிறது? அல்லது சாமிக்கு நாம் சாப்பாடு போடவில்லை என்றால் அது என்ன கண்ணையா  குத்தி விடும் என்று. ஒரு நாள் அம்மாவிடம் இதை கேட்டேன். அம்மா சொன்ன பதில் - இது  நாம் கடவுளுக்கு நன்றி பாராட்டும் செயல். அவன் நமக்கு தந்ததை அவனுக்கு காட்டுகிறோம். உண்ணச் சொல்லி கூறுகிறோம். குழந்தை தன் கையில் உள்ள சாக்லேட்டை அம்மாவுக்கு தரும். சாக்லேட் வாங்கித் தந்ததே அம்மாதான். ஆனாலும் குழந்தை  அம்மாவுக்கு தரும் பொழுது அம்மா என்ன அதை வாங்கியா சாப்பிடுகிறாள்? அது போலத்தான் என்றார். வாழ்வியல் தத்துவத்தை இதை விட எளிமையாக யாரால் விளக்க முடியும்.
 
பொங்கல் சமயத்தில் அம்மா செய்யும் குழம்பு மீந்து போனால் மறுநாள் அது எரித்த குழம்பாக உருமாறும். அம்மாவின் கை பட்ட அந்த குழம்புக்கு உள்ள ருசியே தனிதான். பழைய சாதத்துடன் எரித்த குழம்பு பேஷ் பேஷ்.எனக்கு சமையல் கற்றுக் கொடுத்தது எனது அம்மா தான். சமையல் மட்டும் அல்ல சிக்கனம், சேமிப்பு போன்றவையும் எனது தாயிடம் நான் கற்ற பாடங்கள், வாசலில் குச்சி ஐஸ் வந்தால் அம்மாவை கெஞ்சி வாங்கி தின்பேன். ஆனால் மாதத்திற்கு ஓரிரு முறை மட்டும் தான் கிடைக்கும். அடிக்கடி கேட்டால் அம்மா எப்பவாவது ஒருமுறை சாப்பிடலாம் குழந்தே, அடிக்கடி சாப்பிட  முடியுமா. நம்ம குடும்ப நிலைமைக்கு இதெல்லாம் கட்டுப்படி ஆகுமா? என்று வீண் செலவை குறைப்பதின் மதிப்பை எனக்கு உணர்த்தினார்..
 
அம்மா மருதாணி அரைக்கும் அழகே அழகுதான். பொறுமையாய் எனக்கும்  கை மற்றும் கால்களில் அம்மா மருதாணி இட்டு விடுவார்.
அம்மா மிகவும் தைரியசாலி. அம்மா பயந்து நான் பார்த்ததே இல்லை. இக்கட்டான நேரங்களில் அம்மா நிலைமையை சமாளிக்கும் அழகே தனி. அம்மாவின் பொறுமை நான் கண்டு வியந்த ஒன்று. அம்மாவிற்கு என்னை மிகவும் பிடிக்கும். நான் தவம் இருந்து பெற்ற பிள்ளை நீ என்று அம்மா பல சந்தர்பங்களில் கூறுவது உண்டு. எனக்கு நினைவு தெரிந்து அம்மாவுக்கு மன வருத்தம் ஏற்படுத்தும் விதமாக நான் நடந்து கொண்டதில்லை. சில சம்பவங்கள் சில சந்தர்ப்பங்கள் என்னை என் அம்மாவின் முன்னால்  குற்றவாளியாக நிறுத்தி இருக்கிறது. அதற்கு சில சந்தர்ப்பவாதிகளின் சதியே காரணம். நான் முன்பே சொன்னது போல கடைக் குட்டியாய் இருந்தது சில நேரங்களில் சாபமாக போனது. அம்மா கண்டிப்பாக அதை நம்பி இருக்க மாட்டார். ஆனாலும் அம்மா சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவித்திருப்பார் என்பது எனக்கு நன்கு தெரியும். ஒரு காலக்கட்டத்தில் அம்மாவால் என் மீது வைத்த பாசத்தைக்  கூட வெளிப்படையாக காட்ட இயலாத சூழல் இருந்தது என்பது எனக்கு நன்றாக புரிந்தது. நான் தனிமையில் இதை நினைத்து வருந்துவதை தவிர எனக்கு வேறு வடிகால் அமைய வில்லை.


மேலும் பேசுவோம்...

தாய் எனும் கோவில் (1)

தாய் எனும் கோவில் 

 எல்லோரையும் பற்றி  எழுதறே அப்பா...  நம்ம ருக்மணி பாட்டி பத்தி எழுத மாட்டியா? என் மகள் என்னைப் பார்த்துக் கேட்டாள்.  என் தாயை பற்றி எழுத எனக்கும் ஆசைதான். ஆனால்  ஒரு பக்கத்தில் முடிக்கும் விஷயம் இல்லையே. எனக்கு நினைவு  தெரிந்து என் தாயுடன் நான் இருந்த நாட்கள் மிக குறைவே. ஆனாலும் நமக்கு பிரியமான ஒருவருடன் இருக்கும் ஒவ்வொரு நொடியும் நமக்கு இனிமையானதாகவே இருக்கும். தாய் பற்றி பேசும் பொழுது நான் எனது மனம் திறந்து சில விஷயங்கள் பற்றி கூற வேண்டிய அவசியம் உண்டாகிறது.

என்னைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைத்திருந்தாலும் அவற்றை எல்லாம் புறம் தள்ள வேண்டிய நிர்பந்தம் எனக்கு பல சமயங்களில் இருந்திருக்கிறது. அந்த மாதிரி நேரங்களில் நான் எனது நிலையை எடுத்துக் கூற விரும்பினாலும் அது செவிடன் காதில் ஊதிய சங்காகி இருக்கும் என்பது எனக்கு நிதர்சனமாக தெரியும். ஆகவே அதுபோன்ற நேரங்களில் நான் மௌனம் காத்து எனது கிலேசத்தை மனதிற்குள் போட்டு புதைத்து இருக்கிறேன். எனக்கு அவமானங்களும் ஏமாற்றங்களும் புதிது அல்ல. சிறுவயதில் எனக்கு ஏற்பட்ட நிகழ்வுகள் பிற்காலத்தில் என்னை செப்பனிட உபயோகமாய் இருந்தது. பிறர் மனதை எந்தெந்த விஷயங்கள் புண்படுத்தும் என்பது எனது அனுபவத்தின் மூலம் அறிந்து கொள்ள எனக்கு கடவுள் கொடுத்த வாய்ப்பாக அவற்றை எடுத்துக் கொண்டேன். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக எனது கூட்டுக்குள் நான் முடங்கிப் போனேன். வீட்டின் கடைக் குட்டி என்பது வரமா சாபமா என்பது இன்று வரை எனக்கு புரியாத ஒரு புதிர் தான்.
 
எல்லாக் குழந்தைகள் போல எனக்கும் என் தாய்தான் இந்த உலகின் முதல் பரிச்சயம். பிற்காலத்தில் அம்மாவை விட்டு நிறைய விலகப்போகிறேன் என்ற காரணத்தாலோ என்னவோ ஆரம்ப காலத்தில் அம்மாவை விட்டு நான் விலகியதே இல்லை. விளையாடிக் கொண்டு இருக்கும் போதே அம்மா ஞாபகம் வந்து விட்டால் தண்ணி குடித்து விட்டு வருகிறேன் என்று கூறி வீட்டுக்கு செல்வேன். அம்மாவுக்கு தெரியும் நான் வந்த காரணம் என்ன என்று. பாட்டியிடம் சில நேரம் சொல்லி என்னை கேலி செய்வார்.

அம்மாவின் பிறந்தகம் பேரளம் அருகில் உள்ள கிள்ளியூர் ஆகும். எங்களுக்கு விடுமுறை கால பொழுது போக்கு என்பது கிள்ளியூர் செல்வது தான். எனக்கு தெரிந்து அம்மாவுக்கு மிகவும் பிடித்த விஷயங்கள் என்றல் அது கிள்ளியூர் மாரியம்மனை தரிசனம் செய்வது, மாயவரம் காவேரி ஸ்நானம், சேந்தங்குடி துர்க்கை கோயில் முதலியன. காவிரியில் அம்மா நீச்சல் அடிக்கும் அழகே தனிதான்.

சிலநேரம் அம்மா வெளியூர் செல்ல நேர்ந்தால் எனக்கு தெரியாமல் கொல்லை  வழியாக சென்று விடுவார். பலமுறை நான் மேல் சட்டைக்  கூட போடாமல் அழுதுகொண்டே அம்மா பின்னால் ஓடி இருக்கிறேன். ஒருமுறை எனது சகோதரி லதா என்னை பஸ்ஸில் ஏறவிடாமல் தடுத்த போது அவரை கீழே தள்ளிவிட்டுக் கூட போயிருக்கிறேன். சில வேளைகளில் அம்மா என்னை சமாதானம் செய்துவிட்டு வெளியூர் செல்ல நேரும். அந்த மாதிரி தருணங்களில் அம்மாவின் ஒன்பது கஜ புடவை தான் எனக்கு துணை. வீடு நிறைய மனிதர்கள் இருந்தாலும் அம்மா இல்லை என்றால் அந்த வீடு எனக்கு வெறிச்சோடி இருக்கும். அந்த அம்மாவை விட்டு நான் சிறு வயதிலேயே பிரிந்து செல்ல நேரும் என்று அப்போது நான் நினைத்ததில்லை.

தகவல் பாதுகாப்பு கருத்தரங்குகளில் (Information Security Seminar) பேசும் போது நான் எப்போதும் கூறும் உதாரணம் ஒன்று உண்டு. இணையத்தில் நிறைய பயன்பாடுகள் (utilities) / கருவிகள் (tools) இலவசமாகக் கிடைக்கின்றன. அவை எல்லாம் உண்மையில் இலவசமா என்று பார்த்தால் இல்லை என்றே கூறலாம். ஒன்று அவற்றின் பயன்பாட்டை நம் மூலம் சோதிக்கின்றனர் அல்லது நமக்கு தெரியாமல் ஏதாவது  ட்ரோஜன் அல்லது தீங்கிழைக்கும் குறியீடுகள் (malicious codes) பதிவிறக்கம் (டவுன்லோட்) செய்யப்படுகிறது  அல்லது விளம்பர உத்தியாக இருக்கும் என்று அர்த்தம். உலகில் எதிர்பார்ப்பு இல்லாமல் இலவசமாக கிடைக்கும் ஒரே வஸ்து தாயன்பு தான். இதை நான் நன்றாகவே உணர்ந்திருக்கிறேன் ஆகையால் இணையத்தில் பாதுகாப்பு முறை பற்றி பேசும் பொழுது தாயன்பு பற்றி உதாரணம் சொல்வது மிகச் சரியான செய்தியாக இருக்கும் என்பது எனது எண்ணம்.

உலகில் தாயைப்  போல நம் மீது அக்கறை உள்ளவர்கள் யாரும் இருக்க முடியாது. பவித்ரா படத்தில் கவிப் பேரரசின் வரிகள் இங்கு எனக்கு நினைவுக்கு வருகிறது :

"விண்ணை படைத்தான் மண்ணை படைத்தான் 
காற்றும் மழையும் ஒளியும் படைத்தான் 
பூமிக்கு அதனால் நிம்மதி இல்லை 
சாமி தவித்தான் .... சாமி தவித்தான் ....
தாயைப்  படைத்தான் ...."

உன்னிக்ருஷ்ணனின் குரல், இசைப்புயலின் இசை, கவிபேரரசின் வைர வரிகள் ...... கல் மனதையும் கரைய வைக்கும் கண்களை பனிக்க வைக்கும். தாயை நேசிக்கும் ஒவ்வொருவரும் கேட்க வேண்டிய ஓர் பாடல்.

அம்மாவின் வார்த்தைகளே எனக்கு வேதம். அம்மா எனக்கு சிறு வயதில் கூறிய அறிவுரைகள் என் மனதில் பசுமரத்து ஆணிபோல் பதிந்தன. இன்றும் அவற்றை கடை பிடித்து வருகிறேன்.

அம்மாவுக்கு பிடித்தது எல்லாம் எனக்கும் பிடித்திருந்தது. என்னை பற்றி/ என் எதிர் காலம் பற்றி என் பெற்றோருக்கு என்ன சந்தேகம் வந்ததோ தெரியவில்லை, என்னை பத்தாம் வகுப்பு முடித்த பிறகு மேலே படிக்க சென்னைக்கு அனுப்பினர். இரண்டும் கெட்டான் வயதில் அடுத்தவர் வீட்டில் தன் பிள்ளை நன்றாய் இருப்பான் என அவர்கள் நினைத்தது சரியா தவறா என்பது எனக்கு தெரியவில்லை. இளமையில் நான் இழந்த சின்ன சின்ன சந்தோஷங்களை நான் இன்று குழந்தைகளுடன் கொண்டாடி மகிழ்கிறேன். அருண் ஆனந்த் முதல் அனிக்கா வரை அவர்களில் நான் என்னைப் பார்க்கிறேன், என் குழந்தை பருவத்தைப் பார்க்கிறேன்.
 
"நேற்றை மற,  நாளையை  நினையாதே, இன்றைக்காக வாழ் " இதுதான் என் தாயிடம் நான் கற்ற வாழ்வியல் பாடம்.
 
சென்னையில் சகோதரிகள் வீட்டில் ராஜ வாழ்க்கைதான் என்றாலும் அம்மாவின் இடத்தை யாரால் நிரப்ப முடியும்? இதை பற்றி நான் ஒரு முறை பேச நேர்ந்த பொழுது அது திரிக்கப்பட்டு வேறு விதமாக பேசப் பட்டது. என் சகோதரிகட்கு அது மன வருத்தம் தந்தது என்று கேள்விப் பட்டேன். ஏழை சொல் அம்பலம் ஏறாது என்பது தெரிந்து நான் மௌனம் காத்தேன்.

நான் கைக் குழந்தையாய் இருந்த காலம் தொட்டு கர்நாடக சங்கீதம் கேட்க்கும் பாக்கியம் எனக்கு கிட்டியது. எனது சகோதரிகள் திரு ராமலிங்கம் என்னும் நாதஸ்வர வித்வான் இடம் சங்கீதம் பயின்றனர். கேள்வி ஞானத்தில் ஓரளவு சங்கீதம் பயின்றேன். எனது தாய்  மிக அருமையாக பாடக் கூடியவர். அம்மா பாடும் கல்யாண பாடல்களும், நலங்கு மற்றும் ஓடப் பாடல்களும் எங்கள் குடும்பத்தில் மிக பிரசித்தம். 85 வயதில் எங்கள் வினோத் திருமணத்தில் அம்மா பாடிய போஜனம் செய்ய வாருங்கள் இன்னும் என் மனக்கண் விட்டு அகலவில்லை.

சின்ன வயதில் இருந்து எனக்கு உடம்பு படுத்திக் கொண்டே இருக்கும். அந்த நேரங்களில் அம்மாவின் அன்பு ஒன்று மட்டுமே என்னை மீட்டு வந்தது என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. சில தருணங்களை இங்கு குறிப்பிட ஆசைப் படுகிறேன்.
 
மனது சிறிது கனமாக இருக்கிறது. மீண்டு வந்து மீண்டும் சொல்கிறேன்......
 

Sunday, 12 January 2014

நா.ச.சு.ம (2)




என் செல்லம்மா பாட்டி ....
 

பெயருக்கு ஏற்றார் போல் ரொம்ப செல்லமான பாட்டி. என் அப்பாவின் தாயார். வீட்டுக்கு நான் கடைக் குட்டி என்பதால் எனக்கு செல்லம் அதிகம். பாட்டி பற்றி சொல்ல வேண்டும் என்றால் அன்பு எவ்வளவு கொடுத்தாரோ அதே போல் கண்டிப்பும் நிறைந்தவர். தாத்தா பாட்டி உறவு அரிதாகி கொண்டு வரும் இந்த கால கட்டத்தில் நாங்கள் எல்லாம் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். எங்களை வழி நடத்தி செல்ல பெரியவர்கள் வீட்டில் இருந்தனர். பாட்டி நிறைய கதைகள் சொல்லுவார். பாட்டியின் சாகச கதைகள் தான் எங்களுக்கு சின்ன வயசில் பெரிய பொழுது போக்கு.
 
பாட்டியின் பிடிவாதம் கண்டிப்பு பற்றி எனது சகோதரிகளும் தாயும் சொல்ல நிறைய கேள்விப்பட்டிருந்தாலும் நான் கண்டது பாட்டியின் சாந்த முகம் மட்டும் தான்.  பாட்டி மிகவும் சுறுசுறுப்பானவர். 90 வயதிலும் பாட்டியின் சுறுசுறுப்பு அசர வைக்கும். எங்கள் வீட்டில் பாட்டிதான் ராணி. பாட்டி வைத்ததுதான் சட்டம். பாட்டியின் பேச்சுக்கு மறு பேச்சு என்பதே இல்லை. செல்லம்மா பாட்டி எனது அம்மாவிற்கு பெரிய பக்க பலமாக இருந்ததாக எனது அம்மா அடிக்கடி சொல்லி சிலாகிப்பது உண்டு. தாத்தாவின் மறைவிற்கு பிறகு ஒற்றை மனுஷியாக இருந்து எனது அப்பாவையும் பெரியப்பாவையும் வளர்த்து ஆளாக்கிய பாட்டி எனக்கு ஒரு அவதார புருஷியாகவே தோன்றுவார்.
 
ஒற்றை மனுஷியாக வீட்டையும் நிர்வாகம் செய்து, வயல் வரப்பையும் பார்த்துக்கொண்டு, மாடு கன்றுகளை சமாளித்து அவரது திறமைக்கு அளவில்லை. எனது பாட்டியின் திறமைக்கு அவர் பல மேலாண்மை சான்றிதழ்களுக்கு (MBA degrees) தகுதியானவர்.

பாட்டி ஓலை விற்ற காசு, மட்டை விற்ற காசு புடவை தலைப்பில் எப்போதும் முடிந்து வைத்திருப்பார். எங்கள் இளவயது கால கட்டத்தில் கைப் பணம் (pocket money) கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது.  பாட்டியை தாஜா பண்ணி நானும் எனது சகோதரி உஷாவும் அவ்வப்போது பாட்டியிடம் 5 பைசா 10 பைசா பெறுவது உண்டு. அந்த கால கட்டத்தில் 5 மற்றும் 10 பைசாக்கள் என்பது எங்களுக்குப் பெரிய கைப் பணம்.

பாட்டியின் மேலாண்மை திறமைக்கு மற்றொரு எடுத்துக்காட்டு குடும்ப நிர்வாக அதிகாரத்தை  சரியான நேரத்தில் இளைய தலைமுறையின் கையில் கொடுத்தது. வீட்டை நிர்வகிக்கும் பொறுப்பு என் தாய் வசம் கொடுக்கப் பட்டாலும் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் என் பாட்டியின் கையில் இருந்தது. ஒரு தலைமை நிர்வாக அதிகாரிக்கு (CEO) உண்டான அனைத்து தகுதிகளும் அவருக்கு இருந்தது. இத்தனைக்கும் பாட்டி பெரிய படிப்பெல்லாம் படித்ததில்லை. எல்லாம் வாழ்கைப் பாடம் தான்.

எங்கள் பாட்டி ஒரு பட்டம் பெறாத ஆனால்  கை தேர்ந்த மகப்பேறு மற்றும் குழந்தை நல மருத்துவர். எனது தாயின் அனைத்து பிரசவங்களும் கிராம செவிலியைக் கொண்டு எனது பாட்டியின் மேற்பார்வையில்தான் நடந்ததாம். எல்லாமே சுகப் பிரசவங்கள் தான்.

நான் பிறந்தது கார்த்திகை மாதம். ஒரு அடைமழை நாள். நான்கு கூடல் வாயும் ஒன்றாய் கொட்டியது என்று உவமானம் கூறுவார். கூடல்வாய் என்பது வீட்டு முற்றத்தில் நான்கு மூலையிலும் மழை நீர் வெளியேற அமைக்க பட்டது. மழை அதிகமாக பெய்யும் பொழுது அருவி போல் கூடல்வாய் வழியாக நீர் கொட்டும். செவ்வகமான முற்றத்தில் நான்கு கூடல்வாயும் ஒன்றாக கொட்டியது என்றால் மழையின் தீவிரத்தை கற்பனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள்.  நான் பிறந்தவுடன் கூடல் வாய் நீரில் பாட்டி என்னை குளிப்பாட்டினாராம். பாட்டியின் இந்த செயலுக்கு தர்க்க ரீதியான காரணம் எனக்கு புரியவில்லை என்றாலும் பாட்டியின் அந்த தைரியத்தைப் பாராட்ட வேண்டும். 

குழந்தைகள் நலம் காப்பதில் பாட்டிக்கு நிகர் யாரும் இல்லை. எல்லாமே கை வைத்தியம் தான். வீட்டின் கொல்லையில் அனைத்து மூலிகைகளும் இருக்கும். எந்த விதமான உடல் சுகவீனம் என்றாலும் அதற்கு மூலிகை மருந்துதான். வாரம் ஒருமுறை எண்ணைக் குளியல். மாதம் ஒரு முறை வயிற்றுக்கு விளக்கெண்ணை என எங்களுக்கு நிரந்தர நோய் எதிர்ப்புச் சக்தியை கொடுத்தவர்.

சின்ன சின்ன வேளைகளில் எங்களை ஈடுபடுத்தி எங்களை அறியாமல் எங்கள் கடமையை எங்களுக்கு உணர்த்தியவர். கடைசிக் காலத்தில் பாட்டி படுத்த படுக்கையாய் போனது எங்களுக்கெல்லாம் அதிர்ச்சி. கொல்லைப் புறத்தில் வழுக்கி விழுந்ததில் பாட்டிக்கு பக்க வாதம் வந்தது. இந்த கால கட்டத்தில் 
பாட்டிக்கு சின்னச் சின்ன பணிவிடைகள் செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்தது.

90 வயதுக்கு பிறகு கூட பாட்டி ஆரோக்யமாக இருந்ததற்கு காரணம் அவர்களது முறையான வாழ்வியல் சித்தாந்தங்களால் தான் என்பது நிதர்சனமான உண்மை. நம் முன்னோர்கள் விட்டு சென்ற நல்ல பழக்க வழக்கங்களை பின் பற்றி நம் வாழ்கையையும் நெறி படுத்திக்கொள்வோம். 

மீண்டும் பேசுவோம் 
 

நான் சந்தித்த சுவாரஸ்யமான மனிதர்கள் (1)

சேதுராமன் சார் 

வலைப் பதிவில் சுவாரஸ்யமான மனிதர்கள் பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றிய உடன் எங்கு ஆரம்பிப்பது என்ற குழப்பம் உண்டானது. நிறைய முகங்கள் மனத் திரையில் தோன்றி மறைந்தன. ஏறு வரிசையில் செல்வதா அல்லது இறங்கு வரிசையில் செல்வதா என்ற சிறிது நேர அலை பாய்தலுக்கு பிறகு ஏறு வரிசை என முடிவானது. அதாவது எனது இளவயது முதல் ஆரம்பிக்கிறேன்.
 
நான் முதன்முதல் பள்ளிக்கு சென்ற நாள் எனக்கு நினைவு உள்ளது. அப்போதேல்லாம் 5 வயதிற்கு தான் பள்ளிக்கு அனுப்புவார்கள். இப்போது போல 2-1/2 வயதிலேயே பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு பெற்றோர் அவரது எதிர்காலம் பற்றி பயப்படும் நிலைமை அப்போது இல்லை. ஆனாலும் எனது குறும்புகளும் கொட்டங்களும் தாங்காமல் எனது அப்பா என்னை 4-1/2 வயதில் பள்ளிக்கு அனுப்பினார். 1970இல் விஜய தசமி அன்று பழம் பாக்கு வெற்றிலை தட்டோடு எனக்கு புதுத் துணி உடுத்தி என்னை பள்ளியில் சேர்க்க எனது தந்தையார் அழைத்து சென்றது இப்போதும் எனக்கு பசுமையாக நினைவில் உள்ளது.  அப்போது பள்ளியில் ஆசிரியராக திரு சேதுராமன் அவர்கள் இருந்தார். என்னை  அவர் முன் கொண்டு எனது தந்தையார் நிறுத்தினார். திரு சேதுராமன் அவர்கள் எனது தந்தைக்கு நெருங்கிய நண்பர். எங்கள் குடும்ப நண்பரும் கூட. என்னை பார்த்த அவர் தலை மேலாக கையை தூக்கி மறுபுறம் உள்ள காதை தொடச்  சொன்னார். கைக்கு காது எட்டினால் பள்ளி செல்லும் வயது வந்து விட்டது என்று கணக்காம். அப்போதெல்லாம் பிறப்பு இறப்பு சான்றிதழ் நடை முறையில் இல்லை.
 
எனது கை காதுக்கு எட்டியதால் நானும் பள்ளியில் சேர்க்கப்பட்டேன். எங்கள் வீட்டில் இருந்து மூன்றாவது வீட்டில் தான் எங்களது பள்ளி இயங்கிக் கொண்டிருந்தது. நானோ மிகுந்த  அம்மா செல்லம். அம்மாவை விட்டு அங்கு இங்கு போக மாட்டேன். பள்ளி அரை நேரம் என்றாலும் அவ்வளவு நேரம் அம்மாவை விட்டு பிரிவது என்பது எனக்கு ஆகாத காரியம். அவ்வப்போது ஒற்றை விரலை காண்பித்து விட்டு பள்ளியின் கொல்லை  வழியாக எங்கள் வீட்டிற்கு சென்று விடுவேன். என் அம்மா என்னை இழுத்து கொண்டு வந்து பள்ளியில் விட்டு விட்டு செல்வார்.
 
சில நேரம் திரு சேதுராமன் அவர்கள் என்னை என் வீட்டிற்கு மோரோ அல்லது காபியோ வாங்கி வர சொல்லி அனுப்புவார். அதை சாக்கு வைத்து வீட்டுக்கு ஓரிரு முறை சென்று வரும் வாய்ப்பு கிட்டும்.
 
எனது முதல் ஆசான் என்ற முறையில் திரு சேதுராமன் அவர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதையும் மதிப்பும் உண்டு. பிற்காலத்தில் அவரது புதல்வர் திரு ராஜு எனது அக்காவின் கணவரானது எனக்கு அவரது கடைசி காலம் வரையில் அவருடன் தொடர்பில் இருக்கும் பெரும் பாக்கியத்தை அளித்தது.
 
சார் பற்றி சொல்ல வேண்டும் என்றால் அவருக்கு எனது தாயார் உடன் பிறவா சகோதரி போல. எங்களை அவர் தனது பிள்ளைகள் போலவே பாவித்தார். கடின உழைப்பாளி. நல்ல மனிதர். தன்னலம் இல்லாதவர். எங்கள் குடும்பத்தில் ஒரு மூத்த உறுப்பினாராகவே எனது பெற்றோரால் பாவிக்கப் பட்டவர்.  அவரைப் போன்ற மேன் மக்களின் தொடர்பு என்பது இன்றைய காலக் கட்டத்தில் அரிது.
 
அந்த காலத்தில் அவர் எங்கள் ஊருக்கு அருகில் உள்ள சிறுபுலியூர் மற்றும் பேரளத்தில் டியூஷன் எடுக்க செல்வார். இரவு திரும்பும் போது  தினமும் எங்களுக்கு வறுத்த வேர் கடலை வாங்கி வருவார்.  வேர் கடலை என சொல்ல தெரியாமல் டகலடொக்க என நான் கூறுவேணாம். ஒரு சில நாட்களில் அவர் வர நேரம் ஆனால் வேர் கடலைக்காக நாங்கள் தூங்காமல் காத்திருந்ததும் உண்டு. எவ்வளவு நேரம் ஆனாலும் கதவை தட்டி டகல டொக்க கொடுக்காமல் அவர் சென்றது இல்லை. பல வருடங்கள் இது தொடர் நிகழ்ச்சியாக நடந்தது.
 
குழந்தைகள் மேல் அவருக்கு அலாதி பிரியம். எங்களுக்கு நிறைய கதைகள் சொல்வார். அதில் அவர் சந்தித்த நிகழ்வுகள், சம்பவங்களும் அடங்கும். அந்த கால கட்டத்தில் கிராமங்களில் பேய் நடமாட்டம் என்பது மிகவும் சாதாரணமான ஒன்று. அவர் ஒரு முறை மோகினி பேயின் வசமிருந்து தப்பித்து வந்த கதை இன்றும் என்னால் மறக்க முடிவதில்லை.
 
எனது முதல் ஆசானுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
 

Sunday, 5 January 2014

எனக்கு தமிழூட்டிய ஆசான்கள் (2)




திரு தி. இராமலிங்கம்

திரு திஇரா அவர்கள் தமிழ் கற்பிக்கும் முறையே தனி. சிரிக்க சிரிக்க பாடம் நடத்துவார். அதே சமயம் மிகவும் கண்டிப்பானவர். தமிழ் இலக்கணம் அவரிடம் பயின்றால் பிறகு பரீட்சைக்கு படிக்க வேண்டிய அவசியமே இல்லை. கேள்வித்தாளை பார்த்தவுடன் தி-இரா அவர்களின் முகமும் அவர் பாடம் நடத்திய விதமும் அவர் மேற்கோள் காட்டிய உதாரணங்களும் நம் மனக்கண் முன்னே விரியும் .

முழுவதும் தமிழிலேயே பாடங்கள் நடத்துவார். எங்களுடன் உரையாடும் பொழுது கூட ஆங்கில வார்த்தை வராது.  அவரை அய்யா என்றே நாங்கள் அழைக்க வேண்டும். சில சமயங்களில் வாய் தவறி அவரை சார் என்று அழைத்து விட்டால் அவர் செய்யும் கிண்டலும் கேலியும் மறு முறை அவரை அவ்விதம் அழைக்க தோன்றாது . எனக்கு தமிழ்பால் ஊட்டி தமிழ்பால் எனக்கு பற்று வர தி-இரா அய்யாவும் ஒரு காரணம். அவரது தாக்கம் தான் என்னை இந்த வலைப் பதிவை முழுவதும் தமிழிலேயே தர தூண்டுகோலாய் அமைந்தது.

உவம உருபுகள் பற்றி ஒரு முறை அவர் என்னை பாடலாக படிக்க சொன்னது இன்றும் என் நினைவில் உள்ளது.
"போல அன்ன ஒப்ப புரைய மான கடுப இயைப ஏற்ப நேர நிகர அன்ன இன்ன என்பவும் பிறவும் உவமத்துருபே"

அதேபோல் ஒரு செய்யுள்... நளன் தமயந்தி என்று நினைக்கிறேன்..
பனியால் நனைந்தும் வெயிலால் உலர்ந்தும் பசியால் அலைந்தும் உலவா 
அநியாய வெங்கை அரவால் இறந்த அதிபாவம் என்கொல் அறியேன் 
தனியே கிடந்து விட நோய் செறிந்து தரைமேல் உருண்ட மகனே 
இனி யாரை நம்பி உயிர் வாழ்வோம் எந்தன் இறையோனும் நானும் அவமே ....

இந்த செய்யுளை அவர் உணர்ச்சி ததும்ப எங்களுக்கு நடத்திய போது எங்கள் கண்ணில் நீர் கசிந்தது இன்றும் என்னால் மறக்க முடியவில்லை.

அடுத்து திருஅருட்பா போட்டி பற்றி இங்கு சொல்ல நான் கடமை பட்டிருக்கிறேன்.

ஒவ்வொரு ஆண்டும் பள்ளியில் நடக்கும் இசை போட்டியில் எனக்கு நிச்சயம் ஒரு பரிசு உண்டு. எனது திறமையை ஊக்குவிக்கும் பொருட்டு மாவட்ட அளவில் நடந்த திருஅருட்பா போட்டி நடந்தது. என்னை போல் சில நேரம் என்னை விட நன்கு பாடக்கூடிய மாணவிகள் இருக்க போட்டிக்கு எனது பெயரை பள்ளியின் சார்பாக அவர் முன் மொழிந்தார்.

எனக்கோ சிறிது பயமாக போய்விட்டது. என்னை ஊக்குவித்து என்னை சிறப்பாக பாட வைத்த பெருமை அவரையே சாரும். எனக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு வாங்கி தந்த பாடல் இதுதான்.

"ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும் 
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் 
பெருமையுடன் நினது திருப் புகழ் பேச வேண்டும் 
பொய்மை பேசாதிருக்க வேண்டும் 
பெரு நெறி பிடித்தொழுக வேண்டும் 
மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும் 
மருவு பெண்ணாசையை மறக்க வேண்டும் 
உன்னை மறவாதிருக்க வேண்டும் 
மதி வேண்டும் நின் கருணை நிதி வேண்டும் 
நோயற்ற வாழ்வை நான் வாழ வேண்டும் 
தரும மிகு சென்னையில் கந்த கோட்டத்தில் வளர் தலமோங்கு கந்தவேலே!
சண்முக துய்ய மணி இன்முக செய்வ மணி ஷண்முக துய்ய மணியே!"

அவர் எனக்கு கற்பித்த விதம் என்னை மிக இலகுவாக போட்டியில் பாட வைத்ததும் அல்லாமல் எனக்கு மாவட்ட அளவில் முதல் பரிசும் பெற்று தந்தது என்னால் மறக்க இயலாத ஒன்று.
 
அவர் கூறும் மேற்கோள்கள் மிகவும் விசித்திரமானவை. அந்தந்த  கால கட்டத்தில் வந்த தமிழ் திரைப்பட வசனங்களை மேற்கோள் காட்டி பேசுவார். எல்லா படங்களும் பார்த்துவிடுவார். இப்படி அவர் நடத்தும் பாடங்கள் மாணவர்கள் மனதில் பசுமரத்து ஆணி போல பதிந்து விடும்.

நாங்கள் பத்தாவது படிக்கும் பொழுது பொது தேர்வுக்கு முன்பு மாணவர் மன்றம் நடத்தும் தமிழ் தேர்வு நடக்கும். திரு தி-இரா அய்யாவின் மாணவனாக நான் மாணவர் மன்ற தமிழ் தேர்வில் மாவட்டத்தில் முதல் மாணவனாக 91 மதிப்பெண் எடுத்து அவருக்கு சமர்பித்தேன்.

20 ஆண்டுகள் கழித்து எனது பெற்றோரின் சதாபிஷேக (80 வயது) நிகழ்ச்சிக்கு அவர் வந்த பொழுது இதை என் மனைவியிடம் நினைவு கூர்ந்தார்.

மேன்மக்கள் மேன்மக்கள் தான் என்பதற்கு அவர் ஒரு சிறந்த உதாரணம்.

திரு சடாக்ஷரம் மற்றும் திரு தி-இரா அய்யா இருவருக்கும் எனது சிரம்தாழ்த வணக்கங்கள்.
 

Thursday, 2 January 2014

எனக்கு தமிழூட்டிய ஆசான்கள் (1)

திரு சடாக்ஷரம் 

எனக்கு தமிழ் மீது பற்று ஏற்பட காரணமாக இருந்த இரு பெரும் தமிழ் ஆசான்கள் திரு சடாக்ஷரம் மற்றும் "திஇரா" எனப்படும் திரு தி. ராமலிங்கம். மங்கை நல்லூர் கே எஸ் ஓ உயர் நிலை பள்ளியில் இருவரும் எனக்கு ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு தமிழ் ஆசிரியர்கள்.

திரு சடாக்ஷரம் அவர்கள் எளிய மனிதர். நகைச் சுவை உணர்வு மிக்கவர். சிலேடை பேசுவதில் வல்லவர். தமிழில் மிகுந்த பற்று உள்ளவர். பள்ளியின் ஆண்டு விழாக்களில் சரித்திர நாடகங்கள் போடுவோம். ஒவ்வொரு ஆண்டும் ஓர் நாடகம் அதற்கு இவர் தான் திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதுவார். எனக்கு இருந்த கொஞ்சம் இசை திறமை என்னை அவர் அணியில் சேர்த்துக்கொள்ள உதவி செய்தது. பள்ளி நாடகங்களில் பின்னணி பாட எனக்கு அவர் பலமுறை வாய்ப்பு அளித்தார்.

1979ஆம் ஆண்டு. பள்ளி ஆண்டு விழாவில் திருப்பூர் குமரன் (கொடி காத்த குமரன்) நாடகம் போட்டோம். அது ஒரு இசை நாடகமாக அமைந்தது.  இன்றும் அந்த நாடகத்தின் பாடல் வரிகள் சில நேரங்களில் என்னையும் அறியாமல் நான் பாடுவது உண்டு. இந்த வலை பதிவை வாசிக்கும் உங்களுக்காக அந்த வரிகள் இதோ:

கதை களம் இதுதான். சுதந்திர போராட்ட வீரர்கள் கொடிகாத்த குமரனின் தலைமையில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து ஊர்வலம் போகின்றனர். சாதாரணமாக இது போன்ற ஒரு சூழ்நிலையில் வீர வசனங்கள் பேசப்படும். திரு சடக்ஷரம் அவர்கள் இதற்கு ஒரு இசைக்  கோலம் போட்டார்.

பிரிட்டிஷ் சிப்பாய்

ஊர்வலம் செல்ல வேண்டாம் எங்கள் உத்தரவை மீறி சென்றால் மரணம் தான். ஊர்வலம் செல்ல வேண்டாம்.
வந்தே மாதரம் என்றே நீங்கள் வாய் கிழிய கத்தி என்ன பயன் கண்டீர் கட்டளை கேட்டிடுவீர் உமக்கு காசு பணம் பட்டம் கனமாக தருகிறோம் - கட்டளை கேட்டுடுவீர்

கொடிகாத்த குமரன்

பட்டம் பணம் எல்லாம் எங்களுக்(கு ஏ )ண்டா ஒங்க கொட்டம் அடக்கியே ஒட்டிடுவோண்டா 
கத்தி ரத்தம் இல்லாம கட்டுப்பாடா சேர்ந்து வந்து மொத்தமாக எதிர்த்து நிப்போம் வெள்ளைய ராஜா 
நீயும் மூட்டை கட்டி ஓட வேண்டும் இல்லையா ராஜா 
பட்டம் பணம் எல்லாம் எங்களுக்(கு ஏ )ண்டா ஒங்க கொட்டம் அடக்கியே ஒட்டிடுவோண்டா போடா போடா போ ......

திரு சடாக்ஷரம் அவர்களின் எளிய தமிழ் நடை எனக்கு கவிதை எழுத ஒரு ஊக்கம் கொடுத்தது.

திரு திஇரா அவர்கள் பற்றி பிறகு பேசுகிறேன்.

 

Wednesday, 1 January 2014

நினைவலைகள்

1998

எனது அம்மாஞ்சி (மாமா மகன்) ஸ்ரீகாந்த் விஸ்வநாதனுக்கு நன்றி.
இந்த படம் 1988 இல் எனது சகோதரி ஹேமாவின் திருமணத்தின் பொழுது எடுக்கப்பட்டது. இடம் கணேஷ் மண்டலி கல்யாண மண்டபம், நங்கநல்லூர், சென்னை 
நிற்பது  : (இடமிருந்து வலம்) விஸ்வேஸ்வரன் கௌரிஷங்கர், ரம்யா ஆனந்த், கோகுல் ஸ்ரீனிவாசன், மீனா கார்த்திக்,
நடுவில் நான் (ஸ்ரீ முகி)
என் மடியில் கோபமாய் இருப்பது கார்த்திக் லக்ஷ்மினரயணன் - சிரிப்பது வினோத் பாலசுப்ரமணியன்