Friday 18 April 2014

ப் பூ! இவ்வளவுதானா?


பல விஷயங்களை நாம் மிகச் சிக்கலானவை என்று நினைத்து ஒதுங்குகிறோம்; அல்லது மிகத் தீவிரமாக அதில் இறங்கி முட்டி மோதுகிறோம். ஆனால் அடிப்படையில் எல்லா விஷயங்களுமே எளிமையானவைதான்.

நாம்தான் பெரிய விஷயம்.. நமக்குப் புரியாது.. பெரிய அறிவுஜீவிகளால்தான் புரிந்துகொள்ள முடியும்..என்றெல்லாம் மனத்தடைகளை ஏற்படுத்திக்கொள்கிறோம்.

பாடங்களும் அதுபோன்றதே. வேதியியலின் சிக்கலான சமன்பாடுகளாக இருக்கட்டும், கணிதத்தின் சூத்திரங்களாகட்டும்.. எல்லாவற்றுக்கும் அடிப்படை எளிமையாகத்தான் இருக்கும். ஓரிரு வரிகளில் அதை சுருக்கமாக விளக்க முடியும். அந்த அடிப்படையைப் புரிந்துகொள்ளாமல் எவ்வளவு நேரம் சிரமப்பட்டுப் படித்தாலும் பயனில்லை.

திரையுலகில் ஒன்லைன்என்ற வார்த்தை மிகப் பிரபலம். எவ்வளவு பெரிய வெற்றிப் படமாக இருந்தாலும் அதன் சாரத்தை அழகாக ஒரு வரியில் சொல்லிவிட முடியும் என்பார்கள்.

அடிப்படையைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் நிறைய கேள்வி கேட்க வேண்டும். குழந்தைகளைப் பாருங்கள். அவர்கள் எந்த விஷயத்தையும் இது நமக்குப் புரியாதுஎன்று ஒதுக்குவதில்லை. எல்லா இலையும் ஏன் பச்சையா இருக்கு?' என்பார்கள். எறும்புக்கு ஜுரம் வந்தா எப்படி ரத்தப் பரிசோதனை பண்ணுவாங்க? என்பார்கள். இப்படி எதைப் பற்றி வேண்டுமானாலும் கேட்பார்கள். அவர்கள் கேள்வி கேட்க கூச்சப்படுவதில்லை.

இதுகூடத் தெரியாதாஎன்று யாராவது கிண்டல் செய்வார்களோ என்ற கூச்சத்தினாலேயே பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளாமல் விடுகிறோம். அது தவறு. குழந்தைகளைப் பார்த்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் இது.. எந்த சந்தேகத்தைக் கேட்பதற்கும் கூச்சப்படக்கூடாது, தயங்கக்கூடாது.

கல்வி என்பது வெறும் மனப்பாடம் செய்வதல்ல. அது நம்மைச் சுற்றி இருக்கும் உலகை இன்னும் கொஞ்சம் சிறப்பாகப் புரிந்துகொள்ள உதவ வேண்டும். அறிவியல் மேதை ஐன்ஸ்டைன் ஒருமுறை சொன்னார் - உங்களால் ஒரு விஷயத்தை எளிமையாக விளக்க முடியவில்லை என்றால் அது உங்களுக்கே புரிய வில்லை என்று அர்த்தம்”.

 

No comments:

Post a Comment

உங்கள் விமர்சனம்/ கருத்துக்கள் அளித்து எனக்கு ஊக்கம் அளிக்க வேண்டுகிறேன்